Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆண்டவர் இயேசுவின் பிறப்பு மனுக்குலத்திற்கு சிறப்பு | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection | Christmas
கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி
I : எசா:9: 2-4,6-7
II: திபா: 96: 1-2. 2-3. 11-12. 13
III: தீத்து: 2: 11-14
IV : லூக்: 2: 1-14
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் நான் இறையியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தேன். நான் படிக்கின்ற பொழுது பணி அனுபவத்திற்காக சிறப்பு பணியான "சிறைப் பணியை " செய்து வந்தேன். ஒவ்வொரு வாரமும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு சென்று சிறைக்கைதிகளை சந்தித்து அவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் பணியைச் செய்தேன். அவ்வாறு ஒவ்வொரு வாரமும் செல்லும்பொழுது எண்ணற்ற அனுபவங்களும் மனநிறைவும் கிடைக்கும். அக்டோபர் மாதத்திற்கு மேல் சிறைவாசிகள் "கிறிஸ்மஸ் எப்பொழுது வரும்? " என்று கேட்பார்கள். ஏனென்றால் ஒவ்வொரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக சிறையிலே கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். அந்த கிறிஸ்துமஸ் விழாவில் எல்லா சிறைவாசிகளுக்கும் காவல்துறை சகோதர சகோதரிகளுக்கும் பிரியாணி உணவானது வழங்கப்படும். மேலும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் இந்திய சிறைப்பணியின் வழியாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் செய்கின்ற இந்த நல்ல செயல் அவர்கள் ஆண்டு முழுவதும் நினைக்குமளவுக்கு இருக்கும். எனவே ஜாதி, மதம், மொழி என்ற வேறுபாடுகளைத் தாண்டி இந்த மனிதநேய செயல்பாடு கிறிஸ்து பிறப்பின் செய்தியை அறிவிக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் "காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் " என்று எசாயா இறைவாக்கினர் இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாக இறைவாக்குரைத்தது இயேசுவின் பிறப்பின் வழியாக நிறைவேறியது. இருள் சூழ் பள்ளத்தாக்கில் நாம் நடக்க நேர்ந்தாலும் கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்பதற்கு சான்றாக இயேசுவின் பிறப்பு அமைகிறது. நம்பிக்கையின் பிறப்பாக இருக்கின்றது. இயேசுவை பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்று விரும்பினால், நம்முடைய வார்த்தையால் மட்டும் அறிவிக்கக் கூடாது. நம்முடைய ஒவ்வொரு நல்ல செயல்பாட்டின் வழியாக அறிவிக்க முன் வர வேண்டும்.
இயேசுவின் பிறப்பு மனுக்குலத்திற்கு சிறப்பான நிகழ்வாக இருக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிப்பது போல "மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது " என்ற வார்த்தைகள் இயேசுவின் பிறப்பின் வழியாக உண்மையாக்கப்பட்டுள்ளது. இறைமகன் நம்மைப்போல மனிதராக அவதரித்து குழந்தையாக பிறந்தது மனிதகுலத்திற்கு பெருமையாக இருக்கிறது. எனவே மனிதகுலத்திற்கு இயேசுவின் பிறப்பு சிறப்பான ஒன்றாக இருக்கின்றது. அவற்றின் காரணங்களை இப்போது தியானிப்போம்.
முதலாவதாக, இயேசு மனிதனாக பிறந்ததால் நாம் அனைவருமே கடவுளின் சாயலில் தான் படைக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மை உறுதிப்படுத்தப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் நாம் கடவுளின் சாயலில் தான் படைக்கப்பட்டோம் என்று வார்த்தை வடிவில் சான்றுகள் இருந்தாலும், இயேசுவின் பிறப்பு தான் கடவுளின் சாயலில் தான் நாம் படைக்கப்பட்டோம் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்துள்ளது. இந்த நிகழ்வு மனிதர்களான நமக்கெல்லாம் சிறப்பான செய்தியாக இருக்கின்றது. கடவுள் மனிதனாக வாழ்ந்ததைப் போல, அவரைப் பின்பற்றுகின்ற நாமும் அவரைப் போல வாழ முயற்சி செய்வோம்.
இரண்டாவதாக, இயேசுவின் பிறப்பு எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக இருந்து அனைவருக்கும் மீட்பு உண்டு என்ற சிந்தனையை வழங்குகின்றது. இயேசு பிறந்த சமயத்தில் வானதூதர் இயேசுவின் பிறப்பு நற்செய்தியை முதன்முதலாக "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் " (லூக்: 2: 10-11) என்று அறிவித்தார்.இந்த செய்தியானது இயேசு கொண்டு வந்த மீட்பும் மகிழ்ச்சியும் எல்லோருக்குமானது என்ற செய்தியை கொடுப்பதாக இருக்கின்றது. எனவேதான் கடவுள் வானதூதரை தன் மகன் இயேசுவின் பிறப்பை அறிவிக்க இடையர்களிடம் அனுப்பினார். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இடையர்கள் என்பவர்கள் அந்த சமூகத்தால் அடையாளம் காணப்படாதவர்களாக இருந்தனர். இயேசு பிறப்பு செய்தியை அவர்களுக்கு அறிவித்ததன் வழியாக இயேசுவின் பிறப்பு அனைவருக்குமான சிறப்பு என்ற கருத்தை வலுப்படுத்துவதாக இருக்கின்றது. மேலும் யூதர்கள் தங்களுக்கு மட்டும்தான் மெசியா பிறப்பார் என்றும் தாங்கள் மட்டுமே மீட்புப் பெற முடியும் என்றும் ஆணவத்தோடு தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டனர். கடவுள் அவர்களுடைய செருக்கையும் ஆணவத்தையும் உடைத்தெறியும் விதமாக ஏழைகளான இடையர்களுக்கு நற்செய்தியை அறிவித்ததன் வழியாக நிரூபித்துள்ளார்.
மூன்றாவதாக இயேசு பிறப்பு விழாவில் எளிமை என்ற ஒப்பற்ற மதிப்பீட்டை கற்றுக்கொள்ள முடிகிறது. இயேசு ஆடம்பரத்தை அல்ல ; எளிமையை விரும்பினார். ஏழை எளிய மக்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக தன்னையே முழுவதுமாகக் அளிப்பதற்காக அவர் பிறந்தார். இயேசு தீவனத் தொட்டியில் கிடைத்திருப்பது தன்னையே ஒரு உணவாக கொடுக்க இருக்கிறார் என்ற சிந்தனையை வழங்குகிறது. அதையே இறுதியில் வாழ்ந்தும் காட்டினார். எனவே நாம் கொண்டாடுகின்ற கிறிஸ்து பிறப்பு விழா ஏழை எளிய மக்களுக்கு ஒரு சிறப்பான விழா. யூத சமூகத்தில் ஏழைகள் கடவுளின் சாபத்தைப் பெற்றவர்களாக கருதப்பட்டனர். ஆனால் ஆண்டவர் இயேசுவோ எளிமையான மாட்டு தொழுவத்தை தேர்ந்தெடுத்து அதிலே பிறந்தார். எனவே கிறிஸ்து பிறப்பு விழாவில் நம்முடைய ஆடம்பரத்தையும் நம்முடைய செல்வத்தையும் பிறருக்கு காட்டுவதை விட்டுவிட்டு, நம்மால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்ய முயற்சி செய்வோம். அப்பொழுது நாம் கொண்டாடுகின்ற இந்த கிறிஸ்து பிறப்பு விழா ஒரு மகிழ்ச்சியின் விழாவாக இருக்கும்.
எனவே இந்த கிறிஸ்து பிறப்பு விழா வெற்றுச் சடங்கோடு ஒவ்வொரு ஆண்டும் நின்றுவிடாமல், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடிய விழாவாக கொண்டாடினால் அதுதான் பாலன் இயேசுவுக்கு நாம் செய்கின்ற மிகச்சிறப்பான பரிசாகும். இறைவனை ஆடம்பரத்திலோ, பெரும் கொண்டாட்டங்களிலும் அல்ல, மாறாக, எளிமையிலும், எளியவர்களிடத்திலும் தான் பார்க்க முடியும். ஏழைகளிலும், எளியவர்களிலும் இறைவனைக் காண முயற்சி செய்வோம். உண்மையான புனிதம் இறைப்பலியினில் செபத்திலும் இணைந்திருப்பது மட்டுமல்ல; மனித சேவையிலும் மனிதநேயத்திலும் பிறர் நலச்சேவைகளிலும் கூட வெளிப்படும். எனவே நம்மோடு வாழும் கூடிய சக சகோதர சகோதரிகளிடம் பாலன் இயேசுவை காண்போம்.
புனித குழந்தை தெரசம்மாள் தன்னை துன்புறுத்தியவர்களிடம் இயேசுவைக் கண்டார். கன்னியர் மடத்தில் இருக்கின்ற பொழுது ஒரு அருள்சகோதரி இவருக்கு துன்பத்தை கொடுத்து வந்தார். ஆனால் குழந்தை தெரசம்மாள் அருள்சகோதரியை சிரித்த முகத்தோடே பார்ப்பார். எனவே அந்த அருள்சகோதரி குழந்தை தெரசம்மாவிடம் "என் வார்த்தைகளால் உன் மனதை புண்படுத்தினாலும் எவ்வாறு உன்னால் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்க முடிகிறது?" என்று கேட்டார். அதற்கு புனித குழந்தை தெரசம்மாள் "உம்மில் இருக்கும் இயேசு அழகாக தெரிகிறார்" என்று பதில் கூறினார். அந்த நொடிப் பொழுது முதல் அந்த சகோதரி மனமாற்றம் அடைந்தார். இதே ஆன்மீகத்தை தான் புனித அன்னை தெரசாவும் கொண்டிருந்தார். எனவே தான் ஒவ்வொரு ஏழை-எளியவரிடமும் நோயாளர்களிடமும் துன்புறுவோரிடமும் இயேசுவை காண முடிந்தது. நாம் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் ஒவ்வொரு ஏழை-எளியவரிடமும் நோயாளர்களிடமும் துன்புறுவோரிடமும் இயேசுவை முழுமையாகக் காண முயற்சி செய்வோம். ஏனெனில் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இந்த மனுக்குலத்திற்கு சிறப்பு.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உம் திருமகனின் பிறப்புவிழாவில் இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்கிறோம். உன் மகனின் பிறப்பு எங்களுக்கு தரும் நல்ல செய்திகளையும் மதிப்பீடுகளையும் எங்கள் வாழ்வில் வாழ்வாக்கிட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment