இறைவனின் பார்வையில் அனைத்தும் தூய்மையே! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


 பாஸ்கா காலம் -நான்காம் திங்கள்
I: திப: 11: 1-18
II: தி.பா: 42: 1-2; 43: 3. 4 
III : யோவான் 10: 1-10

 

அன்றைய இஸ்ரயேலர் கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகளைத் திரித்து தங்களுடைய விருப்பத்திற்கேற்ப பல கட்டளைகளை எழுதினர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இக்கட்டளைகளின் அடிப்படையில் தூய்மை என்பதற்கு அவர்கள் மிக முக்கியத்துவம் அளித்தனர். கை கழுவுவது,பாத்திரங்கள் கழுவுவது தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றுவது போன்றவற்றை மிகத்துல்லியமாகக் கடைபிடித்தனர். எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் , எவற்றை விலக்க வேண்டும், தூய்மையானவை எவை என பட்டியல் இட்டு வைத்தனர். பொருட்கள் மட்டுமல்ல யூதர்கள் அல்லாத பிற இனத்தவர் கூட அவர்களின் பார்வையில் தூய்மையற்றவர்கள் தான். இத்தகைய மனநிலையை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதர்களும் கொண்டிருந்தனர்.

பேதுருவும் இதற்கு விதிவிலக்கில்லை. பேதுருவின் இம்மனநிலையை மாற்றவும் அவர்மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களின் மனநிலையை மாற்றவும் கடவுள் திருஉளம் கொண்டார். பேதுருவின் கனவில் தூதர் மூலம் "கடவுள் தூய்மையாக நினைப்பதை நாம் தீட்டாக நினைக்கக் கூடாது" என்ற செய்தியைத் தந்து யூதக்கிறிஸ்தவர்களின் தவறான மனநிலையை மாற்றுகிறார் ஆண்டவர்.

இன்றைய சமூகத்தில் தீண்டாமை ஓரளவு ஒழிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் ஒழிக்கப்படாத தீண்டாமை எண்ணங்கள் நம்மில் இருக்கத்தான் செய்கிறது.
சுத்தம் செய்கிற மனிதர்கள் அருகே அமர யோசிப்பவர்கள் நம்மில் எத்தனைபேர்? இன்னும் பல கிராமங்களில் சாதிய அடிப்படையில் கோவில்களில் வழிபாடு நடைபெறுகின்றன என்பதை நம்மால் மறுக்க முடியுமா? ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரை வேற்றுகிரக மனிதரைப் போல் தள்ளிவைத்துப் பாகுபாடு காட்டும் பழக்கம் நம்மில் இல்லையா? 

யூதர், பிற இனத்தவர் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும்  அன்பை வழங்கிய கிறிஸ்துவைப்
பின்பற்றுகிறோம் என சொல்லிக்கொண்டு பிற சமயத்தவரைப் பற்றி அவதூறாகப் பேசும் சிலரும் நம்மிடையே உள்ளனர் என்பதை நிச்சயமாக நாம் மறுக்க இயலாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னை ஆயனாகக் காட்டுகிறார். நல்ல ஆயனாக அவர் முன் நடக்க அவருடைய குரல் கேட்டு நாம் அவர் பின்னே செல்ல வேண்டுமென ஆசிக்கிறார். பிற இனத்தவரை அன்பு செய்த, தீட்டாகக் கருதப்பட்ட தொழுநோயாளரைத் தொட்டு குணமாக்கிய, தூய்மையற்றவர் என கருதப்பட்ட சமாரியப் பெண்ணுக்கு ஆன்ம விடுதலை நல்கிய அதே இயேசுவை நாமும் பின்பற்றி யாரையும் தூய்மையற்றவர்களாய்க் கருதி ஒதுக்கி வைக்காமல் அனைவரும் மீட்புப் பெற நாமும் கருவிகளாவோம்.

இறைவேண்டல்

உம்முடைய படைப்புக்களைத் தூய்மையாகவும் உயர்வாகவும் கருதி அனைவரும் மீட்பு பெற உழைக்கும் கருவியாக என்னை மாற்றும். ஆமென்.

Add new comment

11 + 6 =