Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் வழி சிலுவையின் வழியே! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - திருநீற்று புதனுக்குப்பின் வியாழன்
I: இணைச்சட்டம் 30:15-20
II : திபா 1:1-4,6
III: லூக் 9:22-25
தவக்காலம் என்ற உடனே நம் நினைவிற்கு வருவதெல்லாம் சிலுவைப்பாதை. இயேசுவின் சிலுவைப் பாடுகளை எண்ணி கண்ணீர் மல்க பதினான்கு நிலைகளைத் தியானிக்கும் போது நம் உள்ளம் உருகிப்போய்விடுகிறது. ஆனால் நம் ஆண்டவர் இயேசு "உண்மையான சிலுவையின் பாதை இதுவல்ல. அது உன் வாழ்வில் மெய்ப்பிக்கப் படவேண்டும்" என்ற ஒரு அறைகூவலை விடுக்கிறார்.
என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னலம் மறந்து தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்பின்வரட்டும் என்று அவரது அறைகூவல் தவக்காலத்திற்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுமைக்கும் என்பதை பல வேளைகளில் நாம் மறந்துவிடுகிறோம்.நாம் எதிர்பார்ப்பதெல்லாம் எப்போதும் மகிழ்ச்சி, எளிய வேலைகள் வேதனைகள் இல்லாத மனநிலை ....இன்னும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் வாழ்க்கை அதுவல்ல.
சில நாட்களுக்கு முன்பு வலைதளங்களில் மிகப்பரவலாக வந்த காணொளி இது. ஒரு ஞானியிடம் ஒருபெண் " வாழ்க்கையில் துன்பங்கள், கஷ்டங்கள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்டார். அந்த ஞானி சற்றும் யோசிக்காமல் " செத்து போகணும்" எனப்பதிலளித்தார். இதைத்தான் இயேசுவும் தன் உயிரைக் காத்துக்கொள்பவன் அதை இழந்து விடுவான் எனக் கூறியுள்ளார்.
எனவே நமது அன்றாட வாழ்க்கையில் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், துணிவோடு நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முயற்சி செய்வோம். நம் வாழ்வில் வருகின்ற துன்பங்களை சுமைகளாகப் பார்க்காமல், சுகமாக பார்ப்போம். அப்பொழுது நிச்சயமாக சுமைகளை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலையும் வல்லமையையும் கடவுள் நிறைவாக கொடுப்பார். நம்முடைய அன்றாட சிலுவையை தூக்கிச் செல்ல, தேவையான மன வலிமையைத் தொடர்ந்து மன்றாடுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய வாழ்வில் எங்களுக்கு வருகின்றசிலுவையை கண்டு அஞ்சாமல், துணிவோடு அதை சுமக்க தேவையான அருளையும் ஆற்றலையும் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment