உணர்வுகளையும் உறவினையும் மதித்து அமைதி வழி சமுகத்தைப் படைப்போம்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
I : மீக்:  5: 2-5
II: திபா: 80: 1-2. 14-15. 17-18
III: எபி: 10: 5-10
IV : லூக் 1: 39-45

நாம் வாழும் இந்த சமூகத்தில் அமைதி வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த அமைதியை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை. காரணம் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையாகும். நம்முடைய  உணர்வுகள் புரிந்து கொள்ளப்படாத நிலையில் மன அமைதியை இழக்கின்றோம். நாம் உறவுகளால்  புறக்கணிக்கப்படும் பொழுது மன அமைதியை இழக்கின்றோம். ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நமக்கு அமைதியின் அடையாளமாக இருக்கிறது. காரணம் நம்முடைய உணர்வுகளையும் உறவுகளையும் புரிந்து கொள்ளும் விதமாக ஆண்டவர் இயேசுவின் பிறப்பானது   இருக்கின்றது.

ஆண்டவர் இயேசுவின் பிறப்பு மனிதர்களாகிய நம்மை நம்மோடு நல்ல உறவு கொள்ளவும் பிறரோடும் நல்ல உறவு கொள்ளவும் கடவுளோடும் நல்ல உறவு கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றது. நான் வாழ்ந்த சமூகத்தில் 30000 கிலோ மீட்டருக்கு தள்ளியுள்ள முகநூல் நண்பர்களை நம்மால் இணையதளத்தின் வழியாக சந்தித்து முகமுகமாய் வீடியோ காலில் பேச முடிகிறது. ஆனால் நம்மோடு வாழக்கூடிய உறவுகளோடும் தேவையில் இருப்பவர்களோடும் நல்லுறவு கொள்ள முடிவதில்லை. இதுதான் நாம் வாழும்  இடத்திலேயே அமைதியை இழப்பதற்கு காரணமாக இருக்கின்றது. எனவே நாம் வாழும் இந்த வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்களாகவும் உறவுகளை மதிப்பவர்களாகவும் வாழ முயற்சி செய்வோம். இதுதான் உண்மையான மன அமைதியைக் கொடுக்கும்.

திருவருகைக் காலத்தின் நான்காம் வாரத்தில்  இருக்கின்ற நாம் அமைதியின் மெசியாவை வரவேற்க, பிறரின்  உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்வோம். இன்றைய நற்செய்தியில் கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளை சந்தித்த நிகழ்வை வாசிக்கிறோம். அன்னை மரியா தூய ஆவியின் வல்லமையால் இயேசுவைக் கருவாக கருத்தரித்தாள். இப்படிப்பட்ட சூழலில் கூட தன் உறவினரான எலிசபெத்து முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என கேள்விப்பட்டதும் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் நடந்து சென்று உதவி செய்ததாக  வரலாற்று மரபுகள் எடுத்துரைக்கின்றது.  இந்த செயல்பாடு அன்னை மரியாவின் உயர்ந்த மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறது. அன்னை மரியாளின் இளம்வயதிலேயே தூய ஆவியின் வல்லமையால் கருவுற வேண்டிய அந்த நிலை ஏற்பட்டாலும், தன்னுடைய உடல் நிலையையும்  பொருட்படுத்தாமல் ஒரு வீரப் பெண்ணாக எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்தார். அதிலும் குறிப்பாக யூத சமூகத்தில் குழந்தைகள் கடவுளின் கொடைகளாகக் கருதப்பட்டனர். குழந்தை இல்லாதவர்கள் கடவுளின் சாபத்தைப் பெற்றவர்களாக் கருதப்பட்டனர். ஆனால் கடவுள் திருமுழுக்கு யோவானை எலிசபெத்தம்மாளின் வழியாக பிறக்க வைத்தது  கடவுளின் திருவுளமாக இருக்கின்றது. எனவே இந்த மகிழ்ச்சியின் செய்தியை கொண்டாடும் விதமாகவும் எலிசபெத்தம்மாளின் உணர்வுகளையும் உறவுகளையும் புரிந்து கொள்ளும் விதமாக இவர்களின் சந்திப்பு அமைந்துள்ளது. இவர்களின் சந்திப்பு பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே உள்ள இணைப்புப் பாலமாக இருக்கின்றது.  திருமுழுக்கு யோவான் பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினர்களின் நிறைவாக இருக்கின்றார். ஆண்டவர் இயேசு புதிய ஏற்பாட்டின் தொடக்கமாக இருக்கின்றார். புதிய ஏற்பாட்டின் தொடக்கமாகிய ஆண்டவர் இயேசுவை அறிமுகப்படுத்தி ஆயத்தப்படுத்தியவர் திருமுழுக்கு யோவான் ஆவார்.

அன்னை மரியாள் எலிசபெத் அம்மாளின் உணர்வுகளையும் உறவுகளையும் சரியாகப் புரிந்து கொண்ட காரணத்தினால் தான் அவரால் அந்த அளவுக்கு உதவி செய்ய முடிந்தது. கடவுளும் நம்முடைய உறவுகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டதால்தான் தன் ஒரே மகனை அமைதியின் அடையாளமாகவும் மீட்பின்  அடையாளமாகவும் இந்த உலகத்திற்கு அனுப்ப முடிந்தது. இஸ்ராயேல் மக்கள்  480  ஆண்டுகளாக அடிமைகளாக இருந்த சூழலில் கடவுள் அவர்களுடைய  உணர்வுகளை புரிந்துகொண்டு உறவைப் புதுப்பித்த காரணத்தினால்தான் மோசேயின்  வழியாக அவர்களுக்கு  விடுதலை அளித்தார்.  

எனவே இன்றைய நற்செய்தி வாசகம் நம்மைப் பிறரின் உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும்  உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாகவும் வாழ அழைப்பு விடுக்கின்றது. நம்மோடு வாழக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உடன் பயணிப்பவர்கள் போன்றவர்களின்  உணர்வுகளை மதிக்கின்ற பொழுது,  நாம் அவர்களோடு உறவை புதுப்பித்துக்கொள்ள முடியும். அதன்? வழியாக இயேசு கொண்டு வந்து அமைதியை நம்மால் முழுமையாகச் சுவைக்க முடியும். எனவே இயேசு தருகின்ற அமைதியை நாமும் சுவைத்திட அன்னை மரியா கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருக்க முயற்சி செய்வோம். நம்மால் முடிந்தவரை ஏழை எளிய தேவையிலுள்ள மக்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் கொண்டாடுகின்ற கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு மன அமைதியை வழங்கக் கூடியதாக இருக்கும். நாம் ஒவ்வொரு முறையும் உதவி செய்கின்ற பொழுது நமக்குள்ளே ஆத்ம திருப்தி ஏற்படும். அந்தத் திருப்தி நமக்கு முழுமையான அமைதியைக் கொடுக்கும். எனவே அன்னை மரியாளைப் போல பிறரின் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் நம்மால் முடிந்தவரை முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்வோம். அதன் வழியாக இறைவன் தருகின்ற  நிலையான அமைதியை பெறுவோம். அதற்கு தேவையான நல்ல மனநிலையைக் கேட்போம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  மன அமைதிக்காக ஏங்கும் அத்தனை நல்ல உள்ளங்களையும் ஆசீர்வதித்து, பிறரின் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம்  கொடுக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 6 =