இறைவார்த்தையை வாழ்பவர்களாக மாறத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் ஆறாம் புதன்
மு.வா: யாக்கோபு  1: 19-27
ப.பா :  திபா: 15: 2-3a. 3bc-4ab. 4cd,5
ந.வா:  மாற்கு:8: 22-26

 இறைவார்த்தையை வாழ்பவர்களாக மாறத் தயாரா? 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மை இறைவார்த்தையை கேட்பதோடு நின்றுவிடாமல் வாழ்வாக்கவும் வேண்டுமென அழைக்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்வே இறைவார்த்தையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இவ்வுலகமே கடவுளின் வார்த்தையால் தான் உண்டானது.  அவ்வார்த்தையாலேதான் உலகமும் அதிலுள்ள உயிர்களும் பலுகிப் பெருகி இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.அதே வரிசையில் நமக்குள்ளும் உயிரின் ஊற்றாய் இருப்பது இறைவார்த்தையே. அவ்வார்த்தை நமக்கு உயிரளிக்கிறது என்பதை உணர்வதோடு மட்டும் நின்றுவிடாமல்,  நம்முடைய எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் ,வாழ்வாகவும் இறைவார்த்தை விளங்குகின்றது என்பதை நாம் மெய்ப்பிக்க உழைக்க வேண்டும் என்பதே இன்று நமக்கு வழங்கப்படுகின்ற அழைப்பு.

முதல் வாசகத்தில் புனித யாக்கோபு இறைவார்த்தையை வாழ்வாக்காதவர்களை தன்னை கண்ணாடியில் பார்த்துவிட்டு சிறிது நேரத்திலேயே தான் எப்படி இருந்தோம் என மறந்து போகும் மனிதருக்கு ஒப்பிடுகிறார். இவ்வொப்புமை நமக்கு வேடிக்கையாக இருந்தாலும் ஆழமான பாடத்தை படிப்பிக்கின்றது. மதிமயங்கியவனும் அறிவில் குன்றியவனும்தான் தன்னையே மறப்பான். அவன் சுயநினைவு இன்றி இருப்பான். இறைவார்த்தையை கேட்டுவிட்டு அதை செயல்படுத்தாமல் இருந்தால் நாமும் சுயநினைவு இழந்த அல்லது மதிமயங்கிய அறிவிலிகளைப் போன்றவர்களே. நம்மால் நமக்கும் பயனில்லை. உலகிற்கும் பயனில்லை. நமக்கு உயிரளித்த வார்த்தையும் அங்கே தன்னுயிரை இழந்து கொண்டிருக்கின்றது எனலாம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு பார்வையிழந்தவனுக்கு பார்வை அளிக்கிறார். அப்பார்வை இழந்தவன் முதலில் பார்வை பெற ஆரம்பிக்கும் போது மனிதர்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்கள் போல தெரிகின்றார்கள். ஆனால் அசைகின்றார்கள் எனக் கூறுகிறார். இறைவார்த்தையால் நாம் ஒளிபெறாத போது நாமும் அசைகின்ற மரத்திற்கே சமம் என்ற கருத்து நமக்கு புலப்படுகிறது.

அன்புக்குரியவர்களே நாம் அறிவிலிகளாகவோ சுயநினைவு அல்லாதவர்களாகவோ மரங்களைப் போலவோ வாழ அழைக்கப்படவில்லை. மாறாக இறைவார்த்தையால் உயிரோட்டம் பெற்றவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.இறைவார்த்தையை நம் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு நாம் செய்ய வேண்டியவை எவை? இறைவார்த்தை கூறியபடி  துன்புறுவோர்க்கும், தேவையில் உள்ளோர்க்கும் உதவுதலும் உலகால் நாம் கறைபடாத படி காத்துக்கொள்தலுமே. எனவே இறைவார்த்தையை வாசிப்போம். தியானிப்போம். செயல்படுத்துவோம். வாழ்வாக்குவோம்.

 இறைவேண்டல் 
வார்த்தையாம் இறைவா! உம் வார்த்தைகளுக்கு எங்கள் வாழ்வால் உயிரோட்டம் அளிக்க அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 6 =