Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்புடையோராய் இறையாட்சிக்கு அருகில் இருக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
பொதுக்காலத்தின் 31 ஆம் ஞாயிறு; I: இச: 6: 2-6; II : திபா: 18: 1-2, 2-3,46, 50; III: எபி: 7: 23-28; IV: மாற்: 12: 28-34
அன்பென்ற நதி மீது படகாகு அறியாதப் பேரின்ப கரைசேர்க்கும் என்கிறது ஒரு அருமையான பாடல் வரிகள். ஆம் அன்புதான் அனைத்திற்கும் ஆணிவேராய்த் திகழ்கின்றது. வாழ்க்கையின் அச்சாரமே அன்புதான். கடவுளிடம் கொண்டுள்ள அன்பே பக்தியாய், செபமாய் இறுதியில் முக்திக்கு வழிகாட்டுவதாய் உள்ளது. மனிதரிடம் கொண்டுள்ள அன்புதான் பாசமாய் நேசமாய் உறவாய் நட்பாய் அமைகிறது. இயற்கையிடம் கொண்டுள்ள அன்பு பயிராய் உணவாய் மழையாய் நல்வாழிடமாய் ஆகிறது. தன்னிடம் கொண்டுள்ள அன்பே நல்வாழ்வாய் ஆரோக்கியமாய் திறமையாய் வெற்றியாய் உருவெடுக்கிறது. அன்பில்லாமல் இவ்வுலகம் வெறுமையே. இவ்வாறு அன்பைப் பற்றி நாம் கூறிக்கொண்டே செல்லலாம். இன்றைய வாசகங்கள் நம்மை அன்புடையவர்களாக வாழ அழைக்கிறது.
இறையாட்சிக்குள் நுழைய நமக்கு அனுமதிச்சீட்டே அன்புதான்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் முதன்மையான கட்டளை எது என்ற கேள்வியை கேள்வியைக் கேட்ட மறைநூல் அறிஞருக்கு இயேசு சரியான விடையைக் கூறினார். அதாவது கடவுளை முழு மனதுடனும் ஆற்றலுடனும் அன்பு செய்ய வேண்டுமெனக் கூறினார். இயேசுவிடம் கேட்கப்பட்டது முதன்மையான கட்டளை மட்டும் தான். ஆனால் அவர் முதன்மையான கட்டளைக்குரிய விடையோடு நிறுத்திவிடவில்லை. மாறாக இரண்டாவதாகவும் ஒரு கட்டளை இருக்கிறது எனக் கூறி பிறரன்புக் கட்டளையைக் கூறுகிறார். அதைக் கேட்ட மறைநூல் வல்லுநர் இயேசு கூறியதை ஆமோதிக்கிறார். இறுதியாக இயேசு அம்மறைநூல் அறிஞரை நோக்கி " நீர் இறையாட்சியிலிருந்து வெகு தொலைவில் இல்லை" எனப் பாராட்டுகிறார்.
இயேசு தாம் பாடுபட்டு இறக்கும் முன்பு நமக்கெல்லாம் கொடுத்த கட்டளை அன்புக் கட்டளையே. அந்த அன்புக் கட்டளையை நாம் அறிவால் அறிந்திருந்தால் மட்டும் நாம் இறையட்சிக்கு அருகாமையில் இருக்கிறோம் என பொருளில்லை. மாறாக அக்கட்டளையை செயல்படுத்துவதாலேயே நாம் இறையாட்சியை நெருங்கிச் செல்ல முடியும் என்ற சிந்தனையைத்தான் இன்றைய திருவழிபாடு நமக்கு வழங்குகிறது.
இக்கட்டளையை நாம் செயல்படுத்துவது எவ்வாறு என நாம் பலமுறை சிந்தித்திருக்கிறோம். இருப்பினும் மீண்டுமாக நாம் நம்மை நினைவுபடுத்திக்கொள்வோம்.
* பிறரை முழுமனதுடன் அவர்களுடைய நிறை குறையோடு ஏற்றுக்கொள்வது
* தேவையில் இருப்போருக்கு நம்மாலான உதவியைச் செய்வது
* பிறரின் துன்பத்தில் உடனிருப்பது
* பிறர் நமக்கெதிராக செய்யும் குற்றங்களை மன்னிப்பது
* விட்டுக்கொடுப்பது
* கடுமையான சொற்களைத் தவிர்த்து அன்பான ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவது
போன்ற பிறரன்புச் செயல்களை நாம் கடைபிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களை செய்யத்தூண்டுவது நாம் கடவுளிடம் கொண்டுள்ள அன்பே. ஆம் பிறரன்புச் செயல்களால் நாம் கடவுளை நெருங்குகிறோம். கடவுளிடம் நெருங்குவதால் நாம் பிறரிடம் அன்புகொள்கிறோம். கடவுளோடும் பிறரோடும் கொண்டுள்ள அன்பால் நாம் இறையாட்சியை நோக்கிப் பயணிக்கின்றோம்.
எனவே அன்பு சகோதர சகோதரிகளே அன்போடு வாழக் கற்றுக்கொள்வோம்.
இறைவேண்டல்
அன்பே உருவான இறைவா! எம்மை அன்பால் நிரப்பும். நாங்கள் உம்மோடும் பிறரோடும் அன்பால் இணைந்து இறையாட்சியின் மக்களாய் வாழத் துணை செய்யும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment