இயேசுவின் சீடராக மாறுவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 30 ஆம்  வியாழன்
புனிதர்கள் சீமோன், யூதா பெருவிழா; I: எபே:   2: 19-22; II : திபா: 19: 1-2. 3-4; III : லூக்:   6: 12-19

இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பின்  இயேசுவின் நற்செய்தியை அறிவித்தவர்கள் திருத்தூதர்கள்.   தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள யூதர்களிடமிருந்து தப்பி ஓடினாலும்,  பெந்தகோஸ்தே நாளிலே தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட பிறகு மிகுந்த வல்லமையோடு நற்செய்தி அறிவித்தார்கள். திருத்தூதர்கள் அன்று வித்திட்ட ஆழமான இறை நம்பிக்கைதான், இன்றளவும் நாம்  உயிர்த்துடிப்புள்ள கிறிஸ்தவர்களாக வாழ வழிகாட்டுகின்றது.

இன்றைய நாளில் நம் தாய் திருஅவையோடு  இணைந்து திருத்தூதர்களான புனிதர்கள் சீமோன் மற்றும் யூதாவின் விழாவினை நாம் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம். இத்திருத்தூதர்கள் இருவரும் இயேசுவை அறிந்து கொண்ட பிறகு இயேசு முழுமையாகப் பின்பற்றினர். இயேசு விட்டுச் சென்ற மதிப்பீடுகளை தங்களுடைய வாழ்வாக மாற்றினர். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு    பிறகு  மிகுந்த வல்லமையோடும் தூய ஆவியின் துணையோடும் நற்செய்திப் பணி செய்தனர். தங்கள் உயிரையே மறைசாட்சியாகக் கையளித்தனர்.

திருத்தூதரான சீமோன்  கானான் ஊரைச் சேர்ந்தவர் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். உரோமையர்கள் கி.மு. 63 இல்  பாலஸ்தீனாவை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தினார்கள். எனவே மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். இந்தச் சூழலில் மண்ணின் மக்களை காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு 23 வயது வரை வாணிகம் செய்து கொண்டிருந்த சீமோன் தீவிரவாத குழுக்களுடன் இணைந்து போராட்டங்களை செய்தார். திருச்சபையின் பழமைவாதிகள் " இவர் கானாவூர் திருமணத்தில் திருமண மாப்பிள்ளை எனவும் குறிப்பிடுகிறார்கள். இவர்தான் பார்வையற்ற பர்த்தலமேயுவை இயேசுவிடம் கூட்டிவந்து நலம் பெற வழி காட்டியதாகவும் கருதப்படுகிறார்.  இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு நற்செய்தியை அறிவிக்க எகிப்து, சீரீன், லிபியா, பெர்ஷியா போன்ற நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து இறுதியில் மறைசாட்சியாக மரித்தார்.  இவர் புனித யாக்கோபுக்கு பிறகு எருசலேமின் ஆயராகவும் இருந்தார் என விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

புனித யூதா ததேயு மிகச்சிறந்த நற்செய்தி பணி செய்தார். இவரின் பெயருக்கு "இதயம் என்று பொருள். யூதாவின் நற்செய்தி பணியானது இதயம் நிறைந்த ஒன்றாக இருந்தது. ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு புனித யாக்கோபு மற்றும் யூதா ததேயுவுக்கு தனித்தனியாக காட்சி கொடுத்ததை தான் காட்சியாக கண்டதாக தெரசா நியூமன் என்பவர் கூறியுள்ளார்.  பல நாடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணியை யூதா மிகுந்த ஆர்வத்தோடும் வல்லமையோடு ம் செய்தார். யூதா நற்செய்தி பணி செய்து கொண்டிருக்கும் பொழுது  பெர்ஷியாவில் சீமோனை சந்தித்தார். இருவரும் மிகுந்த வல்லமையோடு இயேசுவின் நற்செய்தியை அறிவித்தனர். அதன் விளைவாக எண்ணற்ற மக்கள் மனம் மாறினர். இதைக்கண்டு ஏற்றுக்கொள்ள முடியாத மற்ற சமயத்தைப் பின்பற்றிய பூசாரிகள்  இவர்களை இழுத்துக் கட்டினர். சீமோனை ரம்பத்தால் அறுத்து கொலை செய்தார்கள்.  யூதா அம்புகளால் எய்தும்வை ஈட்டியால் குத்தியும் கொன்றார்கள். அவர் மறைசாட்சியாக மரித்தார். 

இந்த இரண்டு திருத்தூதர்களும்  தங்கள் உயிரை பெரிதும் பொருட்டாகக் கருதாமல் மறைசாட்சியாக இரத்தம் சிந்தி நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்தனர். அவர்கள் சிந்திய இரத்தம் திருஅவையின் வித்தாக மாறியுள்ளது. அவர்கள் தங்களையே மெழுகாக இழந்ததற்கு காரணம் அவர்கள் இயேசுவின் உண்மை சீடர்களாக இருந்ததாலேயே. இயேசுவின்  உண்மைச் சீடராக நாம் மாறும்போது, நம் வாழ்வில் துன்பங்களும் இடையூறுகளும் வரும். ஆனால் அவற்றைப் பொருட்டாகக் கருதாமல் நம்முடைய ஆன்மாவிற்கும் இறையாட்சியின் மதிப்பீட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நம் வாழ்வில் வசந்தத்தை அனுபவிக்க முடியும். எனவே இன்றைய விழா நாயகர்கள் சீமோன்  மற்றும் யூதா ததேயு   ஆகிய இருவரைப் போல நாமும் இயேசுவின் உண்மை சீடர்களாக வாழ முயற்சி செய்வோம்.

இறைவேண்டல் : 
அன்பான ஆண்டவரே! புனித சீமோன் மற்றும் யூதாவைப் போல எந்நாளும் நற்செய்தி மதிப்பீட்டிற்க்குச் சான்று பகிர்ந்திட தேவையான அருளையும் நல்ல  மனதையும் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 10 =