உலகத்தின் நுகத்தினை அகற்றிடத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - திருநீற்று புதனுக்குப்பின் சனி
I: எசா: 58: 9b-14
II :  திபா 86: 1-2. 3-4. 5-6
III: லூக்: 5: 27-32

நுகம் என்பது இரு எருதுகளையோ அல்லது இரு கழுதைகளையோ இணைக்கும் அல்லது பூட்டும் மரத்தாலான கருவி. பொதிகளை சுமக்கும் போதும்  விவசாயத்தில் உழுவதற்கு எருதுகளைப் பயன்படுத்தும் போதும் சுமைகளைக் குறைத்து பணிகளை எளிதாக்க இந்த நுகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தனி ஒரு எருதின் மேலோ அல்லது கழுதையின் மேலோ பயன்படுத்தப்படும் நுகம் கடினமானது. சுமையானது.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் மூலம் ஆண்டவர் உன்னிடையே உள்ள நுகத்தை அகற்றிவிட வேண்டுமென்று கூறுகிறார்.அவர் கூறிய அந்நுகம் உலகத்தோடு நம்மை கட்டிச் சேர்த்துள்ள நுகம். இவ்வுலகம் நம் மேல் சுமைகளைச் சுமத்துமே தவிர சுமைகளைக் கூட்டாது. மாறாக உலகத்தின் நுகத்தை அகற்றிவிட்டு, வறியோர், ஏழைகள், இயலாதோர் ஆகியோரோடு நம்நுகத்தைப் பொறுத்த வேண்டும் என்ற அழைப்பு நமக்கு இன்று தரப்படுகிறது. இதன் உண்மைப் பொருள் என்னவெனில் நுகத்தால் கட்டப்பட்ட இரு எருதுகளோ அல்லது கழுதைகளோ தங்களுக்குள் சுமைகளைப் பகிர்ந்துகொண்டு ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க உதவுவதைப்போல நாமும் பிறருடைய சுமையைக் குறைக்க உதவ வேண்டும் என்பதே. அவ்வாறு நாம் செய்யும் போது நம்முடைய வறண்ட காலங்களில் கடவுளே நம்மை வழிநடத்துவதாக வாக்களிக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு வரிதண்டுபவராகிய லேவியை அழைப்பதை நாம் வாசிக்கிறோம். லேவி அநியாயமாக வரிதண்டி ஏழை எளியவரின் நுகத்தை  கடினமாக்கினார். இதன் காரணமாக பாவமெனும் உலக நுகத்தை தனக்குத் தானே கட்டிக்கொண்டார். இயேசு அவரை அழைத்ததால் உலகத்தின் நுகத்தை அகற்றிவிட லேவிக்கு அருள்கூர்ந்தார்.
  அதாவது இயேசு லேவிக்கு கொடுத்த அழைப்பால் அவர் மனம் மாறியவராய் மன்னிக்கப்பட்டவராய் மாறினார். இதன்மூலம் ஏழைகள் மேல் அதிக வரிதண்டுவதை அவர் நிச்சயம் நிறுத்தியிருப்பார்."என் நுகம் அழுத்தாது ; என் சுமை எளிதாயுள்ளது" என மத்தேயு 11:30ல் இயேசு வார்த்தைகள் லேவியின் வாழ்வில் நிறைவுறுகிறதை நம்மால் தெளிவாக உணரமுடிகிறதல்லவா!

அன்புக்குரியவர்களே தவக்காலத்தில் நம்முடைய பக்தி முயற்சிகளும், தான தர்மங்களும், நோன்புகளும் உலகத்தோடு நம்மை இணைத்துள்ள நுகத்தினை உடைக்க உதவுகின்றன என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும்.ஆண்டவர் நம்மிடம் விரும்புவதைப்போல பசித்தோருக்கும் வறியோருக்கும் எளியோருக்கும் உதவிக்கரம் நீட்டும் போது நாம் பாவிகளாக இருந்தாலும் ஆண்டவரோடு இணைக்கப்படுகிறோம். உலகத்தில் நாம் வாழ்ந்தாலும் உலகைச் சாராதவர்களாக நம்மால் வாழ முடியும். அதற்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
பாவிகளைத் தேடி வந்து சுமைதீர்க்கும் இயேசுவே! உலகத்தின் நுகத்தை அகற்றிவிட்டு வறியோருக்கும் எளியோருக்கும் உதவிக்கரம் நீட்டும் நுகத்தை உம்மை போல நாங்கள் ஏற்றுக்கொள்ள வரமருளும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 0 =