ஓருடலாய் இறைவார்த்தையை வாழ்வாக்கி இறைபணி ஆற்றிடுவோம்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


Sunday Reflection - January 23

ஆண்டின் பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு 
I: நெகே:  8:2-4, 5-6, 8-10
II : திபா 19: 7. 8. 9. 14
III: 1கொரி: 12: 12-30
IV: லூக்:    1: 1-4; 4: 14-21

ஒரு ஊரிலே திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. குழுவிளையாட்டுப்போட்டிகள் பல நடைபெற்றன. அவ்வாறான போட்டியில் அவ்வூரின் குறிப்பிட்ட தெருவைச் சேர்ந்த நண்பர்கள் குழுவாக இணைந்து போட்டியில் பங்கேற்றனர். ஆரம்பத்தில் அக்குழு மிகச்சிறப்பாக விளையாடியது. இடையிலே சிறிய தவறு ஏற்பட்டுவிட்டது. அதை அக்குழுவிலே உள்ள சிலர் பெரிது படுத்தி பழியை ஒரு குறிப்பிட்ட இளைஞன் மேல் சுமத்தினர். அவனுடைய செயல்பாட்டையும் தவிர்த்தனர். இதனால் அடுத்தடுத்து அக்குழு தவறுகள் பல புரிந்து இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. தங்களுக்குள் அவர்கள் இணையாமல் பிளவுபட்டு இருந்ததால் வெற்றியைக் காண இயலவில்லை. 

இச்சிறுநிகழ்வு நம் சமூகத்தை பிரதிபலிப்பதாக அமைகிறது அல்லவா.  மனிதன் தனியே வாழ இயலாது. அவன் எல்லாவற்றிற்கும் யாரையாவது சார்ந்தாக வேண்டும். அதே போல தனிமனிதன் குடும்பமாக இயலாது. தனித்து நிற்கும் எவராலும் வாழ்வில் வெற்றிபெற இயலாது. எங்கே இணைந்து செயல்படுகிறோமா அங்கே இணைந்து வெற்றியையும் சுவைக்கிறோம். அதேபோல இறைவார்த்தையை நம்முடைய வாழ்வாக மாற்றி இறைபணி புரியவும் நாம்  இறைதந்தையின் பிள்ளைகளாய் ஒன்றிணைவது அவசியம். இக்கருத்தை இன்றைய வாசகங்கள் நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் எஸ்ரா இறைவார்த்தையை வாசிக்கும் போது புரிதலுள்ள அனைவரும் அதைக் கேட்ட நிகழ்வு நமக்குத் தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இறைவார்த்தை எல்லா மக்களையும் அதாவது சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஒன்றிணைப்பதை நாம் காணமுடிகிறது. அங்கே இஸ்ரயேலர் அனைவரும் தந்தையின் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து இறைவார்த்தையைக் கேட்க, அவ்வார்த்தை அவர்களுக்குள்ளே செயல்படுகிறது. அனைவரும் ஒரே சிந்தனையால் நிரம்பினர். ஒன்றுபோல் அழுதனர். கடவுளுக்கு கீழ்படிய இணைந்து முடிவெடுத்தனர். 

இணைந்து இறைபணியை நாம் நிறேவேற்ற நம்மை மேலும் ஊக்குவிக்கும் விதமாக புனித பவுல் மனித உடலை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். உடல் பல உறுப்புக்களால் ஆனது. அத்தனை உறுப்புகளும் தம் தம் வேலையைச் சிறப்பாகச் செய்து மனித உடல் சீராக இயங்க உதவுகிறது. உறுப்புகள் அவற்றின் தன்மையிலும், அளவிலும், வேலையிலும், வடிவத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும், அவை இணைந்து பணிசெய்வதால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடிகிறது. அவற்றில் ஏதேனும் ஒன்று தன் பணியைச் செய்யாவிட்டாலும் அங்கே பாதிப்பு ஏற்படுகிறது. அதே போல நாம் பெற்றுக்கொண்ட இறைவார்த்தையை  வாழ்வாக்கி பணி செய்ய முயலும் போது ஒருவர் மற்றவரோடு இணைந்து பணி செய்ய வேண்டும். அதுவே நம் தந்தையின் விருப்பமும் கூட.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுகைக் கூடத்தில் இறைவார்த்தையை வாசித்து தான் எத்தகைய பணியை இவ்வுலகில் ஆற்றப்போகிறார் என மக்களுக்குத் தெரிவித்தார். அவர் அந்த பணியைத் தனி ஒருஆளாகச் செய்யவில்லை. மாறாக தந்தையோடும் அவர் அருளிய ஆவியின் துணையோடும் செய்தார். எளியோர்க்கு நற்செய்தியையும், நோயுற்றோருக்கு நற்சுகமும், குருடருக்கு பார்வையும், தீய ஆவியிடமிருந்து விடுதலையையும் அவர் மக்களுக்கு அளிக்கும் போது தனிமனிதாகச் செய்யவில்லை. தன்னோடு தன் சீடர்களையும் அழைத்துச் சென்றார். அப்பம் பலுகும் வல்ல செயலில் சீடர்கள் இயேசுவோடு உடனிருந்து மக்களை அமர வைக்கவும் பந்தி பரிமாறவும் செய்தனர் என நாம் வாசிக்கிறோம். இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்ற பின் திருத்தூததர்களும், முதல் கிறிஸ்தவ சமூகமும் ஒன்றித்து இறைபணி செய்தனர் என நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம் அன்றோ!

ஆம் இறையாட்சி பணி தனிநபர் பணிஅல்ல. அது நாம் அனைவரும் இணைந்து செய்யக்கூடிய பணி. திருஅவையில் திருப்பலியில் நாம் இணைந்து இறைவார்த்தையைக் கேட்கிறோம். குடும்பத்தில் இணைந்து செபிக்கிறோம்.துறவு வாழ்வில் குழுமங்களாகப் பணி செய்கிறோம். இன்னும் பல பக்த சபை குழுக்களாக ,அன்பியங்களாக நாம் பணிசெய்கிறோம். இவையனைத்தும் கிறிஸ்து என்ற உடலின் பல்வேறு உறுப்புகளாய் நாம் இணைந்து பணியாற்றுகிறோம் என்பதையே நமக்கு விளக்குகிறது. எனவே திருஅவை என்னும் உடலின் அங்கங்களாய் இறைவார்த்தையால் ஒன்றிணைவோம். தந்தை மகன் தூய ஆவியாரோடு நாமும் இணைந்து இறைவார்த்தையை வாழ்வாக்கி இறைபணியாற்ற நம்மை ஒரே உடலின் உறுப்புகளாக ஒன்றிணைப்போம்.

 இறைவேண்டல் 
ஒற்றுமையின் இறைவா!  நாங்கள் இறைவார்த்தையால் ஒரே உடலாய் இணையப்பெற்றவர்களாய், இறைபணியாற்றி இறையரசை அமைக்க எமக்கு உமது ஆவியை ஊற்றும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 1 =