இறையழைத்தலை உணர்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதினான்காம் புதன்; I: தொ.நூ: 41: 55-57; 42: 5-7,17-24; II : திபா: 33: 2-3. 10-11. 18-19; III:  மத்: 10: 1-7

நான் பணி செய்த ஒரு பங்கில் ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். அந்த குடும்பத்தில் மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் ஒருவரை குருமடத்திற்கு செல்லுமாறு இறையழைத்தலின் மேன்மையை சுட்டிக்காட்டி அறிவுறுத்தினேன். அப்பொழுது அந்த வீட்டில் ஒருவர் "தந்தையே! நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் இறையழைத்தலைப் பற்றி மட்டும் பேசாதீர்கள் "என்று கூறினார்.

நாம் வாழும் இந்த காலகட்டத்தில் இறை அழைத்தல் மிகவும் குறைந்து கொண்டே இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவராம் இயேசு இறையழைத்தலின் மேன்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார். இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணிக்காக 12 சீடர்களை அழைப்பதை நாம் வாசிக்கிறோம் இறை அழைத்தல் இறைவனின் உன்னதமான கொடை. அதன் வழியாகத்தான் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகள் இம்மண்ணில் வாழ்வாக்கப்பட்டது. இயேசுவின் அழைப்பை உணர்ந்த சீடர்கள் மிகச்சிறந்த இறையாட்சிப் பணியைச் செய்தனர். குறிப்பாக இயேசு சீடர்களை அழைத்ததின் முக்கிய நோக்கத்தை இன்றைய நற்செய்தியில்  சுட்டிக்காட்டியுள்ளார். "இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார்.
தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள்...'' (மத்தேயு 10:1-2) என்ற வார்த்தைகள் அழைத்தலின் முக்கியத்துவத்தையும் நோக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் அழைத்தலைப் பெற்றுள்ளோம். அவ்வழைத்தலுக்காகன பணியை நிறைவேற்றும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் பொதுக் குருத்துவத்தில் இணைவதோடு தீயவற்றை உலகிலிருந்து அகற்றவும் நோயாளிகளுக்கு நற்சுகம் தரவும் பணிக்கப்பட்டுள்ளோம்.

இச்சமூகத்தின் தீமைகளான பகை உணர்வுகள், அதிகாரம், அடக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் குரல் கொடுப்பதும், உடல் மனநோய்களால் பாதிக்கப்பட்டோருடைய நம்பிக்கையை ஆற்றுப்படுத்தும் சொற்களால் அதிகப்படுத்தி நம் உடனிருப்பால் அவர்களுக்கு சுகமளிப்பதும் 
இறைஅழைத்தலைத்தலை  உணர்ந்தாலன்றி  நம்மால் செய்ய இயலாது. எனவே இறைவனின் அழைப்பை உணர்ந்து அவர் தந்த பணிகளை நிறைவேற்ற நம்மைத் தயார் படுத்துவோம்.

இறைவேண்டல்

அழைத்தலின் இறைவா நாங்கள் உமது அழைப்பை உணர்ந்து நீர் பணித்துள்ள கடமைகளை ஆற்ற வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

4 + 15 =