அமைதியைப் பகிர்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதினான்காம் வியாழன்; I: தொ.நூ: 44 :: 18-21, 23-29; 45: 1-5; II : திபா: 105: 16-17. 18-19. 20-21 ; III:  மத்: 10:  7-15

இன்றைய வாசகங்கள் நம் அனைவரையும் அமைதியின் தூதுவர்களாக வாழ  அழைக்கின்றன. அமைதி என்பது   ஒருவித மன அழுத்தமில்லாத நிலை, உள்ளும் புறமும்  இடையூறுகள் ஏதுமில்லாத நிம்மதியான சூழ்நிலையாகும்.
தீமை அனைத்திலிருந்தும் விடுபட்ட நிம்மதியான நிலையே முழுமையான அமைதி. ஒரு நபர் நல்ல ஆரோக்கியம்,  உறவுகளின் நல்லிணக்கம் மற்றும் தீமை எல்லாவற்றிலிருந்தும் விடுபடுதல் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் அமைதியை அனுபவிக்கிறார். இத்தகைய  அமைதி கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது.இப்படிப்பட்ட அமைதியை நாம் வாழும் இடங்களிலும் காணும் மனிதர்களிடமும் உருவாக்குவதே நமது பணியாகும்.

புனித பிரான்சிஸ் அசிசியார் அமைதிக்கான தனது இறைவேண்டலில் பகையுள்ள இடத்தில் பாசத்தையும், வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பையும், கலக்கமுடையோர் மனதில் நம்நிக்கையையும் விதைக்கும் தூதுவனாகத் தன்னை  மாற்றுமாறு மன்றாடினார். இன்றைய வாசகங்கள் இவ்வேண்டலை நமக்கு நினைவூட்டும் விதமாக அமைவதை நாம் காணலாம். 

இன்றைய முதல் வாசகத்தில் யோசேப்பு தன் சகோதரர்களுடன் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்துவதை நாம் வாசிக்கிறோம். தன் சகோதரர்கள் தனக்குத் தீங்கிழைத்தாலும் கூட அவர்களுடைய துயர நேரத்தில் அவர்களை மன்னித்து பகைஉணர்வுகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தினார் யோசேப்பு. இவ்வுறவு ஒன்றிப்பு அவர்கள் வாழ்வில் பெரும் நிம்மதியைத் தந்தது. இவ்வாறு யோசேப்பு அங்கே அமைதியின் தூதுவரானார். 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு தன் சீடர்களைப் பணிக்காக அனுப்பும் போது நோய்களை குணமாக்கவும், பேய்களை  ஓட்டவும், தாங்கள் பெற்ற கொடைகளைப் பகிரவும் அறிவுறுத்தினார். ஒவ்வொரு வீட்டையும் வாழ்த்தி அமைதியுடன் வாழ ஆசி வழங்குமாறு பணித்தார்.இவ்வாறாக பலவித பிரச்சினைகளால் அமைதி இழந்து வாழ்பவர்களுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கித்தர தன் சீடர்களை அனுப்பினார் இயேசு. 

நாம் வாழும் சூழல்களில் நாமும் நம்முடன் வாழும் பலரும் அமைதியை இழந்து தவிக்கின்ற நிலை பரவலாகக் காணப்படுகிறது. வேலையின்மை, தேவையான பொருளாதாரமின்மை,குடும்பச் பிரச்சினைகள், நோய்கள், உறவுச் சிக்கல்கள் இவற்றால் அமைதியை இழந்து தவிக்கும் நாம் ஒருவரை ஒருவர் தேற்றி, ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்ந்து பகைமையைக் ககளைந்து வாழ்ந்தோமெனில் இயேசு வழங்கிய அமைதியைப் பகிரும் தூதர்களாக நிச்சயமாக வாழ இயலும். அமைதியைப் பகிரப் புறப்படுவோமா?

இறைவேண்டல்

அமைதியின் அரசரே எங்களை உம் அமைதியைப் பரப்பும் தூதுவர்களாக மாற்றும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

5 + 4 =