ஆண்டவரின் வருகை மகிழ்ச்சியின் கொண்டாட்டம்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
I : செப்:   3: 14-17
II: எசா 12: 2-3. 4. 5-6
III: பிலி: 4: 4-7
IV : லூக்: 3: 10-18

நாம் வாழும் இந்த வாழ்க்கையில் வருகை என்றாலே மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் . ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கிறதென்றால் புதிய உயிரின் வருகையை முன்னிட்டு அங்கு மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகி புதிய மனைவி அல்லது மருமகள் புகுந்த வீட்டிற்கு வரும்பொழுது ஒருவிதமான மகிழ்ச்சி இருக்கும். நமக்கு பிடித்தவர்கள் நம் வீட்டிற்கு வருகின்ற பொழுது அல்லது நமக்கு பிடித்தமான இடத்திற்கு வரும் பொழுது மகிழ்ச்சி இருக்கும். குடும்ப கொண்டாட்டங்களிலும் திருவிழாக் காலங்களிலும் உறவினர்களின் வருகையின் போதும் மகிழ்ச்சி இருக்கும். பெரிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அதிகாரிகள் நாம் வாழும் இடத்திற்கு வரும் பொழுது ஒருவிதமான மகிழ்ச்சி இருக்கும். இவ்வாறாக வருகை என்றாலே அது மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கின்றது. நம்முடைய மனதிலே ஒரு வகையான நிறைவையும் ஆனந்தத்தையும் தரக்கூடிய வகையில் இருக்கின்றது. இந்த உலகம் சார்ந்த சாதாரண மனிதர்களின் வருகையையும்  ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் நமக்கு தருகின்றது என்றால் இந்த உலகத்தையே மீட்க வந்த ஆண்டவர் இயேசுவின் பிறப்பு, அவரின் வருகை ஒப்பற்ற மகிழ்ச்சியை தரும் அல்லவா!

நம்முடைய தாய் திருஅவையானது  திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறாகக் கொண்டாடுகிறது. ஆண்டவரின் வருகையை குறித்தும் பிறப்பினை குறித்தும் அகமகிழ்ந்து நாம் கொண்டாட  வேண்டும். நாம் ஏன் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு காரணங்கள் இருக்கின்றன. அவையாவன : 

முதலாவதாக, நாம் அனைவருமே கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அகமகிழ்ந்து கொண்டாட வேண்டும். ஏனென்றால் நாம் கடவுளின் சாயலில் தான் படைக்கப்பட்டுள்ளோம்   என்பதை இயேசுவின் பிறப்பு உறுதி செய்கின்றது. கடவுள் மனிதனைப் போல் தான் இருக்கிறார். நான் அவரின் சாயலில் தான் படைக்கப்பட்டுள்ளோம் என்பதற்கு ஆண்டவனுடைய பிறப்பும் வாழ்க்கையும் சான்று பகர்ந்துள்ளது. எனவே நாம் இந்த காலங்களில் மகிழ்ச்சியோடு கடவுளின் வருகைக்காக தயாரித்து கொண்டாட அழைக்கப்பட்டுள்ளோம். 

இரண்டாவதாக ஆண்டவர்  இயேசுவின் வருகையும் பிறப்பும் கடவுளின் முகத்தை தரிசிக்க பேறுபெற்ற பாக்கியத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. கடவுளின் மகனை   மனிதர்களாகிய நாம் நேரடியாக காண்பதற்கு அவரின் பிறப்பு வாய்ப்பு கொடுத்துள்ளது. கடவுள் எந்த அளவுக்கு நம்மை அன்பு செய்கிறார் என்பதற்கு சான்றாக அமைகின்றது. எனவே நாம் அகமகிழ்ந்து இந்த கிறிஸ்து பிறப்பு விழாவையும் இரண்டாம் வருகையும் எதிர்நோக்கி நம்மையே  ஆயத்தப் படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். 

மூன்றாவதாக எல்லா மனிதரும் மீட்புக்கு உரிமை உடையவர்கள் என்ற சிந்தனையை இயேசுவின் பிறப்பும் வருகையும் சுட்டிக்காட்டுகின்றன. ஆண்டவர் இயேசுவினுடைய   பணியானது  குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த மனித குலத்தையே உள்ளடக்கியதாக இருந்தது. இது எதைச் சுட்டிக் காட்டுகிறது என்று சொன்னால் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதருக்கும் மீட்பு  உண்டு என்ற மகிழ்ச்சி செய்தியை கொடுப்பதாக இருக்கின்றது.

நான்காவதாக இயேசுவின் பிறப்பு மற்றும் வருகையின் வழியாக அனைவரும் மீட்பு பெற்றுள்ளோம் இந்த மகிழ்ச்சியின் செய்தியை நாம் அனைவரும் பெற முடிகின்றது.

இவ்வாறாக நான்கு கோணங்களில் நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? நாம் ஏன் மகிழ்ச்சியாக இந்த திருவருகைக் காலத்தில் ஆண்டவருடைய வருகைக்காக ஆயத்தப்படுத்த வேண்டும்? என்ற கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாக இன்றைய வாரம் இருக்கின்றது.

இந்த வாரம் கௌதேத்தே தொமினிக்கே (மகிழ்ச்சி ஞாயிறு)  என கொண்டாடப்படுகின்றது. அகமகிழ்ந்து நாம் எதிர்நோக்கி இருக்க இந்த வார வழிபாட்டு வாசகங்கள் அழைப்பு இருக்கின்றன. முதல் வாசகமானது மகிழ்ச்சிக்கான அழைப்போடு  தொடங்குகின்றது. இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று உறுதி செய்கிறார். இன்றைய நற்செய்தி அதற்கான வழியினை எடுத்துக்காட்டுகின்றது.  

"எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள். ஞானியாக மாறுவதற்கான வழி அதுவே " என்கிறார் கொலோட். இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நாம் அனைவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றன. பாபிலோனிய அடிமைத்தனத்தில் உழன்ற இஸ்ராயேல் மக்களுக்கு, மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் படி செப்பனியா இறைவாக்கினர் அழைப்பு விடுக்கிறார். புனித பவுலடியாரும் "மகிழுங்கள், மீண்டும் மகிழுங்கள் "என்கிறார். எனவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு மகிழ்ச்சியின் வாழ்வு. ஏனென்றால் யார் நம்மை கைவிட்டாலும் நம்மை அன்பு செய்வதற்கு நம் ஆண்டவர் இயேசு இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரால் கொடுக்க முடியாது. நமக்கு நாம் தான் கொடுக்க முடியும். எவ்வளவுதான் பணம் பட்டம் பதவி வைத்திருந்தாலும் அதில் நிறைவு காண வில்லையென்றால் நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. ஒன்றுமே இல்லாமல் நாடோடி மனிதனாக வாழ்ந்தாலும் அதிலே நிறைவு கண்டால் மகிழ்ச்சி அவரோடு இருக்கும். ஒரு காலத்தில் அறிவியல் தொழில்நுட்பம் எதுவுமே இல்லை. ஆனால் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லா அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் பல நேரங்களில் மகிழ்ச்சி இல்லாமல் மன உளைச்சலோடு நம்மில் பலர் வாழ்கிறோம்.

அப்படியென்றால் என்றால் மகிழ்ச்சி யார் கையில் உள்ளது? நம்முடைய வாழ்விலும் செயலிலும் தான் இருக்கின்றது. நமக்கு ஆத்ம திருப்தி ஏற்பட வேண்டுமென்றால் நாம் நம்மையே பிறருக்கு கொடுக்க வேண்டும். பிறரில் இயேசுவை காண வேண்டும். பிறர் நிறைவு அடைவதின் வழியாக நாம் மகிழ்ச்சியின் கனியைச் சுவைக்க வேண்டும். முதலாவதாக இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானிடம் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்? " என்று மக்கள் கூட்டத்தினர் கேட்ட போது "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்றார். அப்படியென்றால் நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சி என்ற நிறைவை  பெறுவதற்கு பகிர்தல் என்ற பண்பானது முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.   எனவே பெறுவதில் அல்ல பகிர்தலில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது.  எனவே பகிர்ந்து  பாருங்கள் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

இரண்டாவதாக  இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானிடம் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்? " என்று வரிதண்டுபவர் கேட்ட கேள்விக்கு " உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்" என்று கூறி இருப்பதில் நிறைவு காண அழைப்பு விடுத்தார். நமக்கு உண்மையான மகிழ்ச்சி வேண்டுமென்றால் இருப்பதில் நிறைவு காண வேண்டும். பிறர் வைத்திருப்பதை பார்த்து பொறாமை படக்கூடாது. அப்பொழுது நிச்சயமாக மகிழ்ச்சி அமைதி கிடைக்கும். போதும் என்ற மனமே நமக்கு நிறைவுள்ள மகிழ்ச்சியை தரும்.

மூன்றாவதாக இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானிடம் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்? "என்று படைவீரர்கள் கேள்வி கேட்டபோது " நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்'' என்று மனித நேயத்தோடு மனிதத்தை மதிக்க அழைப்பு விடுத்தார்.நம்மோடு வாழக்கூடிய மனிதர்களை நாம் மதிக்கின்ற பொழுது நமக்கு மகிழ்ச்சி தானாக வரும். அவர்களை வெறுக்கின்ற பொழுது  மகிழ்ச்சி இல்லாச் சூழல் உருவாகும்.

இவ்வாறாக  "இனிதான வாழ்வை இகமதில் வாழ மனிதநேயம் கொண்டவர்களாக வாழ்வோம். மனிதநேயம் நம்மில்  பிறந்திட நம் மனதை திறந்த உள்ளத்தோடு திறந்து வைப்போம். அப்பொழுது நிச்சயம் நமக்கு பகிர்தல், மனநிறைவு மற்றும் மனிதத்தை மதிக்கக்கூடிய மனநிலை கிடைக்கும். அதன் வழியாக நிறைவான மகிழ்ச்சியை நாம் அடைய முடியும். எனவே இயேசுவின் வருகைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் மகிழ்ச்சியின் சாட்சிகளாய் மாறி இறையாட்சியின் கருவிகளாக உருமாறுவோம். நம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதும் மகிழ்ச்சியாக  இல்லாததும் நமது கையில் தான் உள்ளது. திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரத்தில் நம்முடைய வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்

மகிழ்ச்சியின் இறைவா! உம்முடைய திருமகனின் பிறப்பு எங்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை எங்களுடைய பகிர்தல் என்ற நல்ல பண்பின் வழியாகவும் மனநிறைவு என்கிற  மனநிலையின் வழியாகவும் மனிதத்தை மதித்தல் என்ற மனிதநேய செயல்கள் வழியாகவும்  அடைந்திட அருளையும் ஆசியையும் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 3 =