Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உண்மையான பெரியவர் யார்? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலத்தின் 25 ஞாயிறு; I: சாஞா: 2: 17-20; II : தி.பா: 54: 1-2. 3. 4,6; III: யாக்: 3: 16 - 4: 3; IV : மாற்: 9: 30-37
நாம் வாழும் இந்த உலகத்தில் தன்னைப் பெரியவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஏராளமான கூட்டம் இருக்கின்றது. பிறர்க்கு முன்னால் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் எண்ணற்ற மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழ்கின்றனர். தாங்கள் தான் பெரியவர்கள் பிறர் அனைவரும் தங்களுக்கு கீழ் தான் என்ற கருத்தியலையும் பலர் கொண்டுள்ளனர். ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் இனத்தின் பெயராலும் படிப்பின் பெயராலும் பணத்தின் பெயராலும் எண்ணற்ற பாகுபாடுகளை நம்முடைய சமூகத்தில் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்ட அவலநிலை இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மிக அதிகமாக இருந்தது.
உரோமையர்கள் யூதர்களை விடத் தங்களைப் பெரியவர்களாகக் கருதினர். யூதர்கள் பிற இனத்தார் சமாரியர்களை விடத் தங்களைப் பெரியவர்களாகக் கருதினர். இவ்வாறாக தங்களை பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளும் வழக்கம் அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டேதான் இருக்கிறது.
நாமும் நம்மை பல விதத்தில் பெரியவர்களாக் காட்டிக்கொள்கிறோம். கொஞ்சம் அதிகம் படித்திருப்பதால் பெரியவர்களாகி விடுகிறோம். சற்று திறமைகள் அதிகம் இருந்தால் பெரியவர்களாகக் காட்டிக்கொள்கிறோம். பணம், பதவி, தனக்குப் பின் தலையாட்ட ஒரு கூட்டம் இருந்தால் நாமெல்லாம் பெரியவர்களா?
நம்முடைய குடும்பத்தில் எப்பொழுது பிரச்சனை வருகின்றதென்றால் நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு நம்மையே பெரியவராக அடையாளப்படுத்தும் பொழுதுதான் என்று சொன்னால் மிகையாகாது. குடும்பத்தலைவர் என்னதான் உழைத்தாலும் குடும்பத் தலைவியின் ஒத்துழைப்போடு மட்டுமே சிறப்பான குடும்பத்தை அமைக்க முடியும். இவர்கள் யாரும் பெரியவர் சிறியவர் என்பதில்லை. இருவரும் சமம். இருவருக்கும் சம உரிமை உண்டு. இவ்வாறான புரிதல் குடும்ப வாழ்வில் இருக்கின்ற பொழுது கணவன் மனைவிக்கிடையே எந்த ஒரு பாகுபாடும் பிளவும் இருக்காது. ஆனால் நாம் வாழும் இந்த சமூகத்தில் கணவன் மனைவியை அடக்கியாள கூடியவராகவே பெரும்பாலும் இருக்கிறார். ஒரு சில இடங்களில் மனைவி கணவரை அடக்கி ஆளக்கூடியவராகவும் இருக்கிறார்.
உண்மையான பெரியவர் என்பவர் தன்னை மிகைப்படுத்தாமல் ,தன்னைப் போல பிறரையும் எண்ணுபவரே. அப்படிப்பட்ட மனிதரே பிறரின் தேவையை அறிந்து, உதவி செய்வார். துன்பத்தில் உடனிருப்பார். புரிந்து கொள்வார். அனைவருடனும் அன்பாய்ப் பழகுவார். ' பெரிய மனசு வேணும்' என்று கிராமத்தில் கூறும் வழக்கம் உண்டு. பெரிய மனசுதான் ஒரு மனிதரை உயர்ந்தவராக காட்டுகிறது. பணமோ பட்டமோ பதவியோ ஒரு மனிதனை பெரிதாக அடையாளப்படுத்த முடியாது. ஆனால் அந்த மனிதன் செய்கின்ற நல்ல செயல்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்படும்.
ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் எண்ணற்ற மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் சதுசேயர்களும் இருந்தபோதிலும் அவர்கள் பெரிதாக மக்களால் போற்றப் படவில்லை. மக்கள் அவர்களை பின்பற்ற தயாராகவும் இல்லை. ஆனால் இயேசுவைப் பின்பற்ற தயாராக இருந்தார்கள். அதற்கு காரணம் அவரின் உள்ளமும் எண்ணமும் செயலும் உயர்வாக இருந்தது. சின்னஞ்சிறு ஏழை மக்களுக்கும் பாவிகளுக்கும் உரிமைகள் இழந்தவர்களுக்கும் புது வாழ்வை வழங்கினார். தன்னுடைய சீடர்களை தனக்கு சமமாக நடத்தினார். நண்பர்களாகக் கருதினார். ஏன்? அவர்களின் பாதங்களைக் கழுவினார். பெரியவராய் உயர்ந்தார்.
நாமும் பெரியவர்களாகவாம். நம்மை மிகைப்படுத்தாமல் ,பிறரோடு ஒப்பிடாமல்,
நம்மோடு வாழக்கூடிய சின்னஞ்சிறு மக்களை அன்பு செய்து அவர்களுக்கு உதவும் பொழுதும் அவர்களில் இயேசுவைக் கண்டு பணிசெய்யும் போதும், வழிகாட்டும் பொழுதும் நாம் பெரியவர்களாகவும், பெரிய மனசு உடையவகளாகவும் மாறுகிறோம். அதில்தான் உண்மையான நிறைவு இருக்கின்றது.எனவே சிந்திப்போம். நம்மை வெறும் பேச்சால் பெரியவர்களாக்கிப் பெருமைப்படுத்தாமல், நம் இருத்தலால் செயல்களால் பெரியவர்களாக்கத் தயாரா?
இறைவேண்டல்
இறைவா! பெரியவரான நீர் எளியவரானீர். நாங்களும் உம்மைப் போல எளியவர்களாய் வாழ்ந்து அன்பிலும் பிறரன்புப் பணியிலும் பெரியவர்களாய் வாழ அருள் புரியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment