இடைவிடாத இறைவேண்டலா! | குழந்தைஇயேசு பாபு


prayer

பொதுக்காலத்தின் 32 ஆம் சனி - I. 3 யோ: 5-8; II. திபா: 112:1-2.3-4.5-6; III. லூக்: 18:1-8

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு ஊரில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும் உள்ளாகினர். குழந்தை இல்லாததால் மிகவும் மனவேதனை அடைந்தனர். அவர்கள் கடவுளை மட்டுமே முழுமையாக நம்பினார். வயதான எலிசபெத் அம்மாவுக்கும் அன்னாாவுக்கும் குழந்தைபாக்கியம் கொடுத்த கடவுள் தங்களுக்கும் நிச்சயமாகக் குழந்தை பாக்கியம் கொடுப்பார் என்று நம்பினார். எனவே ஒவ்வொரு கோவிலாக சென்று நம்பிக்கையோடு நேர்ச்சை செய்து இடைவிடாமல் இறைவேண்டல் செய்தனர். இறுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு  அருமையான இரண்டு ஆண்குழந்தைகளைக் கடவுள் அவர்களுக்கு கொடுத்தார். அந்த ஆண் குழந்தைகளில் ஒருவர் தான் நான். என் அண்ணனும் நானும் இந்த உலகத்தில் என் பெற்றோருக்கு மகன்களாகப்  பிறந்தது கடவுள் கொடுத்த கொடை. இடைவிடாமல் இறைவேண்டல் செய்ததற்கான பரிசு. இடைவிடாமல் நம்பிக்கையோடு இறைவேண்டலைத் தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயமாக கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் பெறமுடியும்.

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு ஓர் ஏழைக் கைம்பெண்ணைக் கதாநாயகியாக வைத்து  செபம் பற்றிய ஓர் உவமையைக் கூறுகிறார். இயேசு கைம்பெண்ணின் விடாமுயற்சியையும் நம்பிக்கையையும் சுட்டிக்காட்டி மற்றவர்களும் அவரைப்போல விடாமுயற்சியோடு நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கிறார். கைம்பெண்ணின் விடாமுயற்சியும் நம்பிக்கையும் அவள் கேட்டதை அளித்தன.

இயேசு இங்கு கைம்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் கைம்பெண்கள் இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோரின் சின்னமாகவே கருதப்பட்டனர். கைம்பெண்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். மேலும் கைம்பெண்களுடைய சொத்துக்கள் அநீதியான முறையில் அபகரிக்கப்பட்டன. இத்தகைய பின்னணியைக் கொண்ட கைம்பெண்கள் விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் தங்களுடைய நீதிக்காக போராடவேண்டும் என்ற ஆழமான சிந்தனையை இயேசு வெளிப்படுத்துகிறார்.

நேர்மையற்ற நடுவர் கடவுளுக்கும் மக்களுக்கும் அஞ்சி நடுங்கி மதிக்காத ஒரு மனிதர்.இவரை போன்றவர்களை  குறித்து தான் எசாயா  இறைவாக்கினர் "உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய்  இருக்கின்றனர், கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகிறான்; நீதி வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை" (எசா: 1:23) என்று தெளிவாய் கூறியுள்ளார்.

நேர்மையற்ற நடுவராக அவர் இருந்த போதிலும்இந்த ஏழைக் கைம்பெண் விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் நீதி கேட்கிறார். அது நேர்மையற்ற நடுவர் இறைவனுக்குப் பயந்தோ அல்லது மற்றவர்களை மதித்தோ அல்ல ; மாறாக, அந்தக் கைம்பெண் மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்ததால் அவளது வேண்டுதலுக்கு செவி சாய்த்து நீதி வழங்கினான். மிகவும் கொடூரமான நேர்மையற்ற நடுவரே நீதி வழங்கினார் என்றால் நம்மைப் படைத்த பரம தந்தை முற்றிலும் மாறுபட்டவர். நாம் கடவுளிடம் இடைவிடாது இறைவேண்டல் செய்யும்பொழுது நிச்சயமாக அனைத்தும் கிடைக்கும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கவிதா என்ற ஒரு இளம்பெண் வாழ்ந்து வந்தார். ஏழு வருடங்களாக காணாமல் போன மனம் நலம் பாதிக்கப்பட்ட தன் கணவர் மீண்டும் கிடைக்க வேண்டுமென்று இறைவனிடம் உருக்கமாக இடைவிடாது இறைவேண்டல் செய்தார். இறுதியாக சென்னையிலுள்ள மனசு எந்த மனநல காப்பகத்தின் இயக்குனர் அலைபேசியின் வழியாக இந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு உங்கள் கணவர் எங்களோடு சென்னையில் இருக்கிறார் என்று கூறினாராம். இந்த செய்தியை கேட்ட அந்தப் பெண்மணி 'கடவுள் என் இறைவேண்டலைக் கேட்டுவிட்டார்' என்று கூறினார். இவ்வாறாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை நாம் காணமுடியும். ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தை கொட்டிக் கொண்டே இருக்கிறேன்' (1சாமு: 1:15) என்று குழந்தை பாக்கியம் வேண்டி மன வேதனையோடு அழுத அன்னா குழந்தை பாக்கியத்தை பெற்றாள். 

எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் இறைவேண்டல் செய்வோம். மனம் தளராமல் இறுதிவரை கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்ய முயற்சி செய்வோம். இத்தகைய மனநிலையை வளர்த்துக் கொள்ளத் தான் நம் ஆண்டவர் இயேசு இன்றைய  நற்செய்தி மூலமாக அழைப்பு விடுக்கிறார்.  மேலும் இந்த பகுதி எழுதப்பட்டது ஆண்டவரின் இரண்டாம் வருகை குறித்த பின்னணியிலேதான். ஆண்டவர் இரண்டாம் வருகைக்கு முன்பு இறையாட்சிக்காகக் காத்திருக்கும் நாம் இடைவிடாது இறைவேண்டல் செய்து நம்மையே ஆயத்தப்படுத்த அழைப்பு விடுப்பதாக இந்நற்செய்திப் பகுதி இருக்கின்றது. இறையாட்சியின் நிறைவுக்குக் கடவுளுடைய துணையும் மனந்தளராத சீடரின் உழைப்பும் அடிப்படையாகும். எனவே மனம் தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்.

இந்த உவமை கூறப்பட்டதன் பின்னணி  கடவுளை தொந்தரவு செய்து தேவையானவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்பதல்ல; மாறாக,  நம்முடைய தேவைகள் அனைத்தும் அறிந்துள்ள இறைவனிடம் விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் நம்மையே ஒப்படைப்பதாகும். நாம் இறையாட்சிப் பணி செய்கின்ற பொழுது பல்வேறு சோர்வுகளும் இடையூறுகளும் தோல்விகளும் வரும். ஆனால் அவற்றைக் கண்டு மனம் தளராமல் திடமான நம்பிக்கையோடு இறைவேண்டலில் நிலைத்திருந்து ஆண்டவரின் விருப்பத்தை அறியும் பொழுது மிகச் சிறந்த  பணியாளர்களாக மாறமுடியும். அப்பொழுது கடவுளின் அருளையும் இரக்கத்தையும் வழிகாட்டுதலையும் பெறமுடியும். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் ஏழை கைம்பெண்ணின் மனநிலையில் இடைவிடாது இறைவேண்டல் செய்து இறைத் திட்டத்தை அறிய தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :

நீதியின் நாயகனே எம்  இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் இடைவிடாது இறைவேண்டலில் நிலைத்திருந்து உமது திருவுளத்தின் படி வாழ்ந்து எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்ள தேவையான அருளைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 0 =