Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எம் ஆண்டவரே நீர் மட்டுமே எம் கடவுள்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம் 18 ஆம் சனி; I: இணை 6:4-13; II : தி.பா: 17:2-4,47,51; III: மத்: 17:14-20
" காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா" என்கிறது ஒரு பழைய திரைப்படப் பாடல். இன்றைய உலகில் கோவில், பக்தி, வழிபாடுகள், செபம் போன்றவையெல்லாம் மதிப்பற்றவையாகக் கருதப்படுகின்றன. அதற்கு காரணம் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் பலரிடம் இல்லாததே ஆகும். ஏன் இப்படி ஒரு எண்ணம் உண்டானது என அலசிப்பார்த்தால், கடவுள் என்பவருக்கு நாம் அளித்திருந்த இடம் பலவற்றால் கைப்பற்றப்பட்டுவிட்டன. அவைகள் செல்வம், இன்பம், ஆசைகள், கேளிக்கைகள், உணவு ...போன்றவையாகும்.
அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் " உன் கடவுளாகிய ஒருவரே ஆண்டவர்" என கூறப்பட்டுள்ளது. பத்துக்கட்டளைகளில் முதன்மையான கட்டளை அதுவே. ஆனால் நாம் நம் வாழ்வில் கடவுளுக்குரிய இடத்தை மேலே கூறியதைப் போல பலவற்றிற்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டோம் என்பது தான் உண்மை. யோசித்துப்பார்ப்போம். செபம் செய்ய பத்து நிமிடம் ஒதுக்க சளைக்கும் நாம், மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்க்கவோ அல்லது விளையாடவோ அல்லது நண்பருடன் பேசவோ தயங்குகிறோமா. இவ்வாறு உலக மாயைகளுக்கு மதிப்பும் மரியாதையும் நேரமும் கொடுத்து அவற்றை நம் கடவுள்கள் ஆக்குகிறோமே? இது நமது முதல் கட்டளையையே மீறுகின்ற செயல் அல்லவா.
நம்மில் பலர் கடவுள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை மறந்து பிரச்சனைகளின் போதும், நோய் துன்பங்களின் போதும் கைரேகை சாதகம் பார்ப்பதும்,பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளை நாடியும் செல்கிறோமே? அப்போது அவர்கள் நம் கடவுளாய் மாறிவிட்டார்கள் என்பது தானே அர்த்தம்.
இவற்றிற்கெல்லாம் அடிப்படை காரணம் எதுவெனில் இறையன்பும் இறைநம்பிக்கையும் நம்மிடம் குறைவது தான். கடவுளை அன்பு செய்து அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளும் போது உலக மாயைகள் நம்மை மயக்கி கடவுள்களாய் நம்மை ஆள முடியாது என்பதை இன்று நாம் உணர வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகம் நாம் நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. நம்பிக்கை இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார்.
எனவே நம் வாழ்வில் கடவுளை மட்டுமே நம் ஆண்டவராகக் கொண்டு நம்பிக்கையுடன் வாழ்ந்து நம் வாழ்வையே சாதனையாக்க முயற்சி செய்வோம்.
இறைவேண்டல்
அன்பு ஆண்டவரே நீர் மட்டுமே எம் ஆண்டவர் என்பதில் உறுதியாய் இருந்து உம்மை அன்பு செய்யவும் உம்மில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளவும் எமக்கு அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment