எல்லாச் சூழ்நிலையிலும் இறை நம்பிக்கையை அறிக்கையிடத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 17 ஆம் வியாழன்; I : எரே: 15: 10, 16-21; II: திபா: 59: 1-2, 3, 9-10, 16-17; III : யோ: 11: 19-27

இன்றைய நாளில் தாய் திருஅவையோடு இணைந்து புனித மார்த்தாவின் விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். "மார்த்தா" என்ற சொல்லானது அரேபிய மொழியிலிருந்து வந்தது. "மார்த்தா" என்ற பெயரின் பொருள் என்னவென்றால் "தலைவி" அல்லது "இல்லத்தரசி". எருசலேம் அருகே பெத்தானியா என்னும் ஊரில் இயேசுவால் அன்பு செய்யப்பட்ட இலாசர் மற்றும் மரியா போன்ற இருவரோடு உடன் பிறந்தவராவார் என்னும் குறிப்பு நாம் புதிய ஏற்பாட்டில் காண முடிகிறது. இறந்துபோன தனது சகோதரர் இலாசரை உயிர் பெற்றெழச் செய்யும் பொழுது, இயேசுவோடு உடனிருந்து அந்நிகழ்வை நேரில் கண்டார். 

புனித மார்த்தா பல நற்பண்புகளை தனதாக்கியுள்ளார். பொதுவாக 
மார்த்தாவைப் பற்றிசிந்திக்கும் போது அவருடைய விருந்தோம்பல் பண்புதான் அதிகமாகப் பேசப்படும்.  தன் வீட்டிற்கு வந்த விருந்தினரை கண்ணும் கருத்துமாக உபசரிக்கும் மனநிலையை மார்த்தா கொண்டிருந்தார். இயேசு மார்த்தாவின் வீட்டிற்கு வந்த பொழுது, வீட்டுத் தலைவிக்குரிய மனநிலையோடு பொறுப்புடன் உபசரிக்க கண்ணும் கருத்துமாய் இருந்தார். இந்த செயல்பாடு இயேசுவால் விமர்சிக்கப்பட்டாலும், அவரின் விருந்தோம்பல் பண்பு நமக்கு மிகச் சிறந்த பாடத்தைப் புகட்டுவதாக இருக்கின்றது. 

ஆனால் மார்த்தா இறை நம்பிக்கையில் மிக ஆழமுள்ளவராய் இருந்தார்.  தன்னுடைய சகோதரின் இழப்பால் மனம் வருந்தி துயருற்று இருக்கும் வேளையில் கூட, இயேசுவின் வருகையை அறிந்த உடன்,  தனக்கு ஆறுதல் சொல்ல வீட்டிற்கு வந்த மற்றெல்லாரையும் விட்டுவிட்டு இயேசுவைக் காண விரைந்து சென்றார் என இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும்  மார்த்தா இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்டதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினார். இந்த வார்த்தைகள் இயேசுவின் மீது கொண்ட மார்த்தாவின் ஆழமான நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. மார்த்தாவின் ஆழமான நம்பிக்கை, இறந்த இலாசரை உயிர்பெற்றெழச் செய்தது . இயேசு இந்த வல்லச் செயலை செய்ததற்கு இலாசர் மீது கொண்டிருந்த அன்பும், மார்த்தாவின் நம்பிக்கையுமே காரணமாகும்.

மேலும் அவர் பேதுரு அறிக்கை யிட்டதைப் போல " "நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்ற கூறி இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பறைசாற்றும் சீடாராக மாறுகிறார். இக்கட்டான துயரம் நிறைந்த சூழலிலும் இத்தகைய வார்த்தைகளை அவரால் கூறமுடிந்தது என்றால் அவருடைய நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை  நம்மால் உணரமுடிகிறதல்லவா.

 எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் எவ்வளவு துயரங்களும் சோதனைகளும் இடையூறுகளும் வந்தாலும், இறைவனால் இயலும் என்று நம்பிக்கை கொள்ளும் பொழுது நிச்சயமாக கடவுள் பல வல்ல செயல்களைச் செய்வார். எனவே
மார்த்தா ஆழமான நம்பிக்கையோடு தன் துன்ப வேளையிலும் இயேசுவைப் பற்றி நற்செய்தியை நம்பிக்கையோடு அறிவிக்கும் சீடராக இருந்ததைப் போல நாமும் எல்லாச் சூழலிலும் இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பறைசாற்ற உறுதி எடுப்போம்.

இறைவேண்டல்

இயேசுவே இறைகனே!  எம் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் உம்மேல் உள்ள நம்பிக்கையை கைவிடாது உம்மைப் பற்றி பறைசாற்றும் சீடராக எம்மை மாற்றும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

 

Add new comment

15 + 2 =