இயேசுவை பின்பற்றி செல்வோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் -மூன்றாம் செவ்வாய்; I: திப: 7:51-8:1; II: தி.பா: 31: 2cd-3. 5,6-7a. 16,20b ; III : யோவான் 6:30-35

இன்றைய வாசகங்கள் நம்மை இயேசுவை நம் சொல்லாலும் செயலாலும் வாழ்வாலும் பின்பற்ற அழைக்கிறது. நாம் இயேசுவைப் பின்பற்றுகிறேன் என்று கூறினால் மட்டும் போதாது அதை நாம் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால் நாம் பொய்யர்கள் ஆகிவிடுவோம்.பல வேளைகளில் நாம் ஒருசிலரை நம் முன்மாதிரியாக தேர்ந்தெடுக்கிறோம்.ஆனால் அவர்கள் செய்வதை பாராட்டும் ரசிகர்களாக மட்டுமே நாம் இருந்துவிடுகிறோமே தவிர அவர்களைப் பின்பற்றுவதில்லை. நம் வாழ்வில் இயேசுவின் நிலையும் இதுதானா என நாம் சிந்திக்க இன்று அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் புனித ஸ்தேவான் இயேசுவை முழுமையாகப் பின்பற்றினார். இயேசுவை ஏற்றுக்கொண்ட அவர் அவரைப்போலவே துணிச்சலுடன் போதித்தார். இறைவாக்கினரைப் போல யூதர்களின் தவறை அவர் தைரியமாகச் சுட்டிக்காட்டினார்.இறக்கும் தருவாயிலும் இயேசுவைப்போல தன்னுடைய உயிரை ஒப்படைத்தார். அத்தோடு "தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்கிறார்கள்" என தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை இயேசு மன்னித்தது போல தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்கள் மேல் இப்பழியைச் சுமத்தாதீர் என ஸ்தேவான் வேண்டுகிறார்.இவ்வாறு தன் இறப்பிலும் கூட கிறிஸ்துவை பிரதிபலிக்கிறார் அவர்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பின்பற்ற அல்ல மாறாக அவருடைய போதனைகளைக் கூட  ஏற்றுக் கொள்ளாமல் அவரிடம் அடையாளங்களையும் அறிகுறிகளையும் கேட்கும் யூதர்களை நாம் காண்கிறோம். தாங்கள் மோசேயின் வழிவந்தவர்கள் எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளின் எழுத்துக்களை மட்டுமே பின்பற்றியவர்கள் அவர்கள். யூதர்களைப் போல இறைவார்த்தையின் எழுத்துக்களை மட்டுமே பற்றிக்கொண்டு அதன் உண்மைப் பொருளை வாழ்வாக்காமல் நாம் இருக்கத்தான் செய்கிறோம். இது இயேசுவின் வழியைப் பின்பற்றாத நிலையே.  

எனவே நம் வாழ்வில் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றி வாழவும் அவரை நம் வாழ்வால் பிரதிபலிக்கவும் வேண்டிய அருளுக்காய் ஜெபிப்போம்.

இறைவேண்டல்

அன்பு இயேசுவே உம்மை முழுமையாய்ப் பின்பற்றி வாழ எமக்கு உதவும். எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்தும் உம்மைப் பிரதிபலிக்கத் தேவையான அருளைப் பொழிந்தருளும் ஆமென்.

Add new comment

8 + 11 =