இயேசுவைப் போல் உருவாகத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் வெள்ளி; I: 1 திமோ 1:1-2,12-14; II  : தி.பா: 15:1-2,5,7-8,11; III: லூக்:  6:39-42

ஆசிரியர் ஒருவர் தன் மாணவியைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றார். மாணவியின் பெற்றோர் தம் மகளின் ஆசிரியர் வீட்டிற்கு வந்ததும் மகிழ்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் வரவேற்றனர். அச்செய்தியை தன் மகளிடம் சொல்ல சென்றார்கள். அப்போது அம்மாணவி தன் வீட்டிற்கு வந்த ஆசிரியரைப் போல பாவனை செய்துகொண்டிருந்தாள். அதைக் கண்ட அந்த ஆசிரியர் அம்மாணவி தன்னைப்போல செய்கைகள் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

இன்றைய நற்செய்தியில் " முற்றிலும் தேர்ச்சி பெற்ற சீடர் தன் குருவை போலிருப்பார் " என்று இயேசு கூறுகிறார். அவ்வார்த்தைகள்  இயேசுவைப் போல உருவாக நமக்கு அழைப்பு  விடுக்கிறது. 
இயேசு அவருடைய போதனையாலும் வாழ்வாலும் நமக்கு கற்றுத்தந்ததை வாழ்வாக்கும் போது நாம் அவரைப்போல மாறுகிறோம்.

இயேசு " நான் உங்களை அன்பு செய்ததைப் போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் " என்று தன் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார். " நான் தந்தையோடு இணைந்திருப்பதைப் போல நீங்களும் என்னோடு  இணைந்திருங்கள் " என்று கூறுகிறார். இவ்வாறாக தன்னையே தன் சீடர்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கூறி தன்னைப்போல மாற கற்றுக்கொடுக்கிறார்.

கிறிஸ்துவையும் அவருடைய போதனைகளையும் நாம் உள்வாங்கி அவர் கற்றுத்தந்த படிப்பினைகளின் படி வாழ்ந்தால் நாமும் அவரைப்போல உருமாற உருவாக முடியும். இயேசுவைப்போல உருவாகத் தயாரா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே உம் வழிகாட்டுதலின் படி வாழ்ந்து உம்மைப்போல உருவாகவும் உருமாறவும் வரம் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

6 + 14 =