Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உண்மையான செல்வம் எது? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பதினொன்றாம் வெள்ளி
I : 2அர 11: 1-4, 9-18, 20
II : திபா 132: 11. 12. 13-14. 17-18
III: மத் 6: 19-23
ஒரு பெரியவர் தினம் தோறும் ஒரு பெட்டிக்கடைக்குச் சென்று நூறு ரூபாக்கு சில்லறை மாற்றி அதை அவர் செல்லும் வழியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது வழக்கம். ஒருநாள் அந்தக் கடைக் காரர் " பெரியவரே நீங்களே தனியாக தான் இருக்கிறீர்கள். வயது முதிர்ந்தும் விட்டது. தினமும் எதற்காக மற்றவருக்கு உதவுகிறீர்கள். அந்தப் பணத்தை சேர்த்து வைத்தால் உங்களுக்கு அவசர செலவுக்கு உதவுமல்லவா? " எனக் கேட்டாராம். அதற்கு அந்தப் பெரியவர் " நூறு ரூபாய் பெரிய பணமல்ல. ஆனால் அதைக் கொண்டு நான் செய்யும் சிறு உதவியால் எனக்கு புண்ணியம் சேருகிறதல்லவா. அப்புண்ணியம் என் தலைமுறைக்கு ஆசீர்வாதத்தைத் தரும் என நம்புகிறேன். இதுவே தான் நான் சேர்க்கும் பெரிய சொத்து " என்றார்.
இன்றைய நற்செய்தி வழியாக அழியாத நிலையான செல்வத்தை சேர்த்து வைக்கச் சொல்லுகிறார் நம் ஆண்டவர் இயேசு. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் இறந்த பின் ஆறடி நிலம் தான் அனைவருக்கும். அப்படி இருக்கும் போது நாம் ஓடி தேடி சொத்துக்களுக்காக அலைகிறோமே ஏன்! ஏனென்றால் அவற்றின் நிலையாமையை நாம் உணரவில்லை. அவை உண்மையல்ல மாயை என்ற எண்ணம் நம் அறிவுக்கு விளங்கவில்லை.
சிலருக்கு பணமும், நிலமும், நகையும் பெரிய சொத்தாகத் தெரியும். சிலருக்கு பதவியும் அதிகாரமும் புகழ்ச்சியும் முக்கியமானவையாகத் தெரியும். அவை எப்போது நம்மை விட்டுப் பிரியும் என்பது புரியாத புதிர்.
மாறாக நாம் செய்கின்ற நல்ல காரியங்கள், அவற்றால் நாம் சம்பாதிக்கும் நல்ல உறவுகள், அந்த உறவுகள் நம்மால் அடையும் மகிழ்ச்சி இவைதான் உண்மையான செல்வம். அவை நாம் மாண்ட பின்பும் நிலைத்து நிற்கும். அத்தகைய சொத்தைச் சேர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? உலகப் பற்றை அகற்றி இறைவனோடும் நம் சகோதர சகோதரிகளோடும் அன்பும் கொண்டு நற்காரியங்களை செய்துகொண்டே இருக்கவேண்டும். அழிந்து போகும் நிலையற்ற செல்வங்களை நாடுவதைத் தவிர்த்து அழியா செல்வமாம் இறையருளையும் உறவுகளையும் சேர்த்து வைக்க உழைப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! நிலையற்ற அழியக்கூடிய செல்வங்களின் மேல் பற்று வைக்காமல் அழியாத விண்ணகச் செல்வங்களை வாழும் நாளிலே நாங்கள் சேர்த்துவைக்க வரமருளும் ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment