இறைவனை நம்பி புது வாழ்வு பெறுவோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -நான்காம்   திங்கள்; I: எசாயா:65:17-21 II:  திபா:  29:2,4-6,11-13; III: யோவான்:4:43-54

வளர்ந்து வரும் இவ்வுலகில் எல்லாவற்றிலும் புதுமையையே நாம் விரும்புகிறோம். புதுவித உணவுகள், புதிய வடிவங்களில் ஆடைகள், பயன்படுத்தும் அலைபேசி,மின்சாதனங்கள் போன்றவற்றில் புதிய படைப்புகள் என புதியவற்றை காணும் போது நமது மனம் தானாக அவற்றை நாடிச்செல்கிறது.
அதே போல புதியவை வரும்பொழுது பழையவை அனைத்தும் அகற்றப்படுகின்றன.நம் பார்வையிலிருந்தே மறைந்து போகின்றன.
இவ்வாறாக எல்லாவற்றிலும் புதுமையை விரும்பும் நாம் ,ஏன் நமது பழைய இயல்புகளைக் களைய விரும்புவதில்லை? நம்முடைய எண்ணங்களில் புதுமை இல்லை. நம்முடைய செயல்முறைகள்,பேச்சு,பழக்க வழக்கங்கள் மாறுவது இல்லை. "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்"என்ற பழமொழிக்கு ஏற்ப மாற்றத்திற்கு நாம் ஈடுகொடுப்பதில்லை.

ஆனால் கடவுள் ஒரு புதுமைவாதி. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள்"
".இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை." என இறைவாக்கினர் எசாயா வழியாகக் கூறுகிறார்.இறைவன் இவ்வாறு கூறியதன் அர்த்தமென்ன? புதிய விண்ணகம் புதிய மண்ணகம் என்பது புதிய வாழ்வைக் குறிக்கிறது. பழைய பாவ வாழ்வு அகற்றப்பட்டு மனமாற்றம் மற்றும் மன்னிப்பின் வழியாகப் பெறப்பட்ட புதுவாழ்வு அது. பாவத்தால் பிற நாடுகளில் அடிமைகளாய் நம்பிக்கை இழந்து  வாழ்ந்த மக்களுக்கு கொடுக்கப்படும் புது நம்பிக்கையைக் குறிக்கிறது இவ்வார்த்தைகள். இதனால் பழையவை எவையும் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. கடந்த காலம் மறைந்து போய்விடும் என்பதுதான் அவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தம்.

இத்தகைய புது வாழ்வு பெற நாமும் நம் கடந்த காலத்தை விட்டு கடந்து வர வேண்டும். முழுமையான மனமாற்றம் வேண்டும். நம்மிடமுள்ள தேவையில்லாத பிறருக்குப் பயன்தராத பழைய இயல்புகளைக் களைந்தால் நமது வாழ்வும் புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் போல மாறும்.மீண்டுமாய் புதுவாழ்வு பெற நம்பிக்கை என்ற பண்பும் மிக மிக முக்கியமாகிறது.

நற்செய்தியில் நாம் காணும்  அரசு அலுவலர் நம்பிக்கையால் சாகும் தருவாயில் இருந்த தன் மகனுக்கு புதுவாழ்வைப் பெற்றுத்தந்தார். கலிலேயாவில் உள்ள தன் சொந்த மக்களே இயேசுவை நம்பாததால் அவரால் அங்கு வல்ல செயல்கள் பல புரிய இயலவில்லை என நாம் வாசிக்கிறோம். இந்நிலையில் யூதரல்லாத அரசு அலுவலர் ஒருவர் இயேசுவின் வல்ல செயல்களை நம்பி தன் மகன் பிழைத்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் இயேசுவை  அணுகினார். ஆனால் இயேசுவோ "அருஞ்செயல்களைக் காணாவிட்டால் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்று மக்களின் பழைய நம்பிக்கையில்லாத நிலையைச் சுட்டிக்காட்டினார். அந்த அரசு அலுவலரோ அப்பழைய இயல்பை மாற்றியவராய் "என் மகன் இறப்பதற்குள் வாரும் "என தன் நம்பிக்கையை இன்னும் ஆழமாக வெளிப்படுத்தி இயேசுவின் வார்த்தையைக் கேட்டு நம்பிச் சென்றார். அவருடைய மகனும் நோய் நீங்கி புதுவாழ்வு அடைந்தான்.

எனவே நாமும் நம்முடைய பழைய பாவ இயல்புகளையெல்லாம் களைந்து,நம்பிக்கையில் வளர்ந்து புது வாழ்வு பெற இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

புது வாழ்வு வழங்கும் இறைவா! நாங்கள் எங்களிடமுள்ள தேவையற்ற பழைய இயல்புகளைக் களைந்து, நம்பிக்கையில் வளர்ந்து நீர் அருளும் புது வாழ்வைப் பெற்று மகிழ்ந்திட வரமருளும். ஆமென்.

Add new comment

11 + 2 =