கடவுளால் அழைக்கப்பட்டவர்களாய் அவர்பணி செய்யத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு; I: ஆமோ: 7: 12-15; II : தி.பா: 85: 8யb-9. 10-11. 12-13; III: எபே: 1: 3-14; IV:  மாற்: 6: 7-13

ஒரு அருட்சகோதரி இறையழைத்தல் முகாம் ஒன்றில் தன்னுடைய இறையழைத்தல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். "என் சிறு வயதுமுதலே கன்னியராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது.ஆயினும் என்னுடைய வாழ்வு உலகப்போக்கில் தான் இருந்தது. பல திறமைகள் எனக்கு இருந்ததால் சற்று தற்பெருமை நிறைந்தரவராகவே நான் இருந்தேன்.எனக்குத் தான் முதன்மையான இடம் வேண்டும் என்ற  உணர்வு என்னிடம் மேலோங்கி இருந்தது. இவற்றிற்கு மத்தியிலும் அருட்சகோதரி ஆகவேண்டும் என்ற என்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நான் தவறாமல் செபித்தேன்.தகுந்த காலத்தில் அருட்சகோதரியாக மாறினேன். என் விருப்பம் நிறைவேறி விட்டது என்ற மகிழ்வு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது என் விருப்பமோ முயற்சியோ அல்ல.மாறாக கடவுன் முன்னேற்பாடு என்பதைப் புரிந்து கொண்டேன். நான் பார்த்திராத மனிதர்கள், இடங்கள், என் எண்ணத்தில் இருந்திராத பணிகள் இவைகளெல்லாம் என் வாழ்வுப் பாதை நான் ஏற்படுத்தியது அல்ல கடவுள் அமைத்தது என்பதை உணரவைத்தது . இதன் மூலம் கடவுளின் எண்ணற்ற ஆசிகளைப் பெற்றேன். முன்பின் தெரியாத மக்களோடு அவர்களின் மகிழ்விலும் துயரிலும் உடனிருந்து நலமான வார்த்தைகளைப் பேசி, ஆற்றுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் போது எனக்கு கடவுள் அருளிய அழைப்பின் மேன்மையை உணர்ந்து இன்னும் சிறப்பாகப் பணியாற்ற தூண்டப்படுகிறேன் " என்று தன் பகிர்வை நிறைவு செய்தார்.

இறைவனின் அழைப்பு என்பது  ஒரு கொடை. அது ஒரு வாழ்வியல் அறநெறி. இறைவன் மனிதரை அழைப்பது தன்னோடு வாழும் சகமனிதருக்கு வாழ்வு கொடுப்பதற்காகவே.  ஏனென்று சொன்னால் இறைவனின் அழைப்பு  அருளையும் ஆசியையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய வாய்க்காலாக இருக்கின்றது. 

இறைவனின் அழைப்பை திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெற்றுள்ளார். அதேபோல திருமுழுக்கு பெறாதவர்களும் கூட இறைவனின் அழைப்பை வேறு வடிவில் பெற்றுள்ளனர். திருமுழுக்குப் பெற்ற புனித அன்னை தெரசாவும் அமைதியின் வழியில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தார். திருமுழுக்கு பெறாத நம் நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியும்  கூட  இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகிர்ந்துள்ளார். அதேபோல துறவறம் உன்னதமான இறை அழைப்பு என்றால் இல்லற வாழ்வும்  உன்னதமான இறை அழைப்பு தான்.  எனவே கடவுளின் அழைப்பு அனைவருக்கும் பொதுவானது. அந்த அழைப்பு பிறருக்கு வாழ்வு கொடுக்க கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை. எனவே அந்த உன்னதமான கொடையைப் பயன்படுத்தி நம் வாழ்வும் பிறர் வாழ்வும் வளம் பெற நம் வாழ்வையே முழுவதுமாக ஒப்புக் கொடுக்க இன்றைய இறைவார்த்தை மூலமாக நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். 

இறைப்பணி செய்ய, நம்மை அழைத்தது கடவுள் என்பதை முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொள்வது மிக அவசியம்.
"நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தெரிந்து கொண்டேன் " (யோவான் 15:16) என்று நம் ஆண்டவர் இயேசு கூறியுள்ளார். அதேபோல " தாம் விரும்பியவர்களை அவர் அழைத்தார்" (மாற்கு 3:13) என நாம் வாசிக்கிறோம். ஆம் அழைப்பு என்பது நாம் விரும்பி தேர்ந்தெடுப்பது அல்ல . கடவுள்தான் அவருடைய பணிக்கென நம்மைத் தேர்ந்தெடுத்து அழைத்திருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர் நமக்கு இதை சிறப்பாக உணர்த்துகிறார். தான் இறைவாக்கினரின் மகன் அல்ல, இறைவாக்கினர் கூட்டத்தில் ஒருவனும் அல்ல. சாதாரணமாக ஆடு மேய்ந்துக் கொண்டிருந்த தன்னை மக்களுக்கு இறைவாக்குரைக்க ஆண்டவர் தாமே அழைத்தார் என்று தன் அழைப்பு கடவுளால் அருளப்பட்டதை விளக்குகிறார். அதே போல இண்டாம் வாசகத்திலும் புனித பவுல் கடவுள் கிறிஸ்து வழியாக நம்மை முன்குறித்து, தேர்ந்தெடுத்து அழைத்து அவர் பணிக்கென பயன்படுத்துகிறார் என்ற செய்தியை தெள்ளத் தெளிவாக கூறுகிறார். இவ்வாறாக இறைப்பணி செய்ய நம்மையே நாம் தயார்படுத்தும் போது "என்னுடைய விருப்பம். நான் தேர்ந்தெடுத்த பணி " என்ற எண்ணத்தைக் களைந்து " கடவுள் என்னை அழைத்து இப்பணியைத் தந்திருக்கிறார் " என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு தம் சீடர்களை இருவர் இருவராகப் பணிசெய்ய அனுப்பி ,தீய சக்திகளை விரட்டவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரம் கொடுக்கிறார் எனக் காண்கிறோம்.  இயேசுவின் பணிவாழ்வில் அவருடைய வல்ல செயல்களில் அதிகமாக இடம்பெற்றவை குணமளிக்கும் செயல்களும், தீய ஆவியை விரட்டியடிக்கும் செயல்களுமே.
அவரால் அழைக்கப்பட்ட நாமும் இவ்விரு பணிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஏனேனில் இப்பணிகளைச் செய்ய நமக்கும் அதிகாரம் அளிக்கப்ட்டுள்ளது.

நாம்  ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் முதலில்  நம்மிலேலே உள்ள எல்லாவகையான தீய தூண்டுதல்களையும் விரட்டியடிக்க வேண்டும். அவை சுயநலமாகவோ, ஆணவமாகவோ, பொறாமையாகவோ, தாழ்ச்சி மனப்பான்மையாவோ, பாவத்தைத் தூண்டும் இச்சைகளாகவோ இருக்கலாம். இவை அனைத்துமே சாத்தானின் சூழ்ச்சிகளே.  அவ்வாறே நாம் சமூகத்தில் உலவும் தீமைகளான அநீதி, அடக்குமுறை,ஏற்றத்தாழ்வுகள், சுயநலம், கொலை  கொள்ளை கற்பழிப்பு திருட்டு போன்ற உயிர்களுக்கு எதிரான பாவம் செய்யும் மனநிலைகளை விரட்டியடிக்க முற்படுவேண்டும்.

அதேபோல உடலாலும் மனதாலும் நோயுற்ற மனிதர்களைச் சந்தித்து அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம். கனிவுள்ள, திடமூட்டுகின்ற, நம்பிக்கை கொடுக்கின்ற, ஆற்றுப்படுத்துகின்ற உடனிருப்பையும் வார்த்தைகளையும் வழங்கும் போது அவர்கள் விரைவில் தம் நோய்களிலிருந்தும் மன வேதனைகளிலிருந்தும் நிச்சயம் குணமடைவார்கள்.

கடவுளின் அழைப்பை வெவ்வேறு விதங்களில் நாம் பெற்றிருக்கிறோம் என்பது அசைக்க முடியாத உண்மை. அவ்வழைப்பை ஆழமாக உணர்ந்து நம்மால் இயன்ற வழிகளில் அவர் நமக்களித்த பணிகளைச் செய்ய நம்மையே ஒவ்வொரு நாளும் தயார் செய்வது நமது கடமை. ஏனெனில் அழைப்பை உணர்ந்த எவராலும் பணி செய்யாமல் இருக்க முடியாது. எனவே நாமும் பிறரும் வாழ்வு பெறும் பொருட்டு, அழைக்கப்ட்டவர்கள் என்பதை உணர்ந்து தீய சக்திகளை விரட்டியடிக்கவும் நலமருளும் பணிகள் செய்யவும் புறப்படுவோம். அதற்கான அருளைப் பெற அனுதினமும் செபிப்போம்.

இறைவேண்டல் 

எங்களை அழைத்த இறைவா உமது அழைப்பை உணர்ந்தவர்களாய் நீர் விட்டுச்சென்ற பணியைத் தொடர வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 4 =