எந்த தந்தையாவது மகனின் வேண்டுகோளை மறுப்பாரா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -முதல் வியாழன்  
I: எஸ்தர்:  4: 17 ம-அ, ச-வ
II:  தி.பா: 138: 1-2. 2,3. 7-8 
III: மத்: 7: 7-12

செபம் என்பது நமது வாழ்வில் முக்கியமான ஒன்றாகும்.உடலுக்கு உணவு தேவைப்படுவது போல ஆன்மாவிற்கு செபம் தேவைப்படுகிறது. இந்த உலகத்தில் பலவற்றை பரபரப்பாக செய்கிறோம்.ஆனால் அனைத்தும் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. இதற்கு முக்கிய காரணம் செப வாழ்வு குறைவாக இருப்பதே ஆகும்.  புனித அன்னை தெரசா மனிதநேயப் பணிக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். எனவே உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறார். அவர் இத்தகைய மனிதநேயப் பணிகளைச் செய்வதற்கு  செபம் மட்டுமே அடிப்படை ஆற்றலாக இருக்கின்றது. "ஏழைகளுக்காக உழைப்பது உங்களுக்கு கடினமாகத் தெரிகிறதென்றால் நீங்கள் செய்கின்ற செபத்தில் ஏதோ குறைபாடு உள்ளது என்று அர்த்தம் " என்று புனித அன்னை தெரசாள் கூறியுள்ளார்.  நம்முடைய வாழ்வு பிறருக்கு பலன் கொடுக்க வேண்டுமெனில், நம் வாழ்வு  செபிக்கும் வாழ்வாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆற்றலைக் கொடுக்கக்கூடிய செபம் எப்படிப்பட்டதாக நாம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியாக  ஆண்டவர் இயேசு    சுட்டிக்காட்டியுள்ளார்.

செபமானது நாம் கடவுளிடம் நிவாரணம் கேட்பது போன்றது அல்ல ; மாறாக, உரிமையோடு கேட்பதாகும். ஒரு குழந்தை தன் தந்தையிடம் உரிமையோடு கேட்பதுபோல,  நாமும் கடவுளின் பிள்ளைகள் என்ற மனநிலையில் உரிமையோடு கேட்க இயேசு வழிகாட்டியுள்ளார்.  "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; 
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" (மத்தேயு 7:7) என்ற இயேசுவின் வார்த்தைகள் செபம் உரிமையோடு கடவுளிடம் கேட்க வேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. 'முயற்சி திருவினையாக்கும் ' என்ற வார்த்தைகளுக்கேற்ப நம்முடைய வேண்டுதல்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உரிமையோடு கடவுளிடம் கேட்க வேண்டும்.  ஏனெனில் நாம் கடவுளின் பிள்ளைகள். அவர் நமக்கு தந்தை.  

அன்றாட எதார்த்த சூழலில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் தன்னுடைய குடும்பத்திற்காக நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கிறார். இதற்கு முக்கிய காரணம் தந்தை தன் பிள்ளைகள் மீது கொண்டுள்ள அன்பு.  தான் துன்பப்பட்டாலும் வேலைப்பளுவால் கடினபட்டாலும் தன்னுடைய பிள்ளைகள் மகிழ்வோடும் நிறைவோடும் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றுதான் பெரும்பாலான தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக தியாகம் செய்கின்றனர். இத்தகைய தியாகம்தான் நம்மைப் படைத்த கடவுளிடம் இருக்கின்றது.

கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாம்,  தந்தையாம் கடவுளிடம் நல்லுறவு கொள்ள செபத்தின் வழியாக அழைக்கப்பட்டுள்ளோம். நாம் செபிக்கும் பொழுது கடவுளின் ஆவி நம் உள்ளே வருகின்றது. இதைத்தான் எட்வின் கெய்த் என்ற இறையியலாளர் "செபம் என்பது மனிதன் தன் ஆவியை வெளியேற்றிவிட்டு  கடவுளின் ஆவியை தனக்குள் சுவாசிப்பதாகும்" என்று கூறியுள்ளார்.  தந்தையாம் கடவுளிடம் நம்முடைய உறவை வலுப்படுத்துகின்ற பொழுது, நாம் கடவுளின் ஆவியால் நிரப்பப்பட்டு கடவுளின் பிள்ளைகளாக, வாழ்வுக்குத் தேவையான அருளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

நம்முடைய அன்றாட வாழ்வில் பல நேரங்களில் கடவுளிடம் இறைவேண்டல் செய்கிறோம். நாம் வேண்டுவது கிடைக்காத பொழுது மனம் தளர்ந்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதை மறந்துபாவ வாழ்வில் நிலைத்திருப்பதே ஆகும். தந்தையாம் கடவுள் அவரின்  பிள்ளைகளாகிய நமக்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்க மாட்டார். நம் வாழ்வுக்குத் தேவையான அருளை தேவையான நேரத்தில் கொடுப்பார் என்ற மனநிலையில் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். அவ்வாறு அர்ப்பணிக்கின்ற பொழுது, நம் வாழ்வு வளமையை காணும்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் கடவுளை ஒரு தூரத்திலுள்ள சக்தியாக பார்த்தனர். ஆனால் இயேசு கடவுளை தன் தந்தையாகச் சுட்டிக்காட்டி உரிமையோடு நம்முடைய வேண்டுதல்களை கேட்க வழிகாட்டியுள்ளார். எனவே நம்முடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த வாழ்வாக வாழ முயற்சி செய்வோம். இவ்வுலகம் சார்ந்த பணம், பட்டம், பதவி, சாதி, சமயம், மொழி வேறுபாடு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆனால் இறையாட்சியின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம்   போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கும் பொழுது நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகின்றோம். கடவுளின் பிள்ளைகளாக நாம் மாறும்பொழுது, நம் வாழ்வில் தந்தையாம் கடவுளிடம் அனைத்தையும் உரிமையோடு பெற்றுக்கொள்ளமுடியும்.  கடவுளின் பிள்ளைகளாக  மாறி,  உரிமையோடு தேவையானவற்றை தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ள தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள தந்தையே! பல நேரங்களில் நாங்கள் உம்  பிள்ளைகள்  என்பதை மறந்து உமக்கு எதிராக பல பாவங்கள் செய்திருக்கிறோம். உமது பிள்ளைகள் என்ற நிலையை இழந்திருக்கின்றோம் அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம்.  எனவே இறையாட்சி மதிப்பீடுகளுக்கு உகந்த  எங்களுடைய உண்மையான வாழ்வின் வழியாக எந்நாளும் உமக்கு உரிமையுள்ள பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

1 + 5 =