Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆண்டவருக்காக நம் வழியை ஆயத்தப்படுத்த தயாரா!
திருவருகைக் காலம் / இரண்டாம் ஞாயிறு
பாரூ: 5: 1-9
திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பிலி: 1: 4-6, 8-11
லூக்: 3: 1-6
"ஆண்டவருக்காக நம் வழியை ஆயத்தப்படுத்த தயாரா!"
ஒரு ஊரில் களப்பணி செய்வதற்காக சமூகப் பணி செய்யக்கூடிய நபர் சென்றார். அவர் சமூகப் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது அவ்வூரில் பூட்டிக் கிடந்த வீட்டை வேகமாகத் திறந்து கூட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நபருக்கு பிரமாண்டமான வீடு தனியாக இருக்கின்றது. அந்த நபரிடம் வசதியான வீடு ஒன்று இருக்கின்றது. ஆனால் பூட்டிக் கிடந்த வீட்டைச் சுத்தம் செய்ததன் நோக்கம் அரசு மானியத்தில் வீடு கட்டி அந்த வீட்டை வாடகைக்கு விட வேண்டும் என்பதாகும் .சுத்தம் செய்த நாளில் அதிகாரிகள் வீடு இல்லாதவர்களைப் பார்வையிட வந்தனர். இவ்வாறாக இவ்வுலகம் சார்ந்த பலன்களையும் செல்வங்களையும் பெறுவதற்கு நாம் ஆயத்தப்படுத்தப்படுத்துகின்றோம். ஆனால் நிலையான செல்வமாகிய கடவுளின் மீட்பினைப் பெற ஆயத்தப்படுத்தத் தவறிவிடுகிறோம்.
இந்த நிகழ்வு நமக்குப் பாடமாக இருக்கின்றது. ஆண்டவருடைய வருகைக்காக ஆயத்தப்படுத்தாமல் ஏனோதானோ என்று வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்த உலகம் சார்ந்தவற்றிற்கு ஆயத்தப்படுத்துகிறோம். ஆனால் நமக்குப் புது வாழ்வு அளிக்கும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்தத் தவறிவிடுகிறோம்.
நமது வாழ்க்கைப் பயணம் ஆண்டவரை நோக்கிய ஆன்மீகப் பயணம். இப்பயணம் சாலையில் நடப்பது போல வெளிப்புற பயணமல்ல. மாறாக மனதால் செய்யக்கூடிய பயணம். வானை நோக்கிய பயணம். சாதாரணமாகவே நாம் நடக்கும் பாதையில் பல தடைகள் இருக்கும். குண்டும் குழியுமாக பாதைகள் இருக்கும். கற்களும் முற்களும் இருக்கும். தேவையில்லாத அருவருப்பான கழிவுகளும் இருக்கும். ஆயினும் அவற்றையெல்லாம் நாம் கடந்து பயணம் செல்லத்தான் செய்கிறோம். சிலசமயங்களில் நம்மால் முடிந்த அளவு சில காரியங்கள் செய்து சுத்தப்படுத்துகிறோம். சாதாரண பயணத்திற்கே இத்தகைய சிரமம் இருக்கும் போது ஆன்மீகப் பயணப் பாதையைச் சீராக வைக்க வேண்டியது எத்துணை அவசியமாகிறது!
திருவருகைக் காலத்தின் இரண்டாம் விரத்தில் இருக்கும் நமக்கு இன்றைய நற்செய்தியில் மனமாற்றத்திற்கான அழைப்பை திருமுழுக்கு யோவான் வழியாக இறைவன் தருகிறார். வாழ்வின் கரடுமுரடான பாதையை செம்மைப்படுத்த நமக்கு அழைப்பு விடப்படுகிறது.எவ்வாறெல்லாம் நாம் வழியை ஆயத்தம் செய்வது?
1.ஆன்மீகப் பயணத்தில் நமது அசட்டைத்தனம் என்ற பள்ளத்தாக்கை நாம் நிரப்பி இறை ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.இறையச்சத்தில் நாளும் வளர வேண்டும்.
2.மலைபோல் இருக்கும் நமது பாவங்களையும் குற்றங்களையும் மனமாற்றத்துடன் இறைவனிடம் முறையிட்டு அவரது இரக்கத்தை நாட வேண்டும். இத்தகைய செயல்களை தொடர்ந்து செய்யாமல் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
3. நம் மனதிலே உள்ள கவலைகள், தேவையற்ற குழப்பங்கள், பிறரைப்பற்றிய தேவைற்ற எண்ணங்கள், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற கழிவுகளையும் கற்களையும் முட்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
4.இறுதியாக இறைன்பு பிறரன்பு என்பவற்றை நம் இருகண்களாகக் கொண்டு தெளிவான பார்வையுடன் பயணிக்க வேண்டும்.
இப்படிப்பயணிக்கும் போது நமது வாழ்வு செம்மையாக மாறும். நமது ஆன்மீகப்பயணம் சரியான முறையில் இறைவனை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கும். இறைவனும் நம்மோடு பயணித்து நமக்கு மீட்பு வழங்குவார். அன்புக்குரியவர்களே இறைவனை எதிர்கொள்ள பாதையை ஆயத்தப்படுத்தினால் மட்டும் போதாது. அலங்கரிக்க வேண்டும். நமது மனமாற்றத்தால் வழியை ஆயத்தம் செய்து, நற்செயல்களாலும் அன்பாலும் இறையச்சத்தாலும் அவருக்காகப் பாதையை அலங்கரிப்போம். அது இத்திருவருகைக் காலத்தில் மட்டுமல்ல நம் வாழ்நாள் முழுதும், இறைவனை நாம் சென்றடையும் நாள் வரையும் தொடரட்டும்.
இறைவேண்டல்
இறைவா! உம்மை நோக்கிய எம் ஆன்மீகப்பயணத்தின் பாதையை சிறப்பாக ஆயத்தப்படுத்தவும் அலங்கரிக்கவும் உமது அருளை நிறைவாகப் பொழிந்தருளும். ஆமென்.
அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment