Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உண்மையான அன்பு எது ! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் ஒன்பதாம் வியாழன்; I: தோபி: 6: 10-11; 7: 1bcde, 9-17; 8: 4-9a; II: திபா: 128: 1-2, 3, 4-5; III : மாற்: 12: 28-34
ஒரு பங்கில் கிறிஸ்தவர் ஒருவர் வசதியாக வாழ்ந்து வந்தார். அவர் கோவிலுக்கு காணிக்கைக் கொடுப்பதைவிட ஆதரவற்ற இல்லத்தில் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதிகமான உதவி செய்வார். ஒருமுறை கோவிலில் சிறிய கட்டுமானப்பணி நடந்து வந்தது. அப்பொழுது ஆலய நிர்வாகத்தினர் அந்த நபரிடம் நன்கொடை கேட்டனர். ஆனால் அவர் குறைந்த தொகையை நன்கொடையாகக் கொடுத்தார். இதை அவருடைய மகன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு ஆதரவற்ற குழந்தைகள் படிக்கின்ற இல்லத்திலிருந்து நன்கொடை பெற வந்தனர். அப்பொழுது அந்த நபர் ஐந்து லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார். இதைக்கண்ட அந்த நபரின் மகன் "இவ்வளவு பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் படிக்கின்ற இல்லத்திற்கு மட்டும் கொடுக்கிறீர்கள். ஏன் ஆலயத்திற்கு அதிகமாகக் கொடுக்கவில்லை ?" என்று கேட்டான். அதற்கு அந்த நபர் " நம்மோடு தேவையில் வாழ்பவர்களுக்கு உதவி செய்வது கடவுளுக்கே செய்யும் உதவியாகும். ஏனெனில் மனித சேவையின் வழியாகத்தான் கடவுளின் அன்பை முழுமையாகக் காணமுடியும். கோவிலுக்குக் கொடுப்பது தவறல்ல ; கோவிலுக்குக் கொடுப்பதைத் தாண்டி தேவையில் இருப்போருக்கு அதிகம் கொடுக்க வேண்டும். பிறரன்பின் வழியாகவே கடவுளை முழுமையாக அன்பு செய்ய முடியும் " என்று கூறினார்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அன்பின் மேன்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதன்மையான கட்டளை என்பது இறையன்பும் பிறரன்பும் இணைந்து செல்வதாகும். மறைநூல் அறிஞர், பரிசேயர்கள் மற்றும் யூத மக்கள் திருசட்டத்தையும் கடவுளின் கட்டளைகளையும் கடைப்பிடித்தாலே கடவுளை அன்பு செய்ய முடியும் என்று கருதினர். எனவே தங்களோடு வாழ்ந்த மனிதர்களை அன்பு செய்யாமல், கடவுளை மட்டும் அன்பு செய்தால் போதும் என்ற மேலோட்டமான புரிதலைக் கொண்டிருந்தனர். ஆனால் ஆண்டவர் இயேசு பிறரன்பில் தான் முழுமையான இறையன்பை அனுபவிக்க முடியும் என்று பறைசாற்றியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் எத்தனையோ மக்கள் அன்பிற்காய் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் நோய்த்தொற்றின் காரணமாக அன்பிற்குரியவர்களை நெருங்க முடியாமல் இருக்கின்றனர். அன்பிற்குரியவர்களை இழந்தும் வருகின்றனர். இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில் நம்மால் இயன்ற அன்புப் பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். பிறரன்பில் வளர்ந்து இறையன்புக்கு சான்று பகர தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
அன்பின் இறைவா! பிறரன்பின் வழியாக இறையன்புக்குச் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment