ஒருவரை ஒருவர் திடப்படுத்துவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


காலம்-ஏழாம் வாரம் செவ்வாய்
I: உரோ 12: 9-16b
II: எசா 12: 2-3. 4bcd. 5-6
III :லூக் 1: 39-56

இன்று நம் தாய் திருஅவையானது மரியா எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். அச்சந்திப்புகளெல்லாம் பல சமயங்களில் பொழுது போக்காகவும் நேரத்தை வீணாக்குவதாகாகவும் சில சயமங்களில் பிரச்சனையை உண்டு பண்ணுவதாகவும் அமைகிறது. ஆனால் இங்கே மரியாவுக்கும் எலிசபெத்துக்கும் இடையே நடைபெறும் இச்சந்திப்பு ஒருவரை ஒருவர் இக்கட்டான சூழலில் திடப்படுத்துகின்ற சந்திப்பாக அமைகிறது.

இந்நிகழ்வு நம்மால் அடிக்கடி சிந்திக்கப்பட்டதாக இருந்தாலும் மீண்டும் இதை ஆழமாகச் சிந்தித்து மரியா எலிசபெத்தின் சந்திப்பு நமக்குணர்த்தும் வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள முற்படுவோம்.

கபிரியேல் தூதரின் வழியாக கடவுள் மரியாவுக்கு தந்த அழைப்பு சற்று சவால் நிறைந்தது.திருமண ஒப்பந்தமான பெண் கணவனை அறியாமல் குழந்தை பெறுவது என்ற சவாலான அழைப்பை ஏற்றுக்கொண்டாலும் கலக்கத்தோடும் தயக்கத்தோடும் இருந்தார் மரியா.

உடலாலும் மனதாலும் தளர்ந்த வயதில் மகனைக் கருத்தரித்த தாயாக எலிசபெத். ஒருபுறம் மலடி என்ற அவப்பெயரை கடவுள் நீக்கிவிட்டார் என்ற மகிழ்வு இருந்தாலும் மறுபுறம் வயதுக்கேற்ற பலவீனத்தால் கலக்கமும் தயக்கமும் கொண்டவராய் இருந்தார் எலிசபெத்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த போது தங்களுடைய சோகங்களையும் கவலைகளையும் அவர்கள் சொல்லிப் புலம்பவில்லை. மாறாக ஒருவரை ஒருவர் ஆண்டவர் பெயரால் வாழ்த்தி, திடப்படுத்தினர்.ஒருவரை ஒருவர் உபசரித்து பணிவிடை புரிந்தனர். இணைந்து கடவுளைப் போற்றினர்.

நமது சந்திப்புகளை மரியா எலிசபெத்தை போன்றதாய் உள்ளதா என நாம் சோதித்துப் பார்ப்போம். நமக்கும் பல கலக்கங்களும் தயக்கங்களும் வேதனைகளும் துன்பங்களும்  இருக்கலாம். அத்தகைய சுமையோடு வருபவர்களை திடப்படுத்துவதாய் நம் சந்திப்பு அமைய வேண்டும். நல்லவற்றைப் பகிர வேண்டும். இணைந்து நன்மைகளைச் செய்யும் இறைவனைப் புகழ வேண்டும்.மாறாக புலம்பி அழுது சுமைகளை பெரிதாக்கக்கூடாது. உளவியல் ரீதியாகவும் சவால்களின் நேரத்தில் நமக்கு ஒருவர் கூறும் ஆறுதல் மொழிகளும் உந்து சக்தியும் அச்சவாலை வெல்ல பலம் தரும். அத்தகைய சந்திப்புகளாக நமது சந்திப்புகள் அமைய செபிப்போம்.

 இறைவேண்டல் 
வல்லவராம் இறைவா!  எங்கள் அன்றாட வாழ்வின் சந்திப்புகள் உமது பெயரால் ஒருவரை ஒருவர் திடப்படுத்துவதாய் அமைய வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 

Add new comment

3 + 8 =