உண்மையான மனமாற்றமே ஒப்பற்ற மகிழ்ச்சி! | குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின்  31 ஆம் வியாழன்    
I: பிலி:  3:3-8
II: திபா: 105: 2-3, 4-5, 6-7
III: லூக்: 15:1-10

 

இருபது வருடங்களுக்கு மேலாக குடிநோயால் பாதிக்கப்ட்டு மனம்மாறிய நபர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.மிகவும் பக்தியும் ஒழுக்கமும் உள்ள குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து நல்ல கல்வித்தகுதியை பெற்றவர் அவர். ஆனால் அவருடைய இளமைப் பருவம் அவருடைய வாழ்வையே திசை திருப்பியது. தகாத நண்பர் சேர்க்கையால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அப்பழக்கம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப் படுத்தியது. முதலில் நன்மதிப்பை இழந்தார். பின் தன் வேலையை இழந்தார். உறவுகளை இழந்தார். அவருடைய செல்வாக்கு குறையக் குறைய நண்பர்களும் விட்டுச் சென்றனர்.
நோய்களுக்குப் புகலிடமானார்.தன் மகனின் வாழ்க்கை கண்முன் அழிவதைக் கண்டு மனம் நொந்தத் தந்தையும் நோய்வாய்பட்டு இறந்து போனார்.யாருடைய சொல்லையும் கேளாமல் தன் குடியைத் தொடர்ந்தார் அவர். ஒருமுறை அவருடைய தாய்க்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதிகமான இரத்தப்போக்கினால் குற்றுயிராய் இருந்த நேரத்தில் அவருடைய இரத்த வகை பெறுவதற்காக பல இடங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தன் தாய்க்கும் தனக்கும் ஒரே இரத்தவகை என்பதை அறிந்தும் கூட அவரால் இரத்தம் கொடுக்க இயலவில்லை. காரணம் மது. அன்று தான் தனக்கு பாலூட்டி வளர்த்த தன் அன்னைக்கு இரத்தம் கொடுக்க இயலாத அளவுக்கு தான் மோசமாகிப் போயிருந்த நிலையை உணர்ந்து மனம் நொந்து அழுதார். மனம் மாறினார்.வாழ்வுப்வாதையை மாற்றினார். அவருடைய குடும்பம் எல்லையற்ற மகிழ்ச்சி பெற்றது.

இன்றைய வாசகங்கள் நம்மை உண்மையான மனமாற்றத்திற்கு அழைக்கின்றன.
 மனமாற்றம் மகிழ்வைத் தரக்கூடியது. மன அமைதியை ஏற்படுத்துகிறது.ஒருவருடைய மனமாற்றம் அவருடைய பழைய பிற்போக்குடைய வாழ்வை மாற்றி, புதிய முற்போக்கு சிந்தனைகள் நிறைந்த வாழ்வை வழங்குகிறது. ஆளுமைத் திறன்களை வளர்க்கிறது. சுற்றியுள்ள பலருக்கும் நன்மை தருபவராகவும் முன்மாதிரியாகவும் திகழ வழிவகுக்கிறது. ஆம் இத்தகைய மனமாற்றத்திற்காகவே நாம் அழைக்கப்படுகிறோம். "மனம் மாறுகின்ற ஒரு பாவியால் விண்ணுலகில் ஏற்படும் மகிழ்ச்சி ஒப்பற்றது "என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்வுப் பாதையை மாற்றி இறைவழியில் செலுத்த அழைக்கிறது. 

இதையே காணமற்போன ஆடு மற்றும் நாணய உவமை மூலம் இயேசு விளக்குகிறார். நமக்கு மிகவும் பிடித்தமான பொருள் காணாமல் போனால் அதைக் கண்டுபிடிக்கும் வரை மனது ஓய்வதில்லை. கண்டுபிடித்த பின் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இது நம் வாழ்வில் நடக்கக் கூடிய எதார்த்தமான உண்மை. அவ்வாறிருக்க, தம்மோடு இருக்க ,தன்னை அன்பு செய்ய ,தன் சாயலிலே படைக்கப்பட்ட பிள்ளைகள் ,
உலகத்தின் கவர்ச்சியால் தொலைந்து போகும் போது கடவுள் எவ்வளவு வேதனை அடைவார் என நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.நாம் தொலைந்து போன நேரங்களில்லாம் அன்போடும் இரக்கத்தோடும் நம்மை தேடும் கடவுள்  உண்மையான மனமாற்றத்துடன் நாம் திரும்பி வரும் போது நம்மைக் கண்டு ஆனந்தம் அடைகிறார். அது நாம் அடையும் மகிழ்ச்சியை விட பன்மடங்கு உயர்ந்தது.

இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டது போல உடலைச் சார்ந்த செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டால் உண்மையான நம்பிக்கையை இழந்து உலக மாயைகளில் நாம் தொலைந்து போக நேரிடும்.மனம் திரும்பி, கிறிஸ்துவை நம் ஒப்பற்ற செல்வமாகக் கருதி,  கடவுளிடம் திரும்பி வந்தால் விண்ணகத்தில் மகிழ்ச்சி உண்டாக நாம் காரணமாகிவிடுவோம். எனவே தொலைந்து போனாலும் கடவுளால் கண்டுபிடிக்கப்பட  விரும்புவோம். நம்முடைய மனமாற்றத்தின் மூலம் ஒப்பற்ற மகிழ்ச்சியை விண்ணகத்திலும் நாம் வாழும் மண்ணகத்திலும் ஏற்படுத்துவோம்.

இறைவேண்டல்

 தொலைந்து போன எங்களை உள்ளார்ந்த அன்போடு தேடிடும் இறைவா!  நாங்கள் உடல் சார்ந்த காரியங்களில் ஈடுபடுவதை விடுத்து உண்மையான மனமாற்றத்தால் நாங்கள் வாழும் இடங்களிலும் விண்ணகத்தில் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்த வரம் தாரும் ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

15 + 3 =