கடவுளிடமிருந்து வருபவை எவை? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


கிறிஸ்து பிறப்பு காலம் (புதன்) - I. 1 யோவான்:2:3-12-17; II. திபா: 96:7-8,8-9,10; III. லூக்: 2:36-40

வாழ்க்கையை எப்போதுமே கொண்டாட வேண்டும் என்பதுதான் இன்றைய உலகின் நியதி. கடவுள் உலகத்தைப் படைத்ததே நமக்காகத் தான். வாழ்கின்ற வரை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல சமயங்களில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற மனிதர்கள் பல கோடி. அவர்களுள் ஒருவராக நாமும் இருக்கிறோம் என்பது தான் உண்மை. இந்நிலை மாற எது நிரந்தரம், எவை நல்லவை, எது நமக்கேற்ற வழி, எப்படி வாழ்ந்தால் மகிழ்வு நீடிக்கும் என்பவற்றை பற்றியத் தெளிவான அறிவு நமக்கு வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் எவையெல்லாம் கடவுளிடமிருந்து வருபவையல்ல என்பதைக் கூறுகிறார். உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு போன்றவைகளை கடவுளிடமிருந்து வருபவை அல்ல எனக் கூறுகிறார். இன்றைய அறிவியல் உலகம் நமக்கு விளம்பரப்படுத்துவதே இவைகள் தாம். உண்ணும் உணவு, படுக்கும் மெத்தை, உடுத்துகின்ற உடைகள், அலங்காரப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்களைக் கூட கவர்ச்சிப் பொருட்களாக்கி விளம்பரப்படுத்தி நம் கவனத்தைத் திசைதிருப்புகின்றன ஊடகங்கள்.அவை வீட்டிலிருந்து உழைக்காமலே சம்பாதிக்க பல வழிகளைக் காட்டுகின்றன. இவையெல்லாம் கடவுளின் விருப்பமா?

நல்ல உடல் நலம், தெளிவான பார்வை, தேவையான செல்வம், இவற்றைப் பயன்படுத்த நல்ல தெளிந்த அறிவு இவைதான் தந்தை கடவுள்  நமக்குத் தருபவை. அவற்றோடு சேர்த்து அவருடைய அருளையும் இரக்கத்தையும் நமக்குத் தருகிறார் கடவுள்.  

புனித யோவான் இதை நமக்கு வலியுறுத்தும் விதமாக தந்தையர்களே, இளைஞர்களே,சிறுவரே என ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு முறையே அவர்கள் கடவுளின் பாவ மன்னிப்பைப் பெற்றதையும், தீயோனை வார்த்தையால் வென்றதையும், தந்தையாம் இறைவனைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதையும் கூறுகிறார். மேலும் உலகத்தின் பால் அன்பு இருந்தால் கடவுள் பால் அன்பு இருக்காது என்பதை தெளிவாகக் கூறுகிறார். நாம் யாரிடம் அன்புகொண்டுள்ளோம் என சிந்தித்துப் பார்ப்போம். உலகம் சார்ந்தவையிடமா? அல்லது கடவுளிடமா? ஆங்கிலத்தில் இப்படி கூறுவார்கள் "Though we are in the world, we should not be of the world". நாம் உலகத்தில் வாழ்வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறோம். ஆனால் இவ்வுலகைச் சாராத வாழ்வு வாழ்வது நம் கையில் தான் உள்ளது. அதற்கு கடவுளிடமிருந்து வருபவை எவை என்பதைப் பற்றிய அறிவு நமக்கு வேண்டும். அந்த அறிவே கடவுளின் அருள் தான்.

இன்றைய நற்செய்தியில் அன்னா குழந்தை  இயேசுவை பார்த்து அவர் தான் உலகை மீட்க வந்த மெசியா என்பதை உணர்ந்தவராய் அவரைப் பற்றி பெருமையாகப் பேசியதைக் குறிப்பிடுகிறது. திருமணமாகி ஏழு ஆண்டுகளில் கைம்பெண் ஆன அவர் நினைத்திருந்தால் உலகம் சார்ந்த பொய்யான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ கடவுளைச் சார்ந்தவற்றைத் தேடினார். கோயிலிலே தன் வாழ்க்கையைச் செலவிட்டார் என வாசிக்கிறோம்.

ஆம். அன்புக்குரியவர்களே, இக்கருத்துகளெல்லாம் நாம் மகிழ்ச்சியுடன் வாழக்கூடாது, இன்பமாக இருக்கக்கூடாது, பொருள் சேர்க்கக் கூடாது என கூறவில்லை. மாறாக எது உண்மையான மகிழ்ச்சி, எவை நிலையானவை, எவை கடவுள் தருபவை நம்மை நல்வழியில் நடத்துபவை என்பதை உணர்ந்து செயல்பட நம்மை அழைக்கின்றன. எனவே இச்சிந்தனைகளை உள்வாங்கி கடவுளின் அருள் பெற இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

எங்களுக்கு எது நல்லதோ அதை மட்டுமே தரும் தந்தையே, உலகம் சார்ந்தர்களாய் வாழாமல் உம்மைச் சார்ந்தவர்களாய் வாழ்ந்து, உம்மிடமிருந்து வருபவற்றை கண்டறிந்து வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

3 + 8 =