இறையளித்த ஆற்றல்களைப் பெருக்குவோமா? | குழந்தைஇயேசு பாபு


Grace

பொதுக்காலத்தின் 33 ஆம் புதன் - I. 2 மக்: 7:1,20-31; II. திபா: 17:1.5-6.8,15; III. லூக்: 19:11-28

அருட்சகோதரி ஒருவர் என்னிடம் அவருடைய பணிஅனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் மூளைவளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்காக பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்தப் பகிர்வில் "இக்குழந்தைகளுடன் பணிபுரிவதால் நான் இன்னும் சிறப்பாக வாழக் கற்றுக் கொண்டிருக்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்தக் கொடைகளை பன்மடங்காகப் பெருக்க எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக இப்பணியை நான் காண்கிறேன்" என்று கூறினார். அப்போது நான் "சவாலான இப்பணியில் இவ்வளவு மகிழ்ச்சியா? நீங்கள் சோர்ந்து போவதில்லையா?" எனக் கேட்டபோது, அவர் கூறியது "மற்ற குழந்தைகளைப் போல் இக்குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொள்வதில்லை. ஒரு கலையையோ,செயலையோ அல்லது பாடத்தையோ மீண்டும் மீண்டும் சொல்லித்தர வேண்டும். அவர்களோடு சேர்ந்து செய்ய வேண்டும். இதனால் என்னுடைய திறமையும் அதிகமாகிறது. புதிய உத்திகளைக் கையாளத் தூண்டுகிறது. நான் கற்றுக்கொண்டவை பன் மடங்காகப் பெருகி அவர்களையும் சென்றடைகிறது.பல சமயங்களில் மனமும் உடலும் தளர்வடைந்ததுண்டு. ஆயினும் மீண்டுமாய் அவர்களுக்காக உழைக்கவும் ,கடவுள் தந்த ஆற்றலைப் பயன்படுத்தி என்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள குழந்தைகளின் வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வமும் என்னைத் தட்டி எழுப்புகிறது" என்று தன் பகிர்வை நிறைவு செய்தார்.

நம்முடைய வாழ்வானது கடவுள் தந்த பரிசு. அதைத் தகுந்த முறையிலும் சிறந்த வழியிலும் பயன்படுத்தி பிறருக்கு நன்மைகள் ஈட்டவும்,அப்பரிசை வழங்கிய கடவுளுக்கு மகிமை சேர்க்கவும் செய்தோமானால் அப்பரிசு கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். 

இன்றைய நற்செய்தியில் தாலந்து உவமையையொத்த "மினா"நாணய உவமையானது கொடுக்கப்ட்டுள்ளது. பத்து பேருக்கும் நாணயமானது கொடுக்கப்பட்து. ஒவ்வொருவரும் அதை அவர்களுக்கே உரிய வகையில் பயன்படுத்தி ஐந்தும் பத்துமாகப் பெருக்கினர் என நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.

நாம் அனைவரும் கடவுளுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்களாய் இருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டத் திறமைகளையும் ஆற்றல்களையும் கடவுள் தந்துள்ளார். ஒருவரைப் போல் மற்றவர் இல்லை. ஒரு செயலை ஒருவர் செய்வது போல் மற்றொருவர் செய்வதில்லை. யாரும் யாரையும் எவ்வகையிலும் ஈடு செய்ய முடியாது. ஆம் இவை தான் நம் இருத்தலின் ஆச்சரியமும் வியப்பும். அப்படிப்பட்ட வியப்புக்குரிய நம் வாழ்வையும் ஆற்றலையும் திறமைகளையும் நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தி பன்மடங்காகப் பெருக்க வேண்டும். அது தான் வாழ்வின் நிறைவு. அது தான் வாழ்வின் முழுமை. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உயரிய அழைப்பும் அதுவே. 

தன்னிடம் அன்பளிப்பு பெற்றவர் அதைப் பயன்படுத்தாது வீணாக்கும் போது அதைக்கொடுத்தவருடைய மனம் வேதனை அடையும். மீண்டும் கொடுப்பதற்கு மனமில்லாமல் போகும்.இன்றைய நற்செய்தியிலும் நாம் அப்படிப்பட்ட ஒருவரைக் காண்கிறோம். பெற்ற நாணயத்தைப் பயன்படுத்தாமல் சோம்பித் திரிந்ததால், அவரிடம் உள்ளதும் பறிக்கப்பட்டது. தண்டனையும் வழங்கப்பட்டது. 

நம்மில் எத்தனை பேர் கொடுக்கப்பட்ட வாழ்வையும்,ஆற்றலையும்,திறமைகளையும் ஏன் நேரத்தையும் கூட பயன்படுத்தாமல் பின்வாங்குகிறோம்? சோம்பல், தயக்கம், தன்னம்பிக்கையில்லா மனநிலைகளால் கடவுள் தந்தக் கொடைகளைப்,பயன்படுத்திப் பெருக்காமல் நமக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருக்கிறோம்? என சிந்திப்போம். நம்மிடம் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கணக்குக் கேட்கப்படும். எனவே கடவுள் நமக்குத் தந்த நற்கொடைகளைப் பெருக்க நம் வாழ்வையும், திறமைகளையும், ஆற்றல்களையும் எவ்விதத் தயக்கமும், சோம்பலுமின்றி பயன்படுத்தி இறைவனை மகிமைப்படுத்துவோம். 

இறைவேண்டல்

கொடைகளின் தந்தையே! நீர் எமக்குத் தந்துள்ள வாழ்வெனும் கொடையை சிறப்பாக வாழ எமக்கு உதவி புரியும். எங்களுக்குள் இருக்கும் நீர் தந்த ஆற்றல்கள், திறமைகள் அனைத்தையும் எவ்வித தயக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பயன்படுத்திப் பன்மடங்காகப் பலன் தர அருள் புரியும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 1 =