இயேசுவின் விருந்தில் பங்கு கொள்ளத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா; I: விப: 24: 3-8; II: திபா: 116: 12-13, 15-16, 17-18; III: எபி: 9: 11-15; IV : மாற்: 14: 12-16, 22-26

திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்துக் கொண்டிருந்த பொழுது வாராந்திர களப்பணிக்காகத் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குச் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அங்குள்ள சிறைவாசிகளுக்கு பிரியாணி உணவு வழங்குவது வழக்கம். இந்த நல்ல உணவைக் கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியை சிறைவாசிகளின் முகத்தில் காண முடியும். ஏனெனில் அவர்களுக்கு சுவையான உணவு எப்பொழுதாவது தான் கிடைக்கும். அந்தப் பிரியாணி உணவு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.  ஆண்டவர் இயேசுவின் பிறப்பு பெருவிழாவை கொண்டாட உணவு ஒவ்வொரு ஆண்டும் உறவின் அடையாளமாக இருந்தது.

நம்முடைய தமிழ் பராம்பரியம் விருந்தோம்பல் பண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியம். யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று குடிக்க தண்ணீர் கொடுத்து விருந்து உபசரிக்கும் வழக்கம் நம்முடைய தமிழ் பராம்பரியத்திற்கு உண்டு. அதேபோல ஆப்பிரிக்க நாட்டில் ஒரு சில பகுதிகளில் புதிதாக செல்லக்கூடிய விருந்தினர்களுக்கு உணவு உபசரிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் என்று அங்கு பணி செய்யும் என்னுடைய நண்பர்கள் என்னோடு பகிர்ந்திருக்கிறார்கள். உணவு அன்பின் அடையாளமாகவும் உறவின் அடையாளமாகவும் பகிர்தலின் அடையாளமாகவும் ஒற்றுமையின் அடையாளமாகவும் சமத்துவத்தின் அடையாளமாகவும் இருக்கின்றது.

இன்றைய நாளில் நம்முடைய தாய்த்திருஅவையோடு இணைந்து   இயேசுவின் திருவுடல்,  திரு இரத்தப் பெருவிழாவை  மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.  உயிர் வாழ வேண்டுமென்றால் உடலும் இரத்தமும் மிகவும் அவசியம். விபத்தில் சிக்கி ஒரு மனிதருக்கு இரத்தம் வெளியாகி விட்டால், அந்த மனிதருக்கு இரத்தம் மிகவும் அவசியம். தேவையான நேரத்தில் தேவையான வகை இரத்தம் கிடைக்கவில்லையன்றால், நிச்சயமாக உயிர் பிழைப்பது கடினம். தேவையான நேரத்தில் இரத்தம் கிடைத்துவிட்டால்,  விரைவிலேயே அந்த நபரை உயிர் பிழைக்க வைக்க முடியும். அந்த அளவுக்கு இரத்தம் ஒரு உடல் உயிர் வாழ மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இரத்தத்தில் தான் உண்மையான வாழ்வு இருக்கின்றது. எனவேதான் முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்கள் சார்பாக ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்தியதையும், அவர்கள் மீது உடன்படிக்கையின் இரத்தத்தை தெளித்ததையும் வாசிக்கின்றோம். பழைய ஏற்பாட்டில் இரத்தம் உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது. 

இரண்டாம் வாசகம் தலைமை குருவாகிய இயேசுவின் புதிய உடன்படிக்கையை பற்றி எடுத்துரைக்கின்றது. இயேசு தன்னையே பலியாகக் கையளித்து இரத்தம் சிந்தி இவ்வுலகிற்கு மீட்பு வழங்கினார்.

இன்றைய நற்செய்தி வாசகமானது   இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை பற்றி சுட்டிக்காட்டுகின்றது. தன்னுடைய  உடலையும் இரத்தத்தையும் இயேசு அப்பம், இரசம் இவற்றின் மறைபொருட்கள்  வழியாக வாழ்வளிக்கும் உணவாகக் கொடுத்தார். இதை ஒரு புதிய உடன்படிக்கையின் அடையாளமாக ஏற்படுத்தி அனைவரும் ஒரே கிண்ணத்தில் ஒரே குடும்பமாக உட்கொள்ள சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

இயேசுவின் திருவுடல் திரு இரத்தம் நமக்கு சுட்டிக்காட்டும் இறையியல் சிந்தனைகளை இன்னும் ஆழமாக சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக, இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் உறவின் அடையாளமாகும். மனித வாழ்வுக்கு உறவு என்பது முக்கியமானது. அதிலும் குறிப்பாக இறைவனோடு உறவு, பிறரோடு கொண்டிருக்கக்கூடிய உறவு மற்றும் தன்னோடு கொண்டிருக்கக்கூடிய உறவு ஆகிய மூன்றும் மிக முக்கியமானவைகளாகும். இறைமகனாகிய இயேசு மனிதகுலம் மீட்புப் பெற்று அவரோடு உறவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுத்துள்ளார். அவருடைய திரு உணவில் பங்கு கொள்ளும்  நாம், அவரைப்போல உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக மாற அழைக்கப்பட்டுள்ளோம். 

இரண்டாவதாக,  இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் சமத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றன. இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து மனிதரும் கடவுளின் சாயலாக படைக்கப்பட்டவர்கள். ஆனால் இவற்றை மறந்து உலக வாழ்வானது பல்வேறு வேறுபாடுகளையும் சாதிய இன மொழி வேறுபாடுகளையும் தூக்கிப்பிடித்து போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து வேறுபாடுகளையும் களைந்து சமத்துவ சமுதாயம் படைக்க இயேசு ஏற்படுத்திய திருவிருந்தும்  திரு இரத்தமும் நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றன. இயேசுவின் திருவுடல் திரு இரத்தத்தை  உணவாய் உட்கொள்ளும் நாம் , சமத்துவ சமுதாயத்தை உருவாக்க இயேசுவின் பாதையில் புறப்படுவோம்.

மூன்றாவதாக,  இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் அன்பின் அடையாளமாக இருக்கின்றது. அன்புதான் அனைத்திற்கும் ஆணிவேர். இயேசு கல்வாரி இரத்தம் சிந்தியதும் உடலை முழுவதுமாக கையளித்ததும், அவர் நம்மீது கொண்ட அன்பினைச் சுட்டிக்காட்டுவதாக  இருக்கின்றது. இயேசு அன்பின் வெளிப்பாடாகத் தான் நற்கருணையை ஏற்படுத்தினார். எனவே நாமும் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும்  உணவாக உட்கொள்ளும் பொழுது,  அவரைப் போல அன்பு செய்பவராக மாற முயற்சி செய்வோம்.

நான்காவதாக,  இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் தியாகத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. தியாகம் தான் ஒரு மனிதரைப் புனிதராக மாற்றுகிறது. இயேசுவை உலக மக்கள் அனைவருமே பெருமையாகப் பேசுகிறார்கள் என்றால் அவர்களின் தியாக மனநிலையே ஆகும். இயேசுவின் தியாக மனநிலைதான் இந்த உலகிற்கு மீட்பையும்  மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கின்றது. எனவே தியாகம் நிறைந்த உள்ளதோடு இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உணவாக உட்கொள்ள முயற்சி செய்வோம்.  

ஐந்தாவதாக இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது. தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் சாதாரண அப்பத்திலும்  ரசத்திலும்  காண, இயேசு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திருப்பது  நம்பிக்கையால் தான்.  சாதாரண அப்பத்திலும் இரசத்திலும் இயேசுவை. கண்டுகொள்ள நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். அந்த பிரசன்னத்தில் இயேசு இருக்கிறார் என்று நம்பினால் தான் இயேசுவின் உடனிருப்பை முழுமையாக அனுபவிக்க முடியும். நம்பிக்கைதான் அனைத்து அருள்சாதனத்திற்கும்  அடிப்படையாகும்.  அதிலும் குறிப்பாக நற்கருணை அருள்சாதனத்தில் நம்முடைய நம்பிக்கை என்பது மிகவும் அவசியம்.  எனவே இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும்  உட்கொள்ள, நம்பிக்கை என்பது அவசியம். நம்பிக்கை இல்லாமல் தூய்மையற்ற உள்ளதோடு நற்கருணையை உட்கொள்வது கடவுளுக்கு எதிரான பாவமாகும். எனவே  இயேசுவின் திருவுடலையும்  திரு இரத்தத்தையும் நம்பிக்கையோடு உட்கொண்டு,   அவரோடு இணைந்திருக்கும் பொழுது, நாம் இயேசுவோடு இணைந்து மகிழ முடியும்.

இவ்வாறு இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா கொண்டாடும் நாம் இயேசுவைப் போல உறவு, அன்பு, சமத்துவம்,   தியாகம்,   நம்பிக்கை போன்ற நல்ல பண்புகளை  நமதாக்க முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் கொண்டாடும் இந்த விழா முழு வாழ்வியல் அர்த்தத்தைப் பெறும். கொரோனா தொற்று நோயினால் பாதிப்படைந்து துன்பப்படும் மக்களுக்கும்,  வருமானம் இல்லாமல் உண்ண போதிய உணவு இல்லாமல்  தவிக்கும் மக்களுக்கு நம்மாலான உதவிகளை இயேசுவின் மனநிலையில் செய்ய முயற்சி செய்வோம். அதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
அன்பான ஆண்டவரே!  உம்முடைய திருமகன் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவில் நற்பண்புகளோடு எம்மாலான உதவிகளை பிறருக்கு செய்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 2 =