இறைவனின் கட்டளையைக் கடைபிடிக்க முயலுவோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


கிறிஸ்து பிறப்பு காலம் (29.12.2020) - I. மு.வா: 1 யோவான்:2:3-11; II. திபா: 96:1-2,2-3,5-6; III. லூக்: 2:22-35

ராஜாவும் அசோக்கும் நண்பர்கள். எங்கு பார்த்தாலும் ஒன்றாக சுற்றிக்கொண்டிருப்பார்கள். சாப்பிடுவது, விளையாடுவது, பொருட்கள் வாங்கச் செல்வது, சுற்றுலா செல்வது, கேளிக்கைகள் மற்றும் வாழ்க்கையின் சுவாரசியத்தை ரசிப்பது என எல்லா மகிழ்ச்சியான காரியங்களுக்கும் ஒன்றாகச் சுற்றுவார்கள்.நல்ல நண்பர்கள் எனப் பெயர் எடுத்தார்கள். இச்சமயத்தில் ஒருநாள் ராஜாவுக்கு ஏதோ அவரசமான உதவி தேவைப்பட்டதால் அசோக்கை தனக்கு உதவுமாறு தொலைப்பேசி வழியாக அழைத்தார். ஆனால் அவரோ வீட்டிலிருந்துகொண்டே தான் வெளியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு தொலைப்பேசியைத் துண்டித்துவிட்டார். அதைக் கண்ட அசோக்கின் தாய் "நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு  ஒன்றாக ஊர்சுற்றினால் மட்டும் போதாது. நட்பின் இலக்கணமே தேவையில் உடனிருப்பது. அதுதான் உண்மையான அன்பு. நீ பொய்யாகப் பழகுகிறாய்" என அசோக்கை மிகவும் கடிந்து கொண்டார்.

மேற்கண்ட நிகழ்வு நமக்குக் கூறுவது என்ன? நம்மில் எத்தனை பேர் நிகழ்வில் கண்ட அசோக்கைப் போல பொய்யாகப் பழகுகிறோம்? சிந்திப்போம்.

இன்றைய முதல்வாசகம் நம்மை கடவுள் இயேசு வழியாக நமக்குக் கொடுத்த அன்புக் கட்டளையை வாழ்வாக்கி நமக்கும் பிறருக்கும் உண்மையுள்ளவர்களாக வாழ அழைக்கிறது. இவ்வுலகம் நம்மை கிறிஸ்தவர் என அறிந்து கொள்ள பயன்படுத்தும் அளவுகோல் அன்பு. அன்பும் நட்பும் உள்ள இடத்தில் தான் இறைவன் உறைவார். இந்த அன்பை நம்முடைய வாழ்வாக மாற்றுவது தான் கடவுளின் கட்டளை.அவருடைய இக்கட்டளையை நாம் கடைபிடிக்காத போது நாம் பொய்யர்கள். கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்கிறேன், அவருக்குப் பணி செய்வேன், அவருக்குக் காணிக்கை செலுத்துவேன் என வெளிப்படையாகச் சொல்லித் திரியும் நாம் நம்முடைய சகோதர சகோதரிகளை அன்பு செய்து பணிபுரியவில்லை என்றால் நம்முடைய கூற்றுகள் அத்தனையும் பொய்யாகிவிடும் .மேலே கூறப்பட்ட நிகழ்வில் காண்பதைப் போல அன்பும் நட்பும் பெயரளவில் தான் இருக்குமே தவிர உண்மையாக இருக்காது.

இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடிப்பதே அவரை அறிந்து கொள்வதற்கான வழி என்கிறார் புனித யோவான். இன்று நாம் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் பல சமயங்களில் இயேசுவை அறிய முயற்சி செய்ததில்லை. ஏன் நம் அண்டை வீட்டில் இருப்பவர்களைக் கூட நம்மில் பலருக்குத் தெரியாது. சுயநலத்தோடு, நமக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, தேவைக்கு மட்டும் பிறரைச் சார்ந்து வாழ்வதும், அவர்களுடைய தேவையை கண்டுகொள்ளாதிருப்பதும் இன்றைய சமூகத்தின் மரபாகிப்போனது. இம்மனநிலையை நம்மிடமிருந்து வேரோடு பிடுங்கி எறியும் போதுதான் நாம் மற்றவரோடு அன்போடு வாழ முடியும். அதுவே கடவுளின் கட்டளை. அதுவே அவரை அறிந்து கொள்ள உகந்த வழி.

இன்றைய நற்செய்தியில் மோசேயின் சட்டப்படி தூய்மைப் படுத்தும் சடங்கை நிறைவேற்றவும், குழந்தை இயேசுவை கோயிலில் அர்ப்பணிக்கும் சடங்கை நிறைவேற்றவும் திருக்குடும்பமாய் அவர்கள் கோயிலுக்கு வந்த நிகழ்வைக் காண்கிறோம். அவர்கள் திருச்சட்டத்தை நிறைவேற்றுதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அதையும் தாண்டி கடவுளுடைய திருவுளத்தை தங்கள் வாழ்வாக ஏற்றுக்கொண்டு அவர் பணித்தவாறே ஒவ்வொன்றையும் செய்து முடித்தார்கள். அவர்களைப் போலவே நாமும்  அன்பு செய்ய வேண்டும் என்ற கடவுளின் திருளத்தை உளமாற ஏற்போம். அவருடைய கட்டளையைக் கடைபிடிப்போம். பிறரன்பு பணிமூலம் கிறிஸ்துவை அறிய முயல்வோம். பொய்யர்களாயின்றி உண்மையின் வழியில் நடப்போம். அதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா உமது அன்புக் கட்டளையை மனமாற ஏற்று, பிறரன்புப் பணிமூலம் உம்மை அறியவும், பொய்யர்களாய் வாழாமல் உண்மை வழி நடக்கவும் அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 1 =