Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அனைவரையும் வரவேற்கக் கற்றுக்கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 31 ஆம் வியாழன்; I: உரோ: 14: 7-12; II : திபா: 27: 1. 4. 13-14; III : லூக்: 15:1-10
ஒரு இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக ஒரு பெண்ணுடைய கணவர் ஒரு தவறு செய்ய நேர்ந்தது.
அதற்காக அவர் கைது செய்யப்பட்டு இரு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. அந்த இரு ஆண்டுகளில் குற்றம் செய்த அம்மனிதர் தன் தவறை எண்ணி வருந்தினார் . தண்டணைக் காலம் முடிந்து வீடு சென்றவுடன் தன் தவறுகளையெல்லாம் விட்டுவிட்டு புதிய மனிதனாக வாழ வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த அவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. ஆம் அவர் வெளிவந்து தன்வீட்டிற்குச் சென்ற போது அவருடைய மனைவி அவரை ஏற்றுக்கொள்ளவேயில்லை. மாறாக கதவுகளைப் பூட்டி வெளியே நிற்க வைத்துவிட்டார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். அக்கம் பக்கத்தில் வசிப்போர் முன் அவமானப்பட்டார். இறுதியில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வை முடித்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட்டார். தன்னுடைய தவறால் தன் சொந்தக் குடும்பமே அவரை ஒதுக்கிய நிலைக்குத் தள்ப்பட்டதால் தன் வாழ்வை முடித்துக்கொண்டார் அவர்.
உலகில் தவறே செய்யாத மனிதர் என்ற கேள்வியைக் கேட்டால் இறுதியில் நமக்குக் கிடைக்கும் விடை ஒன்றுமில்லை. ஏன் நம்மை நாமே உற்றுப்பார்த்தால் நாம் செய்த தவறுகளையெல்லாம் பெரிய பட்டியல் போட்டுக்கொள்ளலாம். எல்லாருமே தவறுகின்ற போதுகுறிப்பிட்ட சில மனிதர்களை மட்டும் பாவிகள் அல்லது குற்றவாளிகள் எனத் தீர்ப்பிட்டு நம் வாழ்வை விட்டு விலக்கி வைக்கிறோம். ஒருவேளை அவர்களால் நமக்கு ஆபத்து உண்டு என அறிவோமெனில் நம்மைத் தற்காத்துக் கொள்வது அவசியம்தான். ஆனால் தவறுகளை மாற்றி திருந்தி வாழ எண்ணுபவர்களையும் நாம் பாவிகள் என்ற பட்டம் கட்டி விலக்கி வைப்பது நாம் அவர்களை மீண்டும் மீண்டும் தண்டிப்பதற்குச் சமம்.
இத்தகைய மனநிலையை தன்னிடம் இருந்து முற்றிலும் ஒழித்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு. இன்றைய நற்செய்தியில் இயேசு பாவிகளையும் வரிதண்டுவோரையும் வரவேற்றார் என்ற செய்தியானது நமக்குத் தரப்பட்டுள்ளது. அத்தகைய நற்குணத்திற்காக யூதர்கள் இயேசுவைக் கடிந்து கொள்கின்றனர். ஆனால் இயேசுவோ அதைக் குறித்து கவலை கொள்ளவில்லை. தம்மையே பெரியவர்கள், உத்தமர்கள் எனத் தூக்கி வைத்துக்கொள்ளும் யூதர்களுக்கு பாவிகளாக தெரிந்த மக்கள் இயேசுவின் கண்களுக்கு கடவுளின் இரக்கத்தைப் பெற காத்திருப்பவர்களாக தென்பட்டனர். எனவே அவர்களை அன்புடன் வரவேற்றார் இயேசு.
காணாமல் போன மகன் பாவம் செய்தாலும் தன்னுடைய பாவத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் பொழுது அவரின் தந்தை மன்னித்து அன்போடு ஏற்றுக் கொள்கிறார். அவர் என் குற்றத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் தன் மகனின் மனமாற்றம் என்ற நிறையைக் கண்டு மன்னித்து அன்போடு வரவேற்றார். இதுதான் இயேசுவின் மனநிலை. மனிதர்களாகிய நாம் எவ்வளவு பாவம் செய்தாலும் நம்முடைய பலவீனத்தையும் குறைகளையும் நம் ஆண்டவர் இயேசு அறிந்தவராக இருக்கின்றார். இப்படிப்பட்ட ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது மனமாற்றம் நிறைந்த தூய வாழ்வு. தூய வாழ்வு உள்ளவர்கள் பிறரின் குறைகளை காணமாட்டார்கள். மாறாக, பிறரின் நிறைகளைக் கண்டுஅனைவரையும் அன்போடு வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள். எனவே நாம் வாழும் இந்த உலகத்தில் நிறைகளைக் கண்டு அனைவரையும் நம் சகோதர சகோதரிகளாக நம் வாழ்வில் வரவேற்று அகமகிழ முயற்சி செய்வோம். அப்பொழுதுதான் வாழ்வின் உண்மையான நிறைவை சுவைக்க முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் இயேசு நிறைக் குறைகளோடு அனைவரையும் ஏற்றுக்கொண்டு வழிநடத்தியதைப் போல, நாங்களும் எங்கள் அன்றாட வாழ்வில் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு வரவேற்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment