Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இடுக்கமான வாயில் வழி நுழைந்து கடவுளுக்கு ஏற்புடையவராகத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 30 ஆம் புதன்; I: உரோ: 8:18-25; II: திபா: 125:1-6; III : லூக்: 13:18-21
ஒரு ஊரில் கணவன் மனைவி வாழ்ந்து வந்தனர்.
ஒவ்வொரு மாதமும் தன் கணவனின் வருமானத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பபாள் மனைவி. கணவனின் வருமானம் வந்தவுடன் வீட்டு வேலைகளை செய்வதற்குரிய மின் இயந்திரங்கள் ஒவ்வொன்றாக வாங்கி வைப்பார். இத்தகைய கருவிகள் அனைத்தும் அவளுடைய வேலைகளை எளிதாக்குவதாக அவள் நினைத்தாள்.
தன்னுடைய உடலை வருத்தி குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய அவள் விரும்பவில்லை. நாளடைவில் தன்னுடைய உடலின் ஆரோக்கியத்தை இழக்கத் தொடங்கினாள். இப்போது கணவனின் வருமானம் அனைத்தும் மருந்து வாங்குவதற்கு மட்டுமே செலவானது. வாங்கி வைத்த இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூட அவளால் இயலவில்லை.
அன்புக்குரியவர்களே இப்பொழுதெல்லாம் நாம் அனைவரும் விரும்புவது எளிய வாழ்க்கைதான். அதாவது "Easy going life" என ஆங்கிலத்தில் கூறலாம். எல்லாவற்றையும் சுலபமாக, அதிக உடலுழைப்பு இல்லாமல், குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் செய்யவேண்டும். ஆனால் பலன் மட்டும் அதிகமா கிடைக்க வேண்டும் என்ற மனநிலைக்கு நாமும் விதிவிலக்கல்ல. வலி, நெருக்கடி, வேதனைகள் என எதுவும் நம் வாழ்வில் வரக்கூடாது என விரும்புகிறோம். ஆனால் இவைகள் தான் நம்மைப் புடமிடுகின்றன.நாம் வாழ்க்கைக்குத் தகுதி பெற ஒருசில சங்கடங்களையும் சவால்களையும் சந்திக்கத் தான் வேண்டும்.
இயேசு இன்றைய நற்செய்தியில் "இடுக்கமானை வாயில் வழியே வருந்தி நுழையுங்கள்" என்று கூறுகிறார். அதன் உண்மையான பொருள் என்ன? இடுக்கமான பாதை என இயேசு கூறுவது சவால்களும், சோதனைகளும் நிறைந்த வாழ்க்கை. அவ்வாழ்க்கையை நாம் எளிதாகக் கடந்து செல்லவோ அல்லது தப்பித்துச் செல்லவோ நம்மைச் சுற்றி பல வழிகள் இருக்கலாம். ஏன் நாம் பாதையையே மாற்றி தவறாகக் கூட பயணிக்கலாம்.ஆனால் இதனால் நாம் வாழ்க்கையை இழக்கிறோமே தவிர எதையும் சாதிப்பதில்லை. நாம் பலவீனமடைகிறோம்.
இயேசுவின் சீடராக இருக்க நாம் நம் சிலுவைகளைச் சுமந்து கொண்டுதான் அவர்பின்னே செல்லவேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கும் போது சோர்வடைய நேரிடலாம். ஆயினும் நாம் மனம் தளராது பயணத்தைத் தொடர வேண்டும். இதுவே இடுக்கமான வாயில் வழி நாம் செய்யும் பயணம். இப்பயணமே நம்மைத் தகுதிப்படுத்தும். இறைவனுக்கு ஏற்புடையவர்களாக நம்மை மாற்றும்.எனவே நம் அன்றாட வாழ்க்கைச் சூழலில் இடர்பாடுகளைக் கண்டு விலகி ஓடி விசாலமான வழிகளைத் தேடாமல் நம்மை வருத்தி இடுக்கமான நேர்வழியில் பயணத்தைத் தொடர முயற்சிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே! இடர்பாடுகள் நிறைந்த எம் வாழ்க்கைப் பயணத்தை இடுக்கமான நேர்வழியில் பயணித்து உமக்கு ஏற்புடையவர்களாக வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment