Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அனுபவப்பூர்வமாய் நம்பிக்கையை வளர்ப்போம்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
I: தி. ப : 5: 12-16
II : தி பா:118: 2-4. 22-24. 25-27a
III: திருவெளிப்பாடு 1: 9-11a, 12-13, 17-19
IV: யோவான் 20: 19-31
கோவிலுக்கு சென்று வந்துகொண்டிருந்த ஒரு இளைஞனிடம் ஒரு அறிவியல் அறிஞர் கேட்டார் "தம்பி என்ன இந்தப்பக்கம் என்று? " . அப்போது அந்த இளைஞன் "நான் என்னுடைய படிப்பை நல்லமுறையில் முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அதனால் கடவுளுக்கு நன்றி செலுத்த கோவிலுக்கு வந்தேன் என பதிலளித்தான்." அந்த அறிஞர் திடீரென சிரிக்க ஆரம்பித்தார். " முயற்சி செய்து படித்தது நீ. ஏன் கடவுளுக்கு நன்றி. முதலில் கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. " என்றார். ஏன் அவ்வாறு கூறுகிறார் என்பதை அந்த இளைஞன் வினவ கடவுளைக் காண முடியாது. அவர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே அவர் இல்லை என பதிலளித்தார். அந்த இளைஞன் இந்த விஞ்ஞானிக்கு பாடம் கற்பிக்க எண்ணினான். உடனே அவரிடம் " உங்களுக்கும் தான் மூளை இல்லை. ஏனென்றால் உங்கள் மூளையை என்னால் பார்க்க முடியவில்லை " என்று கூறி அவரைக் கடந்து சென்றான். அந்த அறிவியல் அறிஞர் வாயடைத்துப் போனார்.
ஒரு திரைப்படப்பாடல் வரிகள் இவ்வாறு கூறுகின்றன " கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்று. கடவுளை இந்த உலகில் யாரும் பார்த்ததில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இந்த உலகம் இயங்குவதில்லை. அவனின்றி அணுவும் அசையாது என்பதுதான் நம் நம்பிக்கை. கடவுள் கண்களால் காணப்படக்கூடியவர் அல்ல. நம் மனதால் உணரப்படக்கூடியவர்.அவருடைய அன்பையும் அருளையும் மனதார அனுபவித்தவர்கள் மட்டுமே அவரைக் காணமலேயே நம்புவார்கள். ஆம் ஆண்டவரை மனதால் அனுபவித்து உணர்ந்து அன்பு செய்யவே நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கான ஒரு அழைப்பாக இருக்கிறது.
இயேசு உயிர்த்த பின் தம் சீடர்களுக்கு பலமுறை காட்சி தருகிறார் என எல்லா நற்செய்தியாளர்களுமே கூறுகின்றனர். கல்லறையில் மகதலா மரியா மற்றும் சில பெண்களுக்கு காட்சி தந்தார். எம்மாவூஸ் பயணம் சென்ற சீடர்களுக்கு காட்சி தந்தார். பின் வீட்டிலே கூடியிருந்த சீடர்களுக்கு காட்சி தந்து தான் ஆவியல்ல என்று கூறி அதை எண்பிக்க கைகளையும் கால்களையும் காட்டியதோடு உணவை உண்டு காட்டினார். மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் காட்சி தந்தார். இப்படி இத்தனை முறை காட்சி தந்த பின்தான் அவர்கள் மெதுவாக இயேசுவை நம்ப ஆரம்பித்தனர். அத்தனை தடவையும் தோமா சீடர்களோடு இல்லை.
ஒருபுறம் மற்ற சீடர்களைப் போலவே தான் தோமாவும் நம்ப இயலாமல் சற்று திணணறினார் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.
மற்றொரு புறம் எல்லாருக்கும் உயிர்த்தபின் இயேசு காட்சி கொடுத்துவிட்டாரே. ஆனால் தனக்கு மட்டும் கொடுக்கவில்லையே என்ற ஏக்கமாகக் கூட இருக்கலாம். எனவே பொதுவாக பலரும் அவரை நம்பிக்கையில் குன்றியவர் என கூறுவதுண்டு. ஆயினும் மற்ற சீடர்கள் அறிக்கையிடாத ஒன்றை தோமா அறிக்கையிட்டார். தனக்கு காட்சி தந்து தன் கைகளையும் கால்களையும் ஆணிதுளைத்த இடத்தில் தொட்டுபார் என்று இயேசு கூறிய மறுநிமிடம் " என் ஆண்டவரே என் கடவுளே" என தோமா அறிக்கையிட்டார். இது அவர் இயேசுவைக் கண்ணால் கண்டதால் மட்டுமல்ல. மாறாக அவரை அனுபவித்ததால்தான் சாத்தியமாயிற்று எனக் கூறினால் அது மிகையாது.
தானும் இயேசுவைக் காண வேண்டும், அவர் காயத் தழும்புகளைத் தொட வேண்டும் என அவர் சீடகளிடம்தானே கூறினார். இயேசுவிடம் அல்ல. ஆனால் அவருடைய அந்த ஏக்கத்தை இயேசு எவ்வாறு அறிந்தார்? ஆம். நம் உள்ளத்து எண்ணங்களை அறிபவர் ஆண்டவர் மட்டுமே என்பதை தோமா அனுபவப்பூர்வமாய் உணர்ந்தார். "என் ஆண்டவரே என் கடவுளே "என அறிக்கையிடவும் செய்தார்.
அன்புக்குரியவர்களே கண்ணால் கண்டதால் நம்பியவரைவிட காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர் என இயேசு கூறுவதன் உண்மைப்பொருள் இதுதான். நாம் நம் கடவுளை ,நம் ஆண்டவரை மனதால் அனுபவித்து நம் நம்பிக்கையை வளர்க்கவேண்டும். எல்லாச் சூழலிலும் ஆண்டவர் என்னருகில் இருக்கிறார்,என்னுடன் நடக்கிறார். நான் இருப்பதும் இயங்குவதும் அவரால்தான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, நாம் சிறுவயதில் கற்றறிந்த மறையல்வியாலோ அல்லது நம் பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்து வளர்த்ததாலோ மட்டும் வரக்கூடாது. நம்முடைய சொந்த அனுபவங்களைத் திருப்பிப் பார்த்து அவற்றில் இறைவனை ஆழமாக உணர்ந்ததால் வரவேண்டும். அந்த அனுபவம் நம்மை " என் ஆண்டவரே என் தேவனே " என நிச்சயம் அறிக்கையிடச் செய்யும். அனுபவப்பூர்வமாய் நம்பிக்கையை வளர்க்கத் தயாரா?
இறைவேண்டல்
எங்கள் ஆண்டவரே!எங்கள் கடவுளே!
நாங்கள் உம்மை வெறும் கண்களால் அல்ல, அனுபவப்பூர்வமாய் அறிந்து உணர்ந்து நம்பிக்கையில் வளர்ந்து உலகெங்கும் அறிக்கையிட வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment