உள்ளம் கோவிலாக! அன்புச்செயல்கள் இறைவேண்டலாக! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஐந்தாம் செவ்வாய் 
மு.வா: 1அர:   8: 22-23, 27-30
ப.பா :  திபா: 84: 2-3. 4,9. 10. 11
ந.வா:  மாற்: 7: 1-13

 உள்ளம் கோவிலாக!  அன்புச்செயல்கள் இறைவேண்டலாக! 
ஒருமுறை கோவிலுக்கு திருப்பலி நிறைவேற்ற சென்ற ஒரு அருட்தந்தை,  நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டதால் கோயிலின் பின்னால் அமர்ந்து இறைவேண்டல் செய்து கொண்டிருந்தார். அப்போது மக்கள் திருப்பலிக்குத் தயாராகி கோவிலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்களை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார் அத்தந்தை. பலர் தங்கள் காலணிகளை அணிந்தவாறே ஆலயம் நுழைந்தார்கள். பலர் கோவிலுக்குள் இருந்துகொண்டே அலைபேசியில் சப்தமாக பேசினார்கள். நற்கருணை ஆண்டவரை வணங்காமல் ஏனோதானோ என்று நடந்தவர்களும் உண்டு. முதலிலே வேகமாக வந்து இருக்கைகளைப் பிடித்த சிலர், தங்களைவிட வயதிலே மூத்தவர்களும் நோயளர்களும் வரும்போது கூட அவர்களுக்கு இடம் கொடுக்க மனமில்லாதவர்களாய் இருந்தனர். இவற்றையெல்லாம் கவனித்த பின் அந்தஅருட்தந்தை மனம் வருந்தினார். ஆலயமும் இறைவேண்டலும் எதற்காக?  அவற்றின் முழுமையான அர்த்தத்தை நான் வாழ்வாக்கியுள்ளேனா? என்மக்கள் வாழ்வாக்க வழிகாட்டியுள்ளானா?   என்ற கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக்கொண்டவராகத் திருப்பலிக்குத் தயாரானார்.

இன்றறைய வாசகங்கள் நம்மையும் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கொணர அழைக்கின்றது.
இன்றைய முதல் வாசகம் ஆலயம் என்பதன் உண்மையான மேன்மையான பொருளை நமக்கு உணர்த்துவதாக அமைகிறது.பரந்து விரிந்த விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த கடவுள், தன் மக்களின் வேண்டுதலைக் கேட்கவும், அவர்களை மன்னித்து அருள் வழங்கவும் மனிதனால் கட்டப்பட்ட ஆலயத்தில் உறைவது எப்படி சாத்தியமாகும்?  என்ற சாலமோனின் சிந்தனைகளை நமக்குக் கூறுகிறது. அத்தகைய வியப்போடும் இறைநம்பிக்கையோடும் சாலமோன் ஆண்டவரின் பலிப்பீட அர்ச்சிப்பு நாளில் கோவிலில் வந்துறைய கடவுளை நோக்கி கரங்களை விரித்து மனமுருக வேண்டுகிறார்.

இத்தகைய வியப்பும் இறைநம்பிக்கையும் நம்மில் இருக்கிறதா?  இரவும் பகலும் நமக்காய் ஆலயம் வீற்றிருக்கும் இறைவனை உணர நம் உள்ளங்கள் பண்பட்டுள்ளதா என நாம் சிந்திக்க வேண்டும். அவ்வாறு நாம் இறைவனை உணர்வோமானால் தானாகவே ஆலயத்திற்கான மதிப்பும் பக்தியும் நம்மிலே உருவாகும். அத்தோடு நம் உள்ளமானது இறைவனை நெருங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம் உள்ளம் இறைவனை நெருங்கி இருக்கும் போது, நம் உதடுகளால் எழுப்பப்படும் இறைவேண்டலும் இறைவனுக்கு உகந்ததாய் இருக்குமல்லவா. நம் உள்ளம் கடவுளைத் தாங்காவிடில் ,எத்தனை பாடல்கள் பாடினாலும், திருப்பலியோ அல்லது பக்தி முயற்கிகளோ மேற்கொண்டாலும் அது வீண்தான். இக்கருத்தை நற்செய்தி வாசகம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

அத்தோடு நமது கடமைகளையும் நாம் சரிவரச் செய்யும் போது இறைவேண்டல் அங்கே நிறைவடைகிறது என்ற கருத்தையும் நற்செய்தி வாசகமானது நமக்கு உணர்த்துகிறது. கடவுளோடு நெருங்கி இருப்பவன் மட்டுமே தன் கடமைகளைச் செய்ய இயலும். அவன் தன் தாய்தந்தையை மதிப்பான். மூத்தோர்களையும் இயலாதவர்களையும் தன் தாய் தந்தையைப் போலக் கருதி அன்போடு நடந்து கொள்வான். அன்புச் செயல்களிலும் ஈடுபடுவான். இவ்வாறு அங்கே அவனே ஆலயமாகவும் இறைவேண்டலாகவும் மாறுவான்.

ஆம் அன்புக்குரியவர்களே நம் உதட்டால் மட்டுமல்ல நம் உள்ளத்தாலும் இறைவனை நெருங்கிச் செல்வோம். நம் உள்ளத்தை ஆலயமாக்கி நம் அன்புச் செயல்களை இறைவேண்டலாக மாற்றுவோம். ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கவும் நம் தாய் தந்தையர் மூத்தோர்களை மதிக்கவும் கற்றுக்கொள்வோம். அதற்கான ஆற்றலை மன்றாடுவோம்.

 இறைவேண்டல் 
கடவுளே!  ஆலயம் அமர்ந்து எமக்காய் இரவும் பகலும் ஆசிரைப் பொழிபவரே எம் உள்ளத்தால் உம்மை எமதாக்கி அன்புச்செயல்கள் என்னும் வேண்டுதலை உமக்குக் காணிக்கையாக்க அருள்புரியும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

18 + 2 =