Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அர்பணித்தலில் மீட்பா? | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 33 ஆம் சனி - தூய கன்னி மரியாவை காணிக்கையாக அர்ப்பணித்த விழா - I. செக்: 2:10-13; II. திபா: 144:1.2.9.10; III. மத்: 12:46-50
ஒரு கிராமத்தில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கணவர் இராணுவத்தில் பணி செய்து வந்தார். மனைவி தனது ஊரில் விவசாயம் செய்து வந்தார். மகன் பள்ளியிலே தொடக்கநிலை படித்துப் படித்து வந்தான். கணவர் இந்திய இராணுவத்தில் பணி செய்ததால் நாட்டு எல்லைப் பகுதியில் பணி செய்தார். அவர் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த பகுதியில் பனிச் சரிவு ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டது. அவரது உடலை தனது சொந்த கிராமத்திற்கு எடுத்து வந்தனர். அனைத்து மக்களும் இத்தகைய சூழலைக் கண்டு கண்ணீர் வடித்து அழுதனர். தன் கணவனை இழந்த மனைவியோ தனது ஒரே மகனை தன் அருகில் அழைத்து "தன்னுடைய கணவனின் உடலுக்கு முன்னால் தனது ஒரே குழந்தையையும் இராணுவத் துறைக்கு அர்ப்பணிப்பேன்" என்று கூறினாராம். இதை கண்ட அனைத்து மக்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
உண்மையான அர்ப்பணிப்பு என்பது இந்த தாய் கொண்டிருந்த அர்ப்பணிப்பே ஆகும். அர்ப்பணிப்பு என்பது பிறரின் நல்வாழ்வுக்காக தன்னையே கையளிப்பது. தன்னலம் கடந்து பிறர் நலத்தோடு பிறர் வாழ்வு வளம் பெற உழைக்கும் மனநிலை. அர்ப்பணித்தல் என்பது எல்லா ஆன்மீக மரபுகளிலும் நாம் காணமுடிகின்றது. ஒப்புக்கொடுத்தல், கையளித்தல், காணிக்கையாக்குதல், சரணடைதல் போன்ற வார்த்தைகள் 'அர்ப்பணித்தல்' என்ற வார்த்தையோடு தொடர்புடையதாகும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அர்ப்பணம் என்ற ஒன்று இருந்தால் தான் அங்கு பிறர்நலம் இருக்கும். இன்று நாம் தாய் திருஅவையோடு இணைந்து தூய கன்னி மரியாவை காணிக்கையாக அர்ப்பணித்த விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
அன்னை மரியா தனது அர்ப்பண வாழ்வின் வழியாக இந்த உலகிற்கு மீட்பினைக் கொண்டு வந்தார். கடவுள் தன்னுடைய திருமகனை இந்த உலகிற்கு மனிதனாக அனுப்பி நமக்கெல்லாம் மீட்பினை வழங்க திருவுளம் கொண்ட பொழுது அன்னை மரியாவை கடவுள் அவர் பிறப்பதற்கு முன்பாகவே தேர்ந்தெடுத்தார். இறைவாக்கினர்களை தாயின் கருவில் உருவாகும் முன்பே தேர்ந்தெடுத்தது போல அன்னை மரியாவும் ஜென்ம பாவம் இல்லாமல் பிறக்கத் திருவுளம் கொண்டார். அன்னை மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டார் என்ற விழாவானது மக்களின் பாரம்பரியத்திலிருந்து எழுந்த விழாவாகும். அதிலும் குறிப்பாக இந்த விழாவினை கிரேக்கர்கள் "கன்னி மரியா ஆலயத்திற்குள் நுழையும் விழா" என்று கொண்டாடினர்.
அன்னை மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்பதற்கு பல சான்றுகள் இல்லாவிட்டாலும் திருஅவையால் அங்கீகரிக்கப்படாத ஒரு சில நூல்களில் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. அன்னை மரியாவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி யாக்கோபின் நற்செய்தியில் பின்வருமாறு சான்றுகள் இருக்கின்றன. "மரியாவின் பெற்றோர்களாகிய சுவைக்கீன் மற்றும் அன்னா இருவரும் முதிர்ந்த வயது அடையும் வரை குழந்தையில்லாமல் இருந்தார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தார்கள். இறைவனின் வாக்கு இவர்களுக்கு அருளப்பட்டது. அதன்படி மரியா பிறந்தார். குழந்தை பிறந்ததற்கு நன்றியாக தங்கள் மகளை கூட்டிக்கொண்டு எருசலேம் ஆலயத்திற்குச் சென்றார்கள். ஆண்டவருக்கு அவரை காணிக்கையாக்கினார்கள். அதன்பிறகு அவர் இளம்பெண் ஆவது வரை ஆலயத்தில் இருந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதற்கு 'மரியாவின் பிறப்பு பற்றிய நற்செய்தி நூலிலும்' போலி மத்தேயு நற்செய்தி நூலிலும் "மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது அவரது பெற்றோர் தங்கள் நேர்ச்சையை நிறைவேற்ற ஆலயத்திற்குத் தங்கள் மகள் மரியாவை அழைத்துச் சென்றார்கள். அதன்பிறகு மரியா ஆலயத்தில் கல்வி கற்றார். இறைவனின் அன்னையாகும் பேற்றிற்குத் தயாரிக்கப்பட்டார்" போன்ற குறிப்புகள் உள்ளன.
இந்த விழா விவிலிய பின்னணி இல்லாமல் கொண்டாடப்பட்டாலும் மக்களின் நம்பிக்கையின் வழியாகவும் மரபின் வழியாகவும் வளர்ச்சி பெற்றது. இந்த விழாவானது 9 ஆம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென்பகுதி முழுவதும் சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டது. 1472 ஆம் ஆண்டு இவ்விழாவானது திருப்பலிப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் 1568 ஆம் ஆண்டு இவ்விழாவினை நீக்கிய போதும் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் 1585 ஆம் ஆண்டு உரோமை திருவழிபாடு நாட்காட்டியில் சேர்த்தார். இவ்வாறாக திருஅவையில் இவ்விழாவானது வளர்ச்சி பெற்றது.
இந்த விழா நமக்கு சொல்லும் செய்தி என்ன? என்பது பற்றி சிறப்பான விதத்தில் இன்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். அன்னையின் அர்ப்பண வாழ்வு அவர் தாயின் கருவில் உருவாகும் முன்பே ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் வயதான தன் தாய் தந்தையர் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனையோடு கடவுள் நோக்கி நம்பிக்கையோடு மன்றாடியதால் கடவுள் குழந்தை பாக்கியத்தை கொடுத்தார். இது அவருடைய பெற்றோரின் அர்ப்பண வாழ்வை சுட்டிக்காட்டுகிறது. அர்ப்பணத்தோடு அவர்கள் இறைவேண்டல் செய்ததால் கடவுள் அன்னை மரியாவை கொடையாக கொடுத்தார். அன்னை மரியாள் கணவர் மனைவியின் இச்சையினால் பிறந்தவர் அல்ல; மாறாக, கடவுளின் திருவுளத்தால் பிறந்தவர். தன் மகனை எனவே இந்த உலகிற்கு மீட்பரை அனுப்ப அன்னை மரியாவை கடவுள் தேர்ந்தெடுத்தார். மேலும் அவருடைய பெற்றோர் கடவுளின் திருவுளத்தை உணர்ந்தவர்களாய் அன்னை மரியாவின் மூன்றாம் வயதில் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது அன்னை மரியா கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. அதே போல் அன்னை மரியாவின் பெற்றோரின் அர்ப்பண வாழ்வையும் சுட்டிக்காட்டுகின்றது.
அன்னை மரியாவும் கபிரியேல் வானதூதரின் இறை செய்தியை கேட்டபோது கடவுளின் திருவுளத்தை உணர்ந்த பிறகு "நான் ஆண்டவரின் அடிமை " (லூக்: 1: 38) என்று கூறி தன்னை முழுவதுமாக கையளித்தார். இந்த வார்த்தைகள் மிகவும் வளமான வார்த்தைகள். அன்னை மரியாள் தன்னை அடிமையாக்கும் அளவுக்கு கடவுளிடம் அர்ப்பணிக்கிறார். இது தனது சொந்த விருப்பத்தை விட்டுவிட்டு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற தயாராக இருக்கும் அர்ப்பண மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறது. அன்னை மரியாள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன்னுடைய சொந்த விருப்பத்தை எல்லாம் விட்டுவிட்டு, கடவுளின் விருப்பத்தையே தனது விருப்பமாகவும் கொண்டு ஆண்டவர் இயேசு இந்த மண்ணுலகத்தில் பிறக்க தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். அதேபோல இயேசுவும் அர்ப்பணிப்போடு வாழ வழிகாட்டினார். இயேசு இறைமகனாக இருந்தபோதிலும் மனித உருவெடுத்ததால் ஒரு சாதாரண மனிதனைப் போல அன்னை மரியாவிடம் பல்வேறு வாழ்வியல் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார். அதில் மிகச் சிறந்த வாழ்வியல் பாடம் அர்ப்பண வாழ்வு. இயேசு அன்னை மரியாவிடம் 30 ஆண்டுகள் கற்ற அர்ப்பண வாழ்வை தனது மூன்று ஆண்டு பணி வாழ்வில் முழுவதுமாக பயன்படுத்தினார். இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்துவ சமயமானது வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அதற்கு இயேசுவின் மூன்று ஆண்டு பணி காலங்கள் அடிப்படையாக இருக்கின்றது.
அதே போல் அன்னை மரியாவினுடைய துணிச்சல் நிறைந்த மனநிலை நமக்கு மிகச் சிறந்த வாழ்வியல் படத்தை சுட்டிக்காட்டுகிறது. ஒரு பெண் திருமணம் ஆவதற்கு முன்பாக கருவுற்றால் மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். ஆனால் கடவுள் நிச்சயமாக தன்னை வழிநடத்துவார் என ஆழமாக நம்பி இந்த மீட்பின் திட்டத்திற்கு துணிவோடு அர்ப்பணித்தார். இத்தகைய மனநிலையை நாமும் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். அன்னை மரியாவின் உச்சகட்ட அர்ப்பண வாழ்வு இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி தொங்கிய பொழுது வெளிப்பட்டது. எந்த ஒரு தாய் இந்த உலகத்தில் தன் மகன் துன்பப்படுவதை தாங்க மாட்டார். ஆனால் ஆண்டவர் இயேசு சிலுவையிலே இந்த மண்ணுலகம் மீட்புப் பெற தொங்கியபோது ஒரு தாயாக துன்பப்பட்டாலும் தனது மகன் வழியாக உலகத்திற்கு மீட்பு வரப்போகின்றது என்று பிறர் நலத்தோடு தந்தை கடவுளைப் போல தனது மகனையே பாவக் கழுவுவாயாக அர்ப்பணித்தார். இயேசு உயிர்பெற்று விண்ணகம் சென்ற பிறகு சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி நடுங்கிய போது அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களை திடப்படுத்தி பெந்தக்கோஸ்து நாளிலே தூய ஆவியைப் பெற்றுக் கொடுத்து திருஅவைக்கு அவர்களை மிகச்சிறந்த நற்செய்தியாளர்களாக அர்ப்பணித்தார். அந்த அர்ப்பணம் தான் இன்று மிகப்பெரிய திருஅவையாக வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே அன்னைமரியாவினுடைய அர்ப்பண வாழ்வு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. எனவே இன்றைய நாளில் அன்னை மரியாவின் மனநிலையில் அர்ப்பண உள்ளத்தோடு கடவுளின் திருவுளத்தை ஏற்று இந்த உலகத்திலே மீட்பு அனைவருக்கும் கிடைக்கப் பெற நாம ஒரு கருவியாக பயன்பட முயற்சி செய்வோம். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
அர்ப்பண வாழ்வின் நாயகனே எம் இயேசுவே! நீர் இறைமகனாக இருந்த பொழுதும் எங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக உமது அர்ப்பண வாழ்வின் வழியாக எங்களுக்கு மீட்பினை வழங்கியுள்ளீர். அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் உம் தாய் அன்னை மரியாவை போலவும் உம்மைப் போலவும் எந்நாளும் அர்ப்பண மனநிலை கொண்டவர்களாக வாழ்ந்து இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர தேவையான அருளையும் ஞானத்தையும் தாரும். அன்னை மரியா கொண்டிருந்த அர்ப்பண உள்ளத்தையும் தாழ்மையான மனநிலையும் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment