Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் பெயரால் நன்மைகள் புரியத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலத்தின் 26 ஆம் ஞாயிறு; I: எண் 11: 25-29; II: தி.பா: 19: 7,9. 11-12. 13; III: யாக் 5: 1-6; IV : மாற் 9: 38-48
படிக்கவே வசதியில்லாத ஒரு ஏழைவீட்டு மகள், தான் படித்து நல்ல நிலைக்கு வந்து தன் குடும்ப பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க வேண்டுமென கனவுகளோடு வாழ்ந்துவந்தார். ஆனால் வறுமையின் கொடுமையால் அடுத்து வகுப்புக்கு கூட கடந்த செல்ல இயலாமல் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவானது. ஒருவழியாக தன் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு தன் கனவுகளையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு வேலைக்குச் செல்லத் தயாரானாள். அந்நிலையில்தான், அவ்வூரிலே இருந்த வசதி படைத்த பெட் ஒருவர் இம்மகளின் உதவிக்கு வந்தார். அவ்வசதி படைத்த பெண்ணுக்கு குழந்தை இல்லை. ஆயினும் இந்த ஏழை மாணவியை தன் குழந்தையாக நினைத்து படிப்பதற்கு உதவினார். அந்த ஏழை மாணவி நன்கு படித்து நல்ல நிலைக்கு வந்த பின், தன்னுடைய முன்னேற்றத்திற்கு உதவியவருக்கு நன்றி கூறும் வகையிலும் புகழ் சேர்க்கும் வகையிலும் அவரின் பெயராலேயே "Trust" அமைத்து பல ஏழை மாணவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். அதனால் பயன்பெற்ற பலரும் அப்பெண்ணை வாழ்த்தி வணங்கினர்.
நண்பர்களே மனிதப் பிறப்பானது பிறருக்கு நன்மைகள் செய்வதற்காகவே கிடைக்கப்பட்ட அரிய வாய்ப்பு. நம்மோடுள்ள சக மனிதர்களை நம் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களின் தேவைகளில் உதவிசெய்து துன்பத்தில் ஆறுதல் கூறி ஒற்றுமையாய் வாழ்ந்தோமெனில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நாம் செய்யும் இந்த நல்ல செயல்களையெல்லாம் நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்வது விண்ணகத்தையே இம்மண்ணில் உருவாக்குவதற்கு சமம் அன்றோ?
ஆம். அன்பிற்கினியவர்களே கிறிஸ்து -அவனாக, கிறிஸ்து -அவளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அவருடைய பெயரால் நல்ல காரியங்களைச் செய்வது தந்தை கடவுளுக்கு நாம் மகிமை சேர்க்கும் செயல் என்பதை உணரவே இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. அதேபோல நற்காரியங்களை செய்பவர்களை தடுக்கவோ அவர்கள் மேல் பொறாமைப்படவோ கூடாது என்ற கருத்தையும் நமக்கு இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான், தம்மைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரால் தீய ஆவியை ஓட்டுவதைக் கண்டு அதைத் தடுக்க எண்ணும் போது இயேசு யோவானை அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார். இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டும் ஆழ்ந்த கருத்து என்னவென்றால், பிறர் நன்மைகள் செய்வதை நாம் ஒருபோதும் தடுக்கக் கூடாது என்பதாகும். அவர் யாரைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். நமக்கு எதிராகக் கூட இருக்கலாம். ஆனால் அவருடைய செயலில் உண்மையும் நன்மையும் உண்டென்றால் அச்செயல் நிச்சயம் அவர் மனதில் இருக்கும் கடவுளை பிரபலிப்பதாகவே இருக்கும். ஆகவே நம்முடைய பெயர், வழிபாடுகள் அடையாளங்களைக் கொண்டு மட்டுமல்லாமல் நம்முடைய செயல்களின் மூலமும் நாம் இயேசுவின் சாயலை வெளிப்படுத்த வேண்டும். நாம் இயேசுவின் பெயரை உலகிற்குப் பறைசாற்ற வேண்டும் என்ற ஆழமான கருத்தை நாம் உணர முடிகிறது.
அத்தோடு மட்டுமல்லாது இயேசுவின் பெயரால் நாம் செய்கின்ற நல்ல காரியங்களெல்லாம், நம்மைக் காண்கின்ற மற்றவர்களையும் அவ்வாறே நன்மை செய்யத் தூண்ட வேண்டும். முதல் வாசகத்தில் மோசேயின் இறைவாக்குரைக்கும் ஆவி பலருக்கும் பகிரப்பட்டு அவர்கள் இறைவாக்குரைத்ததைப் போல, இயேசுவோடு இல்லாவிட்டாலும் அவர் பெயரால் தீய ஆவியை விரட்டிய மனிதரைப் போல நாம்முடைய நல்லெண்ணங்களும் நற்செயல்களும் பிறரையும் தூண்டி நற்செயல் புரிபவர்களாக மாற்றும் பொழுது நமது செயல்கள் முழுமை பெறும். நம்மை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இறையாசிர் நிச்சயம் கிடைக்கும்.
இதையே "நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நமக்குக் கூறுகின்றன.
ஆகவே நம் அருகிலுள்ளோருக்கு இயேசுவின் பெயரால் நன்மைகளைச் செய்யத் தீர்மானிப்போம். விண்ணகத் தந்தையை மகிமைப்படுத்துவோம்.
இறைவேண்டல்
இயேசுவே நன்மை நிறைந்தவரே! நாங்களும் உம்மைப் போல பிறருக்கு நன்மைகள் புரிபவர்களாக வாழ்ந்து உம் பெயரை பிறருக்குப் பறைசாற்ற வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment