இறையாட்சியின் மதிப்பீடுகளை விதைப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் பதினொன்றாம் ஞாயிறு
I: எசே: 17: 22-24
II: திபா: 92: 1-2, 12-13, 14-15
III: 2 கொரி: 5: 6-10
IV : மாற்: 4: 26-34

இயேசு தன் பணி வாழ்வில் தன்னைப் பற்றி அதிகம் பேசவில்லை. தன்னை உலகின் மீட்பர் என்று தம்பட்டம் அடிக்கவில்லை. ஆனால் இறைத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே தன்னுடைய முதன்மையானப் பணியாகக் கொண்டிருந்தார். இயேசு ஒரு இலட்சியவாதியாக இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கட்டியெழுப்புவதில் கருத்தாய் இருந்தார். அவரது வாழ்வு போதனை,  நம்பிக்கை, வல்ல செயல்கள்,சிலுவை மரணம்  ஆகிய அனைத்தும் இறையாட்சியை இம்மண்ணில் மலரவைத்து அதன் மதிப்பீடுகளை மண்ணிலே உறுதிப்படுத்தும் நோக்கத்தோடுதான் இருந்தன. இறையாட்சி என்ற சொல்லானது ஒத்தமைவு நற்செய்திகளில் இயேசுவின் இலட்சியமாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் யோவான் நற்செய்தியில் இறையாட்சி என்ற சொல்லுக்கு இணையாக "நிலைவாழ்வு "அல்லது "நிறைவாழ்வு "என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டுள்ளது. இறையாட்சி என்பது மண்ணுலகில் நிகழ வேண்டும் என்பது இயேசு கண்ட இலட்சியக் கனவு. தான் என்ற சுயநலம் நீங்கி  உண்மை, அன்பு, நீதி போன்ற இறைமைப் பண்புகளை மானுடம் தம்மிலே வளர்க்க வேண்டும் என்ற கனவு. மேலும் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்ற உறுதிப்பாடு. இவ்வாறாக இறையாட்சியின் மேன்மையைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இறையாட்சி என்பது இவ்வுலகை ஆளும் அரசர்களை வென்று சுயநலத்தோடு அரசாட்சி செய்வதல்ல. மாறாக,  மக்களின் மனதை வென்று பிறர்நலத்தோடு கடவுளின் பிள்ளைகளாக மாறுவதாகும். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் யூத மக்களிடம் இறையாட்சி மலரும் என்ற நம்பிக்கை காணப்பட்டது.அவர்களின் பார்வையில் உரோமை ஆதிக்கம் முற்றுப்பெற்று கடவுள், நிலையான, நிறைவான ஆட்சியை நிறுவுவார் என்று காத்திருந்தனர். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பார்வையில் இறையாட்சி என்பது  மாறுதலாக இருந்தது. இறையாட்சியின் மதிப்பீடுகள் மனித வாழ்வியலோடு தொடர்புடையது. உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் போன்ற மதிப்பீடுகளை உள்ளடக்கியது.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் இருந்தன. குறிப்பாக திருக்காட்சியினர், விடுதலை குழுக்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், எசேனியர்கள் போன்றோர்கள் மெசியா இவ்வுலகில் வந்து ஆட்சி செலுத்துவார். தங்களை அடிமைப்படுத்துபவர்களிடமிருந்து விடுதலை பெற்று, புதிய ஆட்சியை நிறுவுவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இயேசுவின் இலட்சிய இலக்கு அவர்களின் பார்வையிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. இறையாட்சி என்பது ஒரு மறைபொருள். ஆயினும் அது நம் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. எனவேதான் இயேசு இறையாட்சி பற்றிய போதனைகள் செய்யும்பொழுது, நம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துவதை உருவகமாக வைத்து உவமைகள்  பல சொல்லி நம்மைத் திடப்படுத்தியுள்ளார்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறையாட்சியைப் பற்றி போதித்துள்ளார். முதலில் இறையாட்சியைத் தானாக முளைத்து வளரும் விதையோடு ஒப்பிட்டுள்ளார். இரண்டாவதாக இறையாட்சியை கடுகு விதையோடு ஒப்பிட்டுள்ளார். இவற்றின் இறையியல்  பின்னணியைப் பின்வருமாறு சிந்திப்போம்.  

முதலாவதாக, இறையாட்சி தானாக முளைத்து வரும் விதைக்கு ஒப்பாகும். நிலத்தில் விதைப்பவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமல் சில நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்தது அறுவடைக் காலம் வந்ததும் அவர் அறிவாளோடு புறப்படுகிறார் ; இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை வெளிப்படுத்துகின்றது. இறையாட்சியில் இறைத்திருவுளம் தான் மேலோங்கி நிற்க வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. விதைப்பவர்கள் நாமாய் இருந்தாலும், அதற்கான விளைச்சலைக் கொடுப்பவர் கடவுள் மட்டுமே. கடவுளின் திருவுளம் இருந்தால் மட்டுமே மிகுந்த பலன் கிடைக்கும். எனவே நம்முடைய வாழ்வில் நாம் எதைச் செய்தாலும் கடவுளின் திருவுளத்தை முன்னிறுத்தி செய்யும்பொழுது,  நாம் மிகுந்த பலனைக்  கொடுக்கின்றவர்களாக வாழ முடியும். எனவே இறையாட்சி என்பது கடவுளின் திருவுளத்துக்கு முழுவதுமாகக்  கையளித்து நம் வாழ்வும் பிறர் வாழ்வும் வளம் பெற, நம் கடமையைச் செய்வது.  

இரண்டாவதாக,  இறையாட்சியை கடுகு விதையோடு இயேசு ஒப்பிடுகிறார்.  கடுகு விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனால் அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து  எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி,  வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்  விடும். இது எதைச் சுட்டி காட்டுகிறது என்றால் இறையாட்சி என்ற மதிப்பீடு கண்ணுக்குக் கூட ஒழுங்காக தெரியாத சிறு விதையாக இருந்தாலும்,  அதன் தாக்கம் மிகப் பெரியதாகவும் பிறருக்கு பயன் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் இறையாட்சியின் மதிப்பீடுகளான  உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் போன்ற மதிப்பீடுகளைச் சிறிய அளவாவது வாழ முயற்சி செய்யும்பொழுது, பெரிய தாக்கத்தை நாம் வாழும் சமூகத்தில் ஏற்படுத்த முடியும்.  

நம்முடைய அன்றாட வாழ்வில் உண்மைக்குச் சான்று பகரும் பொழுது நம்மை பிழைக்கத் தெரியாதவன் என்றும் ஏமாளி என்றும் விமர்சனப்படுத்துவர். பிறர் நலத்தோடும் தியாகம் நிறைந்த உள்ளத்தோடும் பகைவரைக் கூட பிறரை அன்பு செய்யும் பொழுது,   நம்மைக் கோழை என்றும் முட்டாள் என்றும் அழைப்பர். இருந்தபோதிலும் நாம் அவர்களை முழுமையாக அன்பு செய்யும் பொழுது, இறையாட்சியின் மதிப்பீடுகள் நம் வாழ்வால் வெளிப்படும். நீதிக்காகக் குரல் கொடுக்கும் பொழுது, நம்மை வன்முறையாளர் என்று விமர்சனப்படுத்துவர். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் மனத் துணிவோடு இறையாட்சியின் மதிப்பீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது, இந்தச் சமூகம் இறையாட்சியின் மேன்மையை உணரும். சமத்துவ வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது, பல்வேறு சாதி, மத மொழி, இன வெறியர்களின் உறவை இழக்க நேரிடும். இருந்தபோதிலும் மனத்துணிவோடு இயேசுவின் மனநிலையில் சமத்துவத்தைக் கடைபிடிக்கும்  பொழுது, நம் வாழ்வின் வழியாக இறையாட்சியின் மதிப்பீடு வெளிப்படும். இறையாட்சியின் மதிப்பீடுகள் தான் நம்முடைய மனித வாழ்வுக்கு நிறைவையும் முழுமையும் கொடுக்க முடியும். எனவே இயேசு எவ்வாறு இறையாட்சியின் மதிப்பீடுகளை இந்த உலகில் விதைக்கத் தன்னுடைய சிந்தனை சொல் செயல் அனைத்தையும் முழுமையாகக் கொடுத்தாரோ, அதே போல நாமும் இறையாட்சி மதிப்பீடுகளை இம்மண்ணில் விதைக்க முன்வருவோம்.

இறைவேண்டல்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!  இறையாட்சியின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் போன்ற மதிப்பீடுகளுக்கு எந்நாளும் சான்று பகரும் நல்ல கருவிகளாக எங்களை உருமாற்றும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 1 =