கடவுளின் அருளைப் பெற்றவர்களா நாம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


God's Mercy

திருவருகைக் காலத்தின் நான்காம் புதன் - I. மலா: 3:1-4;4:5-6; II. திபா: 25:4-5.8-9.10,14; III. லூக்: 1:57-66

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நெடுநாளாக இல்லை. ஆனால் அவர்கள் மனம் தளராமல் கடவுள் தங்களுக்கு நிச்சயம் கொடுப்பார் என நம்பினர். இவர்களைப் பார்த்த மற்ற நபர்கள் "இவர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்" என்று வசைமொழியால் மனதை நோகச் செய்தனர். இருந்தபோதிலும் இந்த தம்பதியினர் நிச்சயம் கடவுள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு தங்கள் வாழ்வை சிறப்பாக வாழ்ந்தனர். ஒவ்வொரு நாளும் இறைவேண்டலிலும் உணவு பழக்க வழக்கத்திலும் கவனம் செலுத்தினர். இறுதியில் கடவுளின் அருளால் குழந்தை பாக்கியத்தை பெற்றனர். இதைக் கண்ட இவர்களை  விமர்சித்த மக்கள் கடவுள் இவர்களுக்கு செய்த அளப்பரிய அருளை நினைத்து வியந்தனர்.

கடவுளின் அருள் என்பது இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனிதருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா மனிதரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொருவருக்குமே கடவுளின் அருள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆணித்தரமான உண்மை. ஆனால் அந்த அருளை நாம் பயன்படுத்திக் கொள்வதும் இழப்பதும் நமது கையில் தான் இருக்கின்றது. இன்றைய உலகில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சுயநலத்தின் காரணமாக கடவுளின் அருளை இழந்து வருகின்றனர். நம்முடைய சுயநலத்தை களைந்து இறைவனு டைய பாதையில் நம்மையே முழுமையாகக் கையளித்து நம் வாழ்வை வாழுகின்ற பொழுது நிச்சயமாக கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்ற செக்கரியாவும்   எலிசபெத்  அம்மாவும் ஆவர்.

செக்கரியா பலி செலுத்தும் குருவாக இருந்தபோதிலும் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் பலர் இவருக்கு கடவுளின் அருள் இல்லை என நினைத்திருக்கலாம். ஆனால் பலி செலுத்த குலுக்கல் போட்ட பொழுது கடவுளின் திருவுளத்தால் செக்கரியாவின்  பெயர் விழுந்தது. பலி செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது நிச்சயமாக குழந்தை பாக்கியத்திற்கு இறைவேண்டல் செய்திருப்பார். கடவுள் அவருடைய அருளை வெளிப்படுத்த செக்கரியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். மேலும் இயேசுவினுடைய பாதையை ஆயத்தப்படுத்த இவரின் மகன் வழியாக செயல்பட கடவுள் திருவுளம் கொண்டார். கடவுளின் அருள் இவருக்கு  இல்லை என விமர்சிக்கப்பட்டாலும் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்று பிறருக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒரு சான்றாக மாறினார்.

செக்கரியாவுக்கு கடவுளின் செய்தி அறிவிக்கப்பட்ட போதும் சற்று தயக்கம் காட்டியதால் கடவுளின் அருளை முழுமையாக கண்டடைந்த வரை அவர் வாய் பேச முடியாமல் இருந்தார். எலிசபெத்  குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு என்ன பெயரிடலாம் என்று உறவினர்களும் குடும்பத்தாரும் யோசித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு யோவான் எனப் பெயரிட செக்கரியா முன்மொழிந்தார். யோவான் என்றால் "கடவுளின் அருள்" என்பது பொருள். செக்கரியா தங்களுக்கு பிறந்த மகனை கடவுளின் அருளாகக் கருதினர். எனவேதான் தன் மகனை முழுமையாக இறைத் திருவுள்ளத்திற்கு கையளித்தனர். இந்த உலக மக்கள் அனைவரும் இயேசு என்னும் மீட்பரின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்படுத்தும் முக்கிய பணியை செக்கரியாவின் மகன் திருமுழுக்கு யோவான் செய்தார்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்று அதனைப் பிறருக்கும் வழங்க அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பாக்கியம் இல்லாமல் துன்பப்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கடவுளின் அருள் நிறைவாகக் கிடைக்க நாம் ஒவ்வொருவரும் இறைவேண்டல் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். குழந்தைகள் கடவுளின் கொடைகள் என்பதை மறந்து இவ்வுலகில் எத்தனையோ தம்பதியினர் கருவிலேயே குழந்தையை அழிக்கின்றனர். பெற்ற குழந்தைகளைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து வரும் இன்றைய உலகத்தில் நாம் "எப்படிப்பட்ட மனநிலையில் வாழப் போகின்றோம்?" என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். குழந்தைகள் கடவுளின் அருளாக நினைத்து அவர்களுக்காக எந்நாளும் ஜெபிப்போம்.

அதேபோல குழந்தை பாக்கியத்திற்காக செக்கரியா மற்றும் எலிசபெத் போல நம்பிக்கையோடு செபித்து வருகின்ற தம்பதியினர்காகவும் செபிப்போம். நிச்சயம் நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு கடவுள் தனது அருளை பொழிவார். எனவே கடவுள் அருள் நிறைந்தவர். ஆண்டவர் இயேசுவின் பிறப்பு பெருவிழாவை கொண்டாட நம்மையே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் கடவுளின் அருளுக்காக சிறப்பாக வேண்டுவோம். பிறக்க இருக்கின்ற பாலன் இயேசு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களின்  வயிற்றிலே  குழந்தையாக பிறந்து அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்க செபிப்போம். இறை நம்பிக்கையோடு நேர்மையோடும் உண்மையோடும் கடவுளுக்கு முன்னால் வாழ்பவர்கள் நிச்சயம் கடவுளின் அருளை கண்டடைவர். கடவுளின் அருளை பெற தடையாக இருப்பவற்றைக் களைந்து கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்.

இறைவேண்டல் 
வல்லமையுள்ள அன்பின் இறைவா! நாங்கள் உம்முடைய அருளைப் பெற்றுக் கொள்ள எங்களுடைய இறைநம்பிக்கையும் வாழ்வையும் வலுப்பெறச் செய்தருளும். செக்கரியா மற்றும் எலிசபெத் அம்மாவைப் போல சான்று பகரக்கூடிய  விதத்தில் எங்கள் வாழ்வை வாழ்ந்திட தேவையான அருள் நலன்களை தாரும். ஆமென்.

Add new comment

1 + 11 =