Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் இறுதி வார்த்தை (ஏழாவது) – லூக்கா 23:46
தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன். தன் தந்தையிடமிருந்து மனிதனாகப் போகிறேன் என்று மண்ணகம்வந்த ஊதாரி மைந்தன். தன் அன்பையெல்லாம் இவ்வுலகில் கொடுத்துவிட்டு, மீண்டும் தன் தந்தையிடம் செல்கிறார். தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன் என்று சொல்லி உயிர்துறக்கின்றார். இவை விரக்தியில் வந்த வார்த்தைகள் அல்ல. நானே கொடுத்தால் ஒழிய என்னிடமிருந்து எவரும் என் உயிரை எடுக்கமுடியாது என்று சொன்னவர், தானே உயிரைக் கொடுக்கிறார்.
திருப்பாடல் 31 இன் வரிகளை இயேசு முணுமுணுக்கிறார். இவர் பாடியது இறப்பின் பாடல் அல்ல, மகிழ்வின் பாடல். இந்த மாசற்ற செம்மறி கொல்லப்பட்ட இந்த நேரத்தில்தான் கல்வாரி மலையின் மறுபுறத்திலிருந்து பாஸ்கா விழாவிற்கு கொல்லப்படவிருக்கின்ற ஆயிரகணக்கான ஆடுகளின் ஓலங்கள் எழுந்தன.
காயின் ஆபேலைக் கொன்றதும் இந்நாளில்தான், இறைவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்துகொண்டதும் இந்நாளிலேதான். ஈசாக்கு பலியிடப்படுவதற்கு மோரியா மலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதும் இந்நாளிலேதான். சலேம் அரசர் மெல்கிசதேக்கு ஆபிரகாமுக்கு அப்பமும் இரசமும் கொடுத்ததும் இந்நாளிலேதான். ஏசா தன் சகோதரன் யாக்கோபுக்கு தலைபேற்று உரிமையை விற்றதும் இந்நாளிலேதான். மனுமகன் மண்ணில் தலைசாய்த்து உயிர்விடுகிறார்.
இயேசு இந்த வார்த்தைகளை சிலுவையிலிருந்து சொன்னபோது, சிலர் கேட்டனர். சிலர் நடந்து சென்றனர். சிலர் கேலிசெய்தனர். சிலர் நீ மெசியாவானால் இலாசருக்கும் நயீம் நகர இளைஞனுக்கும் யாயீரின் மகளுக்கு உயிர் கொடுத்தது உண்மையானால் உன்னையே நீ காப்பாற்றிக்கொள் என சாவால் விடுத்தனர். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் பெருமூச்சுவிட்டனர். ஆனால் நூற்றுவத் தலைவன் மட்டும் அவரை ஈட்டியால் குத்திவிட்டு, இவர் உண்மையாகவே இறைமகன் என்று சான்றுபகர்ந்தார்.
இவர்களில் நாம் யார்? அவருடைய ஏழு வார்த்தைகளைக் கேட்டு நம்மையே மாற்றிக்கொள்ளபோகிறோமா? மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்;....அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் (எசாயா 53:5) இன்றும் என்றும்.
Add new comment