இறைவனின் அழைப்பு விலைமதிப்பில்லாதது! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் முதல் சனி
I: 1சாமு:  9: 1-4.17-19; 10: 1
II: திபா 21: 1-2. 3-4. 5-6
III: மாற்:  2: 13-17

 இறைவனின் அழைப்பு விலைமதிப்பில்லாதது! 

ஒருபள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் இக்கொண்டாட்டத்திற்காக சிறப்பு விருந்தினராகவோ அல்லது விழாத்தலைவராகவோ நன்கு படித்த அரசு வேலையில் உயர் பதவியிலிருக்கிறவர்களைத் தான் அழைப்பார்கள். அந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக மேடையில் பல நாற்காலிகள் இடப்பட்டிருந்தன. இத்தனை நபர்களா சிறப்பு விருந்தினர்கள் என எண்ணும் வேளையில், வரவேற்புரை வாசிக்கப்பட்டது. அந்த வருடம் அதே பள்ளியில் தூய்மைப் பணியாற்றும் அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக கவுரவிக்கப்பட்டு மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களும் ஓரே சீருடை அணிந்தவர்களாய் தயக்கத்துடன் மேடைக்கு வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். பள்ளியின் இச்செயல்பாடு எல்லோரையும் பெருவியப்பில் ஆழ்த்தியதோடு மாணவர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

எதற்காக அனைவரும் வியப்புற்றனர்?  தூய்மைப் பணியாளர்கள் மேடையில் ஏறுவதற்கு எதற்காகத் தயங்கினர். விடை ஒன்றுதான். தகுதியுள்ளோர், உயர்வானோர் பல இருக்க இச்சிறப்பு அழைப்பு கிடைக்கப்பெற்றதை எண்ணியதால் அங்கே தயக்கமும் வியப்பும் உருவானது. இது மனித எண்ணம். ஆனால் கடவுளின் எண்ணம் யாதெனில் "நேர்மையாளரை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன் "என்பதே.

இன்றைய இருவாசகங்களும் கடவுள் அருளும் விலைமதிப்பில்லா அழைப்பைக் குறித்து நமக்கு விளக்குவதாக அமைகின்றன. முதல் வாசகத்தில் சவுல் என்ற சாதாரண மனிதனை, தன் தந்தை தொலைத்த கழுதைகளைத் தேடிச் சென்றவரை இஸ்ரயேலை அதாவது கடவுள்  தனக்கென தேர்ந்தெடுத்த தனித்துவமிக்க மக்களை ஆளும் அரசராக இருக்க அழைப்பு விடுக்கிறார். இஸ்ரயேலருக்கு முதல் அரசன் சவுல். அவ்வாறெனில் அவர் அரச குலத்தைச் சார்ந்தவர் அல்ல. மற்ற இஸ்ரயேலரைப் போல அவரும் பிற இனத்து மக்களின் அரசர்களைக் குறித்து வியந்திருப்பார். உயர்வாக எண்ணியிருப்பார். இன்று அந்த நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டது நிச்சயம் அவருக்கு பெருவியப்பை தந்திருக்கும். அதுமட்டுமல்ல இஸ்ரயேலின் அரசராம் கடவுள் தன்னுடைய இடத்தில் சவுலை அரசராக நியமித்தார் என்றால், தகுதியற்ற ஒரு மனிதனை தன் அழைப்பால் தகுதிப்படுத்தும் கடவுளின் ஒப்பற்ற அன்பை நாம் உணரலாம் அன்றோ.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சுங்கச் சாவடியில் வரி வசூலித்துக் கொண்டிருந்த லேவியை தன்னைப் பின் தொடர அழைக்கிறார். இஸ்ரயேலரால் வெறுக்கப்பட்டு பாவி என்று அழைக்கப்பட்ட லேவியை அழைத்தது மட்டுமல்ல, இவ்வாறு பாவி என்று கருதப்பட்ட பலரோடு அமர்ந்து விருந்துண்கிறார் அவர். தந்தையை தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார் இயேசு.

இவ்வாசகங்கள் நமக்கு இரு முக்கியச் செய்தியைத் தருகின்றன. முதலாவதாக தகுதியற்ற பாவிகளாகிய நம்மையும் லேவியைப் போல அவரைப் பின்தொடரவும் சவுலைப் போல அவர் மக்களை வழிநடத்தவும் கடவுள் அழைத்துள்ளார். இந்த ஒப்பிட முடியாத விலைமதிப்பில்லா அழைப்பின் மேன்மமையை உணர்ந்து நாம் வாழ வேண்டும்.

இரண்டாவதாக பிறருடைய தகுதியை தரம் பார்ப்பதை விட்டுவிட்டு அனைவரையும் சமமாகப் பாவித்து சமூகத்தில் வெறுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட தீயவர்கள் என முத்திரையிடப்பட்ட மக்களின் சார்பாக தந்தைக் கடவுளைப்போல் அவரைப் பிரதிபலித்த இயேசுவைப்போல் நாமும் வாழ வேண்டும். 
இறைவன் தரும் இந்த விலைமதிப்பில்லா அழைப்பை உணர்ந்தவர்களாய் வாழ நம்மையே அவரிடம் ஒப்புவிப்போம். அவரைப் பின்தொடர்வோம்.

 இறைவேண்டல் 

அழைப்பின் நாயகனே! தகுதியற்ற பாவிகளாகிய எம்மை அழைத்த உம் அன்பிற்கு நன்றி இறைவா. அவ்வழைப்பின் மேன்மையை உணர்ந்து வாழ எமக்கு உம் அருளை நிறைவாகப் பொழிந்தருளும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

13 + 0 =