இயேசுவில் நம்பிக்கை கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் நான்காம் செவ்வாய்
I :தி ப : 11:19-26
II :  தி பா: 86:1-7
III : யோவான் :10:22-30

இன்றைய வாசகங்கள் மீண்டுமாக நம்மை நம்பிக்கையின் ஆழத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் நாம் நம்பிக்கையில் வளர  நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏனெனில் நம்பிக்கை ஒரே நாளில் வளர்ந்துவிடாது. அது நம் வாழ்நாளின் ஒவ்வொருநாளும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இயேசுவிடம் சில யூதர்கள் வரவிருக்கும் மெசியா அவர்தானா இல்லையா என உறுதியாகக் கூறுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு இயேசு தான் அதை ஏற்கனவே கூறிவிட்டதாகவும் அவருடைய செயல்களே அதற்கு சான்றுகள் எனவும் கூறுவதாக இன்றைய நற்செய்தி பகுதி நமக்குக் கூறுகிறது. இயேசுவின் இவ்வார்த்தைகள் யூதர்களின் நம்பிக்கையற்ற தன்மையை விளக்குகிறது. இயேசுவின் நற்செயல்களையும் போதனைகளையும் கண்ட பிறகும் அவர்களுடைய மனதில் சந்தேகங்களும் வெறுப்பும் பொறாமையுமே நிறைந்திருந்ததால் அவர்களால் இயேசுதான் வரவிருந்த மெசியா என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.நம்பவும் முடியவில்லை. இது நம்பிக்கையின்மையின் உச்ச கட்டம்.

அதற்கு நேர்மாறாக முதல்வாசகமோ நம்பிக்கையாளர்கள் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அதிகரிப்பதைப் பற்றி கூறுகிறது. இயேசுவின் பெயரால் சீடர்கள் ஒருபுறம், பவுல், பர்னபாஸ் என பலர் நற்செய்தியை அறிவித்தனர். மக்கள் நற்செய்தியை நம்பினர். அதிகமான மக்கள் கடவுளுக்காக சேர்க்கப்பட்டனர் என்றும் நாம் வாசிக்கிறோம். ஆம் நம்பிக்கையால் மட்டுமே கடவுளுடைய அருள்செயலை நம் வாழ்வில் அனுபவிக்க முடியும்.

நம்பிக்கையில்லாத யூதர்களை இயேசு தன் மந்தையில் சேர்ந்தவர்களல்ல எனக் கூறுகிறார். அந்த வரிசையில் நாமும் நம் நம்பிக்கையற்ற தன்மையால் கடவுளுடைய மந்தையிலிருந்து பிரிந்து சென்றுவிடக்கூடாது. மாறாக நம்பிக்கையோடு கடவுளின் அருள்செயல்களை நம் வாழ்வில் அனுபவித்து அவருடைய மந்தையைச் சேர்ந்தவர்களாக நாம் வாழ வேண்டும். எனவே இயேசுவில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.

 இறைவேண்டல் 
அன்பான ஆண்டவரே!  
நம்பிக்கையில் நாளும் வளர்ந்து உம் அருட்செயல்களை வாழ்வில் கண்டுணர அருள்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

9 + 11 =