அமைதியில் இறைவனை அறிவோமா? | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (09.08.2020) - பொதுக்காலத்தின் 19 ஆம் ஞாயிறு - ஆண்டவரின் உருமாற்ற திருவிழா - I. 1 அர: 19:9,11-13; II. திபா: 85: 8b, 9. 10-11. 12-13; III. உரோ: 9: 1-5; IV. மத்:  14: 22-33

அமைதியில் இறைவனை அறிவோமா?

ஆலயத்தில் திருப்பலி முடிந்தவுடனேயே வெளியே சென்றுவிடாமல் சில மணித்துளிகள் அமைதியாக அமர்ந்து ஜெபிக்கும் ஒரு இளைஞனை அருட்தந்தை தினமும் கவனித்துக்கொண்டிருந்தார். இந்த காலத்தில் இப்படி ஒரு இளைஞனா என்று மிகுந்த

  ஆச்சரியத்துடன், ஒருநாள் அந்த இளைஞனிடம் உரையாடினார். தம்பி உன் வயது இளைஞர்கள் ஆலயத்திற்கு வருவதே அபூர்வம். ஆனால் நீயோ தினமும் வந்து தனிமையில் அமைதியாக ஜெபிப்பது  என்னை வியக்க வைக்கிறது என்று கூற அந்த இளைஞன் மறுமொழியாக"பாதர் நான் ஒரு ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவன். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். ஆயினும் நன்கு படித்தேன். துன்பங்கள் அதிகம் அனுபவித்ததால் கடவுள் மீது நம்பிக்கை சற்று குறைவுதான்.நான் வளர வளர என் குடும்பத்தின் தேவைகள் அதிகமாவதையும் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதையும் உணர்ந்தேன்.பல முறை  பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன்.நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொண்டேன். ஆனால் வேலை கிடைத்த பாடில்லை. குடும்ப கஷ்டங்கள் பெருகப் பெருக பல குழப்பங்கள் என்னில் எழுந்தன. தளர்ந்து போய்விட்டேன். என்னை ஊக்கப்படுத்த யாருமில்லை. மாறாக வீட்டிலுள்ளவர்கள் கூட குறைகூற ஆரம்பித்தனர். ஒரு முறை ஒரு கம்பெனியில் வேலைக்காக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தேன். ஆனால் மனதிலே . வேலை கிடைக்குமா கிடைக்காதா  என்ற ஒரு குழப்பம். அவநம்பிக்கை. அந்தக்குழப்பத்தில் நேர்முகத்தேர்வுக்காக நன்கு தயார் செய்த போதும் எனக்கு துணிவில்லாதது போன்ற உணர்வு. சரியாக ஆலயத்தை தாண்டி செல்லும் போது என்னை அறியாமலேயே ஆலயத்திற்குள் சென்றேன். ஒன்றும் ஜெபிக்கவில்லை. என்னையே அமைதிப்படுத்தினேன். எனக்குள் ஒரு புத்துணர்வு. மனத்தெளிவு. என் தோளைத்தட்டிக் கொடுத்து தைரியமாகப் போ. நானிருக்கிறேன் என்று யாரோ சொன்னது போன்ற ஒரு உணர்வு. அது நிச்சயமாக ஒரு இறைஅனுபவம் என அறிந்தேன். அந்த முறை

  நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றேன். நல்ல முன்னேற்றம் என் வாழ்வில் கண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் அமைதியில் இறைவனை அனுபவித்து என் நம்பிக்கையில் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

இன்றைய வாசகங்கள் அமைதியில் இறைவனை அனுபவிக்க நம்மை அழைக்கின்றன. பரப்பரப்பான இன்றைய உலகில் துன்ப துயரங்கள் உலக பாரங்கள் நம்மை ஒருபுறம் அழுத்த, கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நம்மை ஒரு புறம் ஈர்க்க, எந்த நேரத்தில் எதை செய்வது என்ற குழப்பத்திலேயே நாம் நாட்களைக் கழிக்கிறோம். இந்நிலையில் அமைதியில் எவ்வாறு இறைவனைக் காண முடியும் என்ற கேள்வி நம்மில் எழலாம்.

தன் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஒரேபு மலையில் தஞ்சமடைந்த எலியாவிற்கு இடிமுழக்கத்திலும் நிலநடுக்கத்திலும் கடவுள் தன்னை வெளிப்படுத்தவில்லை. மாறாக மிருதுவான தென்றலிலே தன்னைக்காட்டினார். இதன் மூலம் குழப்பத்தையும் பயத்தையும் நீக்கி அமைதி கொள். நான் உன்னுடன் இருக்கிறேன் என கடவுள் எலியாவிற்கு உணர்த்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நாள் முழுதும்  செய்த தன் மக்கள்பணியை முடித்துக்கொண்டு தனிமையான இடத்திற்கு சென்று கடவுளோடு அமைதியாக உறவாடி தான்  மீண்டும் பணிசெய்ய தனக்கு உரமேற்றுவதையும் காண்கின்றோம்.

அதே வேளையில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த சீடர்கள் மனக்குழப்பத்திலும் பயத்திலும் தங்களை நோக்கி வருவது இயேசு தான் என உணர இயலா நிலையையும் காண்கிறோம் . எனவே இன்று ஒரு முடிவெடுப்போம். எத்துணை பரபரப்பான நேரத்திலும், கவலையிலும், குழப்பத்திலும் கடவுளோடு சிலமணித்துளிகள் அமைதியாக உறவாடுவோம். அவரை அனுபவிப்போம். நம்பிக்கையையும் துணிவையும் அவர் தந்து நம்மோடு இருப்பார்.

நாம் வாழும் இந்த காலகட்டத்தில் எத்தனையோ குடும்பங்களில் பிரச்சனைகள் இருப்பதற்கு காரணம் அமைதியின்மையாகும். நான் ஒருமுறை திருச்சி மறைமாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு களப்பணி அனுபவத்திற்காக  அனுப்பப்பட்டிருந்தேன்.  குடும்பங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே ஒரு குடும்பத்தை நான் சந்தித்தேன். அக்குடும்பத்தில் எப்பொழுதுமே சண்டையும் சச்சரவும் நிறைந்திருந்தது. ஒரு அமைதியற்ற சூழல் இருந்தது.  நான் அவர்களோடு பேசிய பொழுது "எங்களுக்கு அமைதியே இல்லை" என்று என்று கூறினர். அப்போது நான் "உங்களுக்கு இவ்வளவு பணமும் வசதியும் இருந்தும் மகிழ்ச்சியும் அமைதியும் இல்லை. இதற்கு காரணம் நீங்கள் அமைதியில் வாழ்வதில்லை என்பதேயாகும். மேலும் கோபம் வரும்போது சிறிதுநேரம் அமைதியை கடைபிடிக்கவும். அப்பொழுது நிறைவான அமைதியை பெற்றுக்கொள்ள முடியும்  "என்று கூறினேன் . அன்று முதல் இந்நாள் வரை சண்டை என்று வந்துவிட்டால் அமைதியாக தங்களுடைய தவற்றை உணர்ந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட அன்புள்ள மக்களாகத்தான் வாழ இன்றைய வாசகங்கள் அறிவுறுத்துகின்றன. எனவே  நம்முடைய வாழ்விலும் எவ்வளவு பிரச்சனைகளும் இன்னல்களும் வந்தாலும் அவற்றை அமைதியோடு கண்ணோக்கி நோக்கி வாழும் பொழுது இறைவனின் அமைதியை அனுபவிக்க முடியும்.  நம் தாய் அன்னை மரியாவும் அமைதியின் சிகரமாக இருக்கின்றார். அவர் இயேசுவின் மண்ணக பிறப்பு முதல் விண்ணக பிறப்பு வரை அனைத்தையும் அறிந்திருந்தார். அமைதியில் இறைவனை கண்டவர் தான் அன்னை மரியா . புனிதர்களான புனித பிரான்சிஸ் அசிசியார், அவிலா தெரசா, புனித  அன்னை தெரசா  போன்ற  எண்ணற்ற புனிதர்கள் தனிமையில் அமைதியை கொண்டவர்களாக வாழ்ந்தனர். இன்றைய காலகட்டத்தில் கொரோனா என்ற  தீநுண்மியின் காரணமாக எண்ணற்ற மக்கள் அமைதி இழந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இன்றைய வாசகங்கள் ஆறுதலை வழங்குவதாக இருக்கின்றன. எனவே நம்முடைய வாழ்விலும் பல பிரச்சனைகளை நினைத்து அமைதி இழந்துவிடாமல், அமைதியோடு கடவுளிடம் தஞ்சம் புகுவோம். நம்முடைய பலவீனத்தின் வழியாக பிரச்சினைகள் வரும்பொழுது அமைதி காத்து அதை சரி செய்ய இறைவனை ஞானத்தை வேண்டுவோம். 

இறைவேண்டல்

அமைதியில் உறவாடும் தெய்வமே! எங்களுடைய பரபரப்பான அலுவல்களுக்கு மத்தியிலும், மனமும் உடலும் சோர்ந்த நிலையில் குழப்பத்தில் வாழ்ந்தாலும் உமக்கென்று சிறிதளவு நேரமாவது ஒதுக்கி அமைதியில் உம்மை அனுபவிக்க வரம் தாரும். அதன் மூலம் நாங்கள் நம்பிக்கையில் வேரூன்றி துணிவுடன் வாழ அருள் தாரும் ஆமென்

 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 0 =