Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அர்ப்பணம்- தீமையின் வீழ்ச்சி! இறையரசின் எழுச்சி! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் நான்காம் புதன்
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
I: மலா: 3: 1-4
II : திபா 24: 7. 8. 9. 10
III: எபி: 2: 14-18
IV: லூக்: 2: 22-40
இன்று திருஅவையோடு இணைந்து நாம் இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக்கிய விழாவைக் கொண்டாடுகிறோம். மோசேயின் சட்டப்படி தலைப்பேறான ஆண்மகவை ஆண்டவருக்கு அர்பணமாக்க தாய் மரியாவும் தந்தை யோசேப்பும் குழந்தை இயேசுவை கோயிலுக்கு எடுத்து வருகிறார்கள். இறைமகன் இயேசு மனுஉரு எடுத்ததன் நோக்கம் அவர் குழந்தையாய் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட போதே வெளிப்படுத்தப்பட்டது.
மெசியாவைக் காணும் முன்பு தான் சாகப்போவதில்லை என்று நன்கு அறிந்திருந்த சிமியோன் தூய ஆவியால் தூண்டப்பட்டவராய் கூறிய வார்த்தைகள்
“இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்."(லூக் 2:34) என்பதாகும். அவர் கூறியவாறே இயேசு அதிகாரத்தால் அடக்குபவர்களின் வீழ்ச்சிக்கும் எளியவர், வறியவர்கள், புறந்தள்ளப்பட்டவர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்தார் என நாம் விவிலியத்தில் காண்கிறோம். மேலும் அவர் பலரால் எதிர்க்கப்பட்டார்.
மரியா தன் புகழ்பாடலில் கூறிய "அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்"(லூக் 1:52-53) என்ற வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறுவதை நாம் காண்கிறோம்.
அதுதான் இயேசுவின் அர்ப்பண வாழ்வு. தந்தை கடவுள் தனக்குப் பணித்தவற்றை முழு மனதுடன் செய்ததாலே அவர் எதிர்க்கப்ட்டார். தங்கள் வீழ்ச்சியை எண்ணிப் பயந்த பரிசேயர்,மறைநூல் அறிஞர், சதுசேயர்,ஆட்சியாளர்கள் எல்லாரும் அவரை எதிர்த்து குற்றம் சாட்டினர். ஆனால் இயேசுவின் அர்ப்பணம் அவரை முடக்கிப் போட வில்லை.
இன்று இவ்விழா நமக்குக் கூறும் செய்தி என்ன என்று சிந்தித்தால் நமது வாழ்வும் நமது அர்ப்பணமும் நாம் வாழ்கின்ற பகுதியில் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் அடையாளமாய்த் திகழ வேண்டும் என்பதே.
நல்லவற்றை வீழ்த்தி தீயவற்றை எழுப்பிவிடும் வாழ்வு உண்மையான அர்ப்பண வாழ்வு அல்ல.
கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாருமே இறையாட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். இறையாட்சியின் விழுமியங்களான அன்பு, அமைதி,நீதி, சமத்துவம்,சகோதரத்துவத்தின் எழுச்சியை இவ்வுலகில் உருவாக்கும் அடையாளங்களாய் நாம் திகழ வேண்டும். அதேபோல பாவம்,அநீதி,உலக மாயைகள், வெறுப்பு, பகைமை போன்றவற்றின் வீழ்ச்சிக்கான அடையாளங்களாகவும் நாம் விளங்க வேண்டும். அவற்றை நாம் வாழும் சூழலில் அன்றாட நிகழ்வுகளில் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதனால் நாம் எதிர்க்கப்பட்டாலும் முடங்கிக் கிடக்காமல் தொடர்ந்து இயேசுவைப் போல பயணிக்க வேண்டும்.ஆம். இது தான் இயேசுவின் அர்ப்பணம் நமக்குத் தரும் செய்தி. இயேசுவின் அர்ப்பணத்தை நமது அர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு செயல்பட வரம் கேட்போம். இன்று தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த குருக்கள் துறவியருக்காக மன்றாடுவோம். அவர்கள் சமூக மாற்றத்தின் அடையாளங்களாகத் திகழ வாழ்த்துவோம்.
இறைவேண்டல்
அர்ப்பணத்தின் இறைவா நாங்கள் உம்மைப் போல எங்களையே இறையாட்சிக்காக அர்ப்பணித்து தீமையின் வீழ்ச்சிக்கும் நன்மையின் எழுச்சிக்கும் அடையாளமாய்த் திகழ வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment