உண்மையான தலைமைத்துவம் எது? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -முதல் திங்கள்
புனித பேதுரு தலைமைப்பீடம் திருவிழா
I: 1 பேதூ:  5: 1-4
II:  தி.பா: 23: 1-3. 4. 5. 6
III: மத்: 16: 13-19

நம்முடைய தாய் திருஅவையில் எண்ணற்ற விழாக்களைக் கொண்டாடுகிறோம். அதிலும் குறிப்பாக சில நபர்களுக்குத் தான் அதிகமான விழாவினை  கொண்டாடுகின்றோம்.  ஆனால் இன்றைய நாளில் நம்முடைய கத்தோலிக்க திருஅவையில்   ஒரு தலைமைப்பீடத்திற்கு (Chair) விழாக் கொண்டாடி மகிழ்கின்றோம். 'Chair' என்பதற்கான லத்தீன் வார்த்தை Cathedra ஆகும். இந்த வார்த்தை தலைமைப்பீடத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. எனவேதான் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் தலைமை பேராலயத்தை 'Cathedral' என்று அழைக்கிறோம். மறைமாவட்ட ஆயர்கள் ஒவ்வொருவரும் பேதுருவின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர். எனவேதான் அனைத்து மறைமாவட்ட பேராலயங்களிலும் ஆயர்களுக்கென ஓர் இருக்கையானது இருக்கின்றது. இந்த நாளில் அகில உலகத் திருஅவையின்  தலைவராக இயேசு  பேதுருவை ஏற்படுத்தியதை நாம் நினைவு கொள்கிறோம்.  எனவே இந்த நாளில் பேதுருவின் தலைமைத்துவம் எவ்வாறு நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றது என்பது பற்றி பின்வருமாறு சிந்திப்போம்.

பேதுருவின் தலைமைத்துவம் ஆண்டவர் இயேசுவால் வழங்கப்பட்ட பொறுப்பாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பேதுருவிடம், “உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடை செய்பவை விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பவை விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்கிறார் (மத் 16: 18 -19). இயேசுவே பேதுருவை திருஅவையின் தலைவராக நியமித்தார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்தப் பகுதி இருக்கின்றது.

திருஅவையின் தலைவர்கள் பேதுருவைப் போல பாறையாக இருக்க வேண்டும். பேதுரு எந்த அளவுக்கு பலமானவரோ, அதே அளவுக்கு பலவீனமுமானவரும்கூட என்பதை அவருடைய வாழ்விலிருந்து அறிய முடியும். தன்னுடைய ஆர்வத்தின் மிகுதியால் பல்வேறு தவறுகளைச் செய்வார். அதன் பிறகு அதிலிருந்து வாழ்க்கைக்கு பாடங்களை கற்றுக் கொள்வார். இதுதான் அவரின் பலவீனமும் பலமுமாகும். இயேசு பேதுருவை  அழைத்தபோது தன் சகோதரர்களோடு இணைந்து பின்தொடர்ந்தார். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இயேசுவை பின்பற்றுவதால் என்ன கிடைக்கும் என்ற கேள்வியானது எழுந்தது.  இயேசு கடலில் நடந்த பொழுது தானும் நடக்க இயேசுவிடம் அனுமதி கேட்டு படகை விட்டு இறங்கினார். பலத்த காற்று வீசியவுடன், அவர் நம்பிக்கை இழந்தார். எனவே அவர் மூழ்கும் நிலைக்குச் சென்றார். பின்பு இயேசு அவர் துணிவோடு   இருக்க வழிகாட்டினார். அதன்பிறகு இயேசுவின் மீது பேதுரு நம்பிக்கை கொண்டு இறைநம்பிக்கை வாழ்வில் நிலைத்திருந்தார். இத்தகைய அனுபவங்கள்தான் பேதுருவை ஒரு பாறையாக மாற்றியது.

திருஅவையில் தலைமைத்துவப் பணியைச் செய்கின்ற திரு ஆட்சி பீடத்தின் தலைவர்களும் தங்களுடைய பலவீனத்தையும்  பலத்தையும்   ஏற்றுக்கொண்டு இறைநம்பிக்கையில் முதிர்ச்சியடைந்து பாறையாகத் தலைமைத்துவப்பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் 'மகிழ்ச்சியின் நற்செய்தி ' என்ற திருமடலில் ஒரு நல்ல ஆயருக்கு  இருக்கவேண்டிய மூன்று நற்பண்புகளை வாழ்வாக்க அழைப்பு விடுகிறார். 

முதலாவதாக,  ஒரு நல்ல ஆயர் என்பவர் மந்தைக்கு முன்பாக செல்ல வேண்டும்.  ஒரு ஆயர் இலக்குத் தெளிவோடு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைகளைச் சிறப்பான முறையில் வழிநடத்த முடியும். கரடு முரடான பாதைகளைக் கூட செம்மைப்படுத்தி ஒரு நல்ல ஆயர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைகளை  வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளார்.  மேலும் தான் வழிநடத்துகின்ற பாதையானது எப்படிப்பட்டது என்பதில் இலக்கு தெளிவோடு இருந்து அப்பாதையின் உண்மைத்தன்மையை மக்களுக்குச் சுட்டிக்காட்டி வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மையான தலைமைத்துவ பண்பு. தலைவரான இயேசுவும்  மந்தையாகிய  மக்களுக்கு முன்னால் தான் சென்று  அவர்களை மீட்பின் பாதையை நோக்கி வழிநடத்தினார். அதே போலத் தான் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரையும் இன்றைய திருஆட்சி பீடத்தின் தலைவர்கள் வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளனர். பேதுருவும் இயேசுவின் மனநிலையில் தான் மக்களை வழிநடத்தினார். 

இரண்டாவதாக,  ஒரு நல்ல ஆயர் மந்தைகளோடு உடன்பயனிக்க அழைக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் பயனிக்கும் அனைவரும் உற்சாகத்தோடு பயணிப்பது சற்று சவால் நிறைந்த ஒன்றாகும்.  எனவே நல்லவொரு ஆயன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்த கடமைப்பட்டுள்ளார். இதைத்தான் ஆண்டவர் செய்தார். இயேசு தான் செய்த  இறையாட்சிப் பணியில் சீடர்களோடும் மக்களோடும் உடனிருந்தார். அவர்களைச் சீரிய முறையில் திடப்படுத்தி இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்க வழிகாட்டினார். இவ்வாறுதான் பேதுருவும்  இயேசுவுக்குப் பிறகு பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியை பெற்றுக்கொண்டு ஆற்றலோடு திருஅவையை மந்தைகளோடு உடன் பயணித்து வழிநடத்தினார். 

மூன்றாவதாக நல்ல ஆயர் என்பவர் மந்தையின் பின்னால் செல்பவர் ஆவார். ஒரு நல்ல தலைவர் நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும். உருவாக்கிய பிறகு அவர்களை வழிகாட்டச் சொல்லி மந்தைகளின் பின்னால் செல்ல வேண்டும். இவர்தான் உண்மையான தலைவர். ஆண்டவர் இயேசுவும் ஒரு தலைவராக மந்தைகளை வழிநடத்திய பிறகும் தனக்குப் பின்பு இறையாட்சி பணியைச் சிறப்புடன் செய்திட பேதுருவையும் திருத்தூதர்களையும் தேர்ந்தெடுத்தார். இறையாட்சிக் கனவை நனவாக்க தான் ஏற்படுத்திய திருஅவையை   பாறையாகிய பேதுருவின் தலைமையில் இயேசு கட்டியெழுப்பினார். திருத்தூதர்களும் பேதுருவின் வழித்தோன்றல்களாய் திருஅவையை சீரிய முறையில் வழிநடத்தினர்.  

இயேசுவின் தலைமைத்துவம் உலகத் தலைவர்களுக்கு முன்மாதிரியான தலைமைத்துவம். இயேசு  தலைமைத்துவத்தைபிறருக்கும் பகிர்ந்து அவர்களும் தலைமைத்துவப் தோடு வாழ வழிகாட்டியுள்ளார். பேதுருவும் இயேசுவின் மனநிலையில் தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி திருஅவையைக் கட்டியெழுப்பினார்.    பேதுருவுக்கு பின்னால் வழித்தோன்றல்களாய் வந்த திருஅவைத் தலைவர்களும் இயேசுவின் மனநிலையில் திருஅவையை வழிநடத்தியதால்தான் திருஅவை இன்றளவும் உயர்ந்து நிற்கின்றது.  பேதுருவின் தலைமைப் பீடம் இறையாட்சியின் கனவை நனவாக்க உருவாக்கப்பட்ட பீடம். இது எல்லோரும் தலைமைத்துவதோடு வாழ்ந்து இறையாட்சியின் கனவை நனவாக்க அழைப்பு விடுக்கும் பீடம். எனவே இன்றைய நாளில் பேதுருவை போலவும் அவரின் வழித்தோன்றல்களைப் போலவும்   இயேசுவின் மனநிலையில் திருஅவையை வழி நடத்திட தேவையான அருளை அனைவரும் பெற்றுக்கொள்ள இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல் :
அன்புள்ள இயேசுவே ! பேதுருவைப் போல நாங்களும் உம்முடைய இறையாட்சி மதிப்பீட்டிற்கு உகந்த  பாறைகளாக மாறி உமக்குரிய மனநிலையில்  பிறரை வழிநடத்த தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

9 + 5 =