இறைவன் செய்த அருஞ்செயல்களை போற்றுவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Miracles

திருவருகைக் காலத்தின் நான்காம் செவ்வாய் - I. 1சாமு 1:24-25; II. 1சாமு 2:1,4-5,6-7,8; III. லூக்: 1:46-56

இரு சிறுமிகள் ராணியும் மேரியும் பள்ளி முடிந்ததும் சேர்ந்து தங்கள் வீடுகளை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். ராணி விடாமல் பேசிக்கொண்டே வந்தார்.  மேரியோ அமைதியாக வந்தார். இதனால் பேசிக்கொண்டே வந்த ராணி கோபமடைந்தார். தான் பேசிக்கொண்டே வருவது அவருக்கு பிடிக்கவில்லையோ என எண்ணி ,அமைதியாக வருவதன் காரணத்தை கேட்ட போது, தான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வருவதாகக் கூறினார் மேரி. ஆச்சரியம் அடைந்த ராணி என்ன பக்தி அதிகரித்து விட்டதா என்று கிண்டலாய் கேட்டபோது மிகப் பொறுமையாக ஒவ்வொரு நாளும் நாம் அடைந்த நன்மைகளை நினைத்துப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும். நன்றி சொல்வதால் நம் வாழ்வு ஏற்றம் பெரும். பிறருக்கு நன்மை செய்யவும் நாம் தூண்டப்படுவோம். அதோடல்லாமல் நம் எண்ணங்கள் உயர்வடையும். கடவுளின் உடனிருப்பை நாம் அதிகமாக அனுபவிக்க முடியும் என்று கூறினார்.

இன்றைய  வாசகங்களில் நன்றி உணர்வால் நிறைந்து இறைவனுக்கு நன்றிப்பலி செலுத்தும் இருவரை நாம் காண்கிறோம்.

முதலாவதாக குழந்தைக்காக ஏங்கி இறைவனிடம் மனமுருகி வேண்டிய அன்னா. தன் வேண்டுதலை நிறைவேற்றி சமூகத்தில் தனக்கிருந்த அவப்பெயரை நீக்கிய இறைவனுக்கு நன்றிப்பலியாக தன் மகன் சாமுவேலை கோவில் காணிக்கையாக்குகிறார்.நாமும் பல வேண்டுதல்களை இறைவனிடம் கேட்கிறோம். அவற்றுள் பலவற்றை நாம் பெற்றுக்கொள்கிறோம். அவற்றிற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோமா? நிச்சயமாக சொல்கிறோம். ஆயினும் சில நேரங்களில் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைத்து நினைத்து ஏற்கனவே கடவுள் செய்த நன்மைகளை மறந்து விடுகிறோம். அன்னாவைப் போல நன்றி உணர்வுள்ளவர்களாய் மாற இவ்வாசகம் நம்மை அழைக்கிறது. 

நற்செய்தியில் அன்னை மரியாவின் புகழ்ப்பாடலை நாம் வாசிக்கிறோம். மிகவும் அதிகமாக நாம் பயன்படுத்தும் விவிலியப்பகுதி இது. மிகுந்த ஆழமான அர்த்தம் கொண்டது. இப்புகழ்பாடலில் அன்னை மரியா கடவுளின் இரக்கத்தையும் அவர் வாக்கு மாறாதவர் என்பதையும் எடுத்துக் கூறுகிறார். கடவுளின் திருவுளத்தை ஏற்றவராய், இறைமகனை வயிற்றில் சுமந்தவராய் தான் பல இடர்கள் அனுபவிக்கப் போவதை அறிந்திருந்தும் உடன்படிக்கையின் கடவுள் தன்னைக் காப்பார் என்ற நம்பிக்கையில் தன் புகழ்ச்சியைப் பாடுகிறார் அன்னை மரியா.

நம் வாழ்வில் இறைதிருவுளம் நிறைவேறும் போது அது கடினமானதாகவே தோன்றினாலும் அதன் மூலம் இறைவன் நம்மை உயர்த்தக் காத்திருக்கிறார் என அன்னை மரியாவைப் போல நம்பி நன்றி செலுத்தவே அன்னையின் புகழ்ப்பா வரிகள் நம்மை அழைக்கின்றன. எனவே நாம் கடவுள் நமக்கு செய்த அருஞ்செயல்களை நினைவுகூர்ந்து நன்றிகூற நம்மைப் பழக்கப்படுத்துவோம். இறை திருவுளத்தை மனமார ஏற்றுக்கொள்வோம். பிறர் மூலம் நன்மைகள் அடையும் போதும் நம் நன்றி உணர்வுகளை வெளிப்படுத்துவோம். நம் வாழ்வு நிச்சயம் ஏற்றம் பெரும். அதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 

நன்மைகளால் எம்மை நிறைப்பவரே! எம் வாழ்வில் நீர் செய்த எல்லா நன்மைகளுக்கும் நாங்கள் நன்றியுடன் உம்மைப் புகழவும்,உம் திருவுளத்தை நம்பி வாழ்ந்து நன்மை பெறவும் வரம் தாரும். நாங்களும் பிறருக்கு நன்மைகள் செய்பவர்களாக வாழும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 0 =