உண்மையான அதிகாரம் எது? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம் மூன்றாம் திங்கள்
I :எண்:  24: 2-7,15-17
II: திபா 25: 4-5. 6,7. 8-9
III : மத்: 21: 23-27

ஒரு ஊரில் களப்பணி செய்வதற்காக அருள்சகோதரி சென்றிருந்தார். அவர் வீடுகளை  சந்தித்துக் கொண்டிருந்தார். அவரவர் சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆசிரியர் பணி செய்கின்ற  தம்பதியினரின் வீட்டுக்கு சென்றார். அந்த வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது குடும்பத் தலைவரின் குரல் சற்று ஓங்கியிருந்தது. மனைவியும் ஆசிரியர். கணவரும் ஆசிரியர். கணவரை விட மனைவி தான் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனால் தன் மனைவியை அடக்கி ஆளக்கூடிய வார்த்தைகளால் அருள்சகோதரிக்கு முன்னால்  அதட்டினார்.  அப்போது அந்த அருள்சகோதரி "நீங்கள் இருவருமே ஒரே மாதிரியான பணிகள் தான் செய்கிறீர்கள். அப்பொழுது ஏன் இவ்வாறு உங்கள் மனைவியை மதிக்கத் தவறிவிடுகீறீர்கள்?" என்று கேட்டதற்கு "என் மனைவி அதிகம் என்னைவிட சம்பாதித்தாலும்,  நான் தான் குடும்பத் தலைவர். நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் " என்று அதிகாரத்தோடும் ஆணாதிக்க  சிந்தனையோடும் கூறினார். அந்த  அருள்சகோதரி மிக வருத்தத்தோடு அந்த வீட்டை விட்டுவிட்டு வந்துவிட்டார்.

நாம் வாழும் இந்த சமூகத்தில் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் எண்ணமே பல தலைவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த அதிகார எண்ணம் தன்னை விட யாரும் உயர்ந்துவிடக் கூடாது என்ற பொறாமையையும், வளர்ந்து வருபவர்களை தடுக்கி விழச்செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையும் தருகிது. அத்தோடு பிறரை அடக்கி ஆளவும் வழிதேடுகிறது.
இதைத்தான் நாம் மேற்கூறப்பட்ட நிகழ்வில் காண்கிறோம். ஒரே குடும்பத்திலேயே தன் சொந்த மனைவியின் வளர்ச்சியையே கணவனால் ஏற்றுக்கொள்ள இயலாமல் அதிகாரத்தோடு அடக்கி ஆள எண்ணும் போது பிறரை நாம் அடக்கி ஆள வழிதேடாதிருப்போமா?  சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

தாங்கள் தான் படித்தவர்கள், மறையை அறிந்தவர்கள் என்று அதிகாரத் தோரணையோடு நீண்ட தொங்கலாடைகளை அணிந்து வலம் வந்த யூத ராபிகளுக்கு இல்லாத கூட்டம் இயேசுவின் பின்னால் இருந்ததை சகித்துக்கொள்ள இயலாத யூதர்கள் இயேசுவிடம் குற்றம் காண விழைந்தனர்.ஆனால் விண்ணகத் தந்தையிடமிருந்து உண்மையான அதிகாரம் பெற்ற இயேசு ஞானத்தோடு பதிலளித்து அவர்களின் வாயடைத்தார் என இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. இயேசு அன்பாலும், பணிவாலும் ,தன் நற்குணங்களாலும் நல்வார்த்தைகளாலும் மக்களை அதிகாரம் செய்தார். அவருடைய அன்புக்குதான் மக்கள் அடங்கினர். 
எனில் உண்மையான அதிகாரம் எதுவென இயேசுவின் வாழ்க்கை நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறதல்லவா!

கிறிஸ்தவத்தின் படி அதிகாரம் என்பது அன்பு. அதிகாரம் என்பது பணிவிடை. அதிகாரம் என்பது ஞானம். அதிகாரம் என்பது மன்னித்தல். அதிகாரம் என்பது இன்சொல் பேசுதல். அதிகாரம் என்பது துன்பத்தில் துணையிருத்தல். அதிகாரம் என்பது நல்லதை துணிச்சலாக செய்தல். நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிகாரம் என எண்ணும் செல்வாக்கு, செல்வம்,  பணபலம், பதவி போன்றவையெல்லாம் அடிமைத்தனத்தின் அடையாளங்களே.
இச்சிந்தனைகளை   மனதில் இறுத்தி இயேசுவைப் போல உண்மையான அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நன்மைகளைச் செய்வோம். 

 இறைவேண்டல் 
எம் இறைவா!  அன்பென்னும் அதிகாரத்தால் எம் உள்ளங்களை ஆள்பவரே! உம் மகன் இயேசுவைப் போல உண்மையான அதிகாரத்தைக் கொண்டு நன்மைகள் செய்யும் மனிதர்களாய் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 3 =