இந்த கிறிஸ்து பிறப்பிலாவது வாடகைக்கு அப்பா அம்மா கிடைக்குமா?

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமெண்டோ என்ற இடத்திற்கு அருகிலுள்ள வில்லியம் ஜெசப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் பயிற்சியாளராகப் பணியாற்றுபவர்தான் ஜாக்கி டர்னர். இவர் பிரச்சனையில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பணியைச் செய்யவேண்டும் என ஆசை கொண்டவர்.

இவருடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமாய் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு டிசம்பர் மாதமும்தான் மிகவும் சோகம் நிறைந்ததாக மாறிவிடுகின்றது. ஏனென்றால் ஒவ்வொருவரும் கிறிஸ்து பிறப்புப் பற்றி நிறைய திட்டமிடுகிறார்கள். தங்களுடைய பெற்றோர்கள், உடன்பிறப்புகள், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் தங்கள் மகிழ்ச்சியை எப்படி பகிர்ந்துகொள்வது என பல நிகழ்வுகளை ஏற்பாடுசெய்கிறார்கள். 

என்னுடைய குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால் எனக்கு நினைவுக்கு வருவது. அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டதும், உணவைத் திருடியதற்காக அடிக்கப்பட்டதும்தான். என்னைப் பெற்ற தாயைப் பார்த்ததில்லை, நான் பார்க்கவிரும்பிய தந்தையும் எனக்கில்லை. நான் உதறித்தள்ளப்பட்டேன், ஒதுக்கிவைக்கப்பட்டேன், பசியால் வாடினேன், தவறாகப் பயன்படுத்தப்பட்டேன். 

பதினோரு மாதங்கள் எல்லாவற்றையும் கடந்துவந்தாலும், பனிரென்டாம் மாதம் எப்பொழுதும் மிகவும் கொடுமையாக இருக்கிறது என்கிறார். எனவே இந்த ஆண்டு நான் ஒரு புதிய முயற்சியை எடுக்கப்போகிறேன் என்று முடிவெடுத்தார். 

பயன்படுத்தப்பட்ட கார்கள், வீடுகள் போன்றவற்றிற்கு பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்பியிருப்பது கிரேயிக்லிஸ்ட் என்னும் இணையதளம். தனக்கு அப்பா அம்மா வாடகைக்கு வேண்டும், கொஞ்ச மணிநேரத்திற்கு இருந்தால் போதும், அதற்கானப் பணத்தையும் தருவதாகவும் அந்த இணையதளத்தில் வேண்டினார். 

இதற்கு பலரும் முன்வந்தனர். அதுவும் இலவசமாகவே அம்மா அப்பாவாக இருப்பதற்கு. இவரைப் போன்றே அம்மா அப்பா வேண்டும் என்று ஏங்கிய இளைஞர்கள் பலரும் வந்தனர். நாம் உடைக்கபட்டிருக்கிறோம், காயப்படுத்தப்பட்டிருக்கிறோம். எனவே ஒருவர் மற்றவருக்கு கட்டாயம் தேவை என்கிறார்.

அதேபோல வாடகை அப்பா அம்மா தேவையில் இருக்கும் இளைஞர்களுக்கு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு உறவுகளை ஏற்பாடுத்தினார். அந்த கிறிஸ்துமஸ் காலம் மகிழ்ச்சியாக செல்வதற்கான உறுதிசெய்தார். முதன் முதலில் டிசம்பர் மாதம் ஒளிமையமாக இருந்தது.

நாம் அன்பு செய்யும் மக்களாக இருக்கவேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் நமக்கு சொல்வது என்னும் செய்தியையும் கொடுத்துச் செல்கிறார் ஜாக்கி டர்னர்.

நம்முடைய கிறிஸ்துபிறப்பு தயாரிப்புக்காலமும், அனைவருக்கும் நம்முடைய அன்பை உணரச்செய்யும் காலமாக அமைய நம்மையே தயாரிப்போம்.
 

Add new comment

2 + 0 =