Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவனுக்கு இருப்பதைக் கொடுப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் ஒன்பதாம் சனி; I: தோபி: 12: 1, 5-15, 20; II: தோபி: 13: 2, 6efgh, 7, 8; III : மாற்: 12: 38-44
புனித ஜான் போஸ்கோ சிறு குழந்தையாக இருந்த பொழுது ஒரு முறை ஆடு மேய்க்கச் சென்றார். அவரோடு மற்றொரு நண்பரும் ஆடு மேய்க்க வந்தார். உணவு நேரம் வந்தபொழுது தன்னோடு வந்திருந்த அந்த மற்றொருவர் உணவு பாத்திரத்தை திறந்த பொழுது அந்த உணவு கெட்டுப் போன நிலையில் இருந்தது. இதை கண்ட ஜான் போஸ்கோ தன்னிடமிருந்த நல்ல ரொட்டித் துண்டை அவருக்கு கொடுத்துவிட்டு, கெட்டுப்போன உணவை தனக்கு வாங்கிக்கொண்டார். நல்லவற்றை பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல பண்பானது புனித ஜான் போஸ்கோவுக்கு இருந்தது. இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள நல்ல மனநிலை வேண்டும். கடவுள் நமக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்துள்ளார். நாம் அவருக்கு கைமாறாக எதைக் கொடுக்க முன் வருகின்றோம்?
நம்மிடம் இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் பண்பு என்பது மனிதப் பண்பு. நம்மிடம் இருப்பதெல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் பண்பு என்பது இறைப் பண்பு. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன் மனைவியின் நகையை விற்று பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். இருப்பதைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இவரை ஒரு மிகச்சிறந்த மாமனிதராக மாற்றியுள்ளது.
நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்பது முக்கியமல்ல ; நம்மிடம் எத்தகைய மனநிலை இருக்கின்றது என்பதுதான் உண்மை. இருப்பதை பிறருக்கு கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஏழை கைம்பெண்ணின் காணிக்கையை இயேசு பாராட்டியுள்ளார். கோவிலுக்கு காணிக்கை செலுத்திப் பலி செலுத்துவது என்பது யூத சமூகத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. இயேசு காணிக்கைப் பெட்டியின் முன்பாக அமர்ந்து காணிக்கைப் போடுவதைக் கவனித்து வந்தார். அந்த காணிக்கைப் பெட்டியில் செல்வந்தர்கள் பலர் காணிக்கை போட்டனர். செல்வர்கள் அனைவரும் அதிகம் இருப்பதிலிருந்து குறைவாகப் போட்டனர். ஆனால் அந்த ஏழை கைம்பெண் தன்னிடம் இருப்பதை அனைத்தையும் கொடுக்க முடிவு செய்தார். இத்தகைய தன்னலமற்ற தியாக மனநிலையை இயேசு பாராட்டியுள்ளார்.
ஏழைக் கைம்பெண்ணின் இச்செயலிலிருந்து நாமும் வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
ஏழை கைம்பெண்ணைப் போல கடவுளுக்கு நம்மால் இயன்றவற்றை கொடுக்க முயற்சி செய்வோம். கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் நம்மிடம் இருப்பதைத் தேவையில் இருப்பவருக்கு கொடுக்க நாம் அழைக்கபட்டுள்ளோம்.
ஏழைக் கைம்பெண் துணிச்சல் நிறைந்தவராக இருந்திருக்கிறார்.
யூத சமூகத்தில் பெண்கள் இரண்டாம்தர குடிகளாக கருதப்பட்டனர். அதுவும் கைம்பெண்கள் மிகவும் வஞ்சிக்கப்பட்டார்கள். இருந்தபோதிலும் மனத் துணிவோடு ஆலயத்திற்கு வந்து காணிக்கை செலுத்தினார். அதே போல நம்முடைய சமூக வாழ்வில் மனத் துணிவோடு அனைத்திலும் ஈடுபட முயற்சி செய்வோம்.
யூத சமூகத்தில் ஆலயத்தில் காணிக்கை செலுத்துதல் என்பது மக்களுக்கு கொடுக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்டக் கடமையாக இருந்தது. தனக்கு ஆதரவு இல்லை என்ற போதிலும் இந்த ஏழைக் கைம்பெண் ஆலயத்திற்கு வந்து கடவுளுக்குக் காணிக்கைச் செலுத்துவதன் வழியாகத் தன் கடமையை நிறைவேற்றினார். கடவுள் வழியாக பெற்ற நன்மையை நினைத்து காணிக்கை வழியாக நன்றி செலுத்தினார். அதேபோல உழைப்பின் பலனாக நம்முடைய அன்றாட வாழ்வில் பெறுகின்ற பலனை காணிக்கையாகக் கடவுளுக்குக் கொடுக்க முயற்சி செய்வோம்.
நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுள் ஒவ்வொருநாளும் எவ்வளவோ அருள் நலன்களை நமக்கு கொடுத்து வருகின்றார். அவற்றை பெற்றுக் கொள்கின்ற நாம் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விதமாக ஏழைக் கைம்பெண்ணைப் போல, இருக்கும் அனைத்தையும் கொடுக்காவிட்டாலும் இருப்பதில் குறைந்த அளவாவது கடவுளுக்கும் அவர் சாயலில் படைக்கப்பட்ட மக்களுக்கும் கொடுக்க முயற்சி செய்வோம். கடவுளுக்குக் கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்வும் நிறைவும் இருக்கின்றது. கடவுளுக்கு நம்மால் இயன்றவற்றை கொடுக்கத் தயாரா?
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! அன்றாட வாழ்வில் எங்களால் முடிந்தவற்றை பிறரோடு பகிர்ந்து இறைவனுக்கு காணிக்கை செலுத்த நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment