அச்சத்தைக் களைவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Refelction


பொதுக்காலத்தின் பதினான்காம் சனி; I: தொநூ: 49: 29-32, 50: 15-26; II  : தி.பா: 105: 1-2, 3-4, 6-7; III:  மத்: 10: 24-33

ஒரு கல்லூரியில் திறமையான மாணவர் படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு  திறமைகள் பல இருந்தும் அவர் வெளிப்படுத்தாமல் இருந்தார். அதற்கு முக்கிய காரணம் அவரின் அச்சம் நிறைந்த மனநிலையாகும்.  இதனைக் கண்ட அவரின் பேராசிரியர் அந்த மாணவரை அழைத்துச் சென்று அச்சத்தைப் போக்கி தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டினார். அவருடைய வெற்றிக்குத் தடையாக இருப்பது அச்சம் தான் என்பதைச் சுட்டிக்காட்டினார். தினமும் பயிற்சி கொடுத்து அந்த மாணவரின் திறமையை அறிந்து வளர்த்துக்கொள்ள  வழிகாட்டினார். இறுதியில் அந்த மாணவர் மிகச்சிறந்த பேச்சாளராக மாறினார்.

நம் வாழ்வில் அச்சத்தை அகற்றி துணிவோடு வாழும் பொழுது வாழ்வில் பல சாதனைகளைப் புரிய முடியும். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகள் நம்மை துணிவுமிக்கவர்களாக வாழ   அழைப்பு விடுக்கின்றன.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்கு ஆதரவாக சமூக மனிதநேயப் பணிகளை செய்த அருள்பணி ஸ்டேன் சுவாமி துணிவு நிறைந்த வாழ்வுக்கு முன்னுதாரணம். அவர் சமூக அநீதிகளைக் கண்டு அஞ்சாமல் துணிவோடு தன்னுடைய நற்பணிகளை செய்தார். இன்று இந்த உலகத்தில் அவர் இல்லை என்றாலும் அவர் செய்த பணிகளும் விட்டுச்சென்ற மதிப்பீடுகளும் இன்னும் உயிரோட்டம்  நிறைந்ததாக தான் இருக்கின்றது.

இயேசு சீடர்களை நோக்கி, 'சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்.
எனவே அஞ்சாதிருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:31). இந்த இறைவசனம் மூலம் மனிதர்களாகிய நம்மை எந்த அளவுக்கு கடவுள் அன்பு செய்கிறார் என்பது பற்றியும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியும் இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். உடலை கொல்பவர்களுக்காக அஞ்சாமல், ஆன்மாவை கொல்பவர்களுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என்ற சிந்தனையை இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். உலக வாழ்வு என்பது இறைவனை நோக்கிய உன்னதமான பயணம். இந்த பயணத்தில் என்றும் நிலையான ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க இயேசு அழைப்பு விடுத்துள்ளார்.

புனித சவேரியார்  மிகப்பெரிய அறிவாளி. பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவருக்கு பேரும் புகழும் பணமும் இருந்தன. ஆனால் அவை அனைத்துமே நிலையற்றது ஆன்மாவை காப்பதுதான் நிலையானது என்பதை புரிந்து கொண்டவுடன் அனைத்தையும் துறந்தார். தானும் இவ்வுலக  மக்கள் அனைவரும்   ஆன்மாவை காத்துக்கொள்ள இயேசுவின் நற்செய்திப் பணியை புனித பவுலைப் போல   மிகச் சிறப்பாக செய்தார். அதிலும் குறிப்பாக நம்முடைய இந்திய நாட்டில் சிறப்பான நற்செய்தி பணியை செய்தார்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இவ்வுலகம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தடைகளுக்கும் இடையூறுகளுக்கும் சோதனைகளுக்கும்   நாம் அஞ்சாமல்,  துணிவோடு கடவுளுக்கு மட்டும் அஞ்சி நம்முடைய ஆன்மாவை காத்துக்கொள்ள முயற்சி செய்வோம். வாழுகின்ற வாழ்க்கையில் முடிந்தவரை நம்மாலான நல்ல செயல்களைச் செய்து இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளுக்கு சான்று பகர்வோம்.   நாம் கடவுளுக்கு மட்டும் அஞ்சுகின்ற பொழுது கடவுள் நம்மை எந்த ஒரு தீங்கும் நம்மை  அணுகாதவாறு  பாதுகாப்பார். எனவே இவ்வுலகம் சார்ந்தவர்களுக்கு      அஞ்சாமல் துணிவோடு இயேசுவின் இறையாட்சி பணியினை செய்ய புதியதோர் பயணம் செய்வோம். தேவையற்ற இவ்வுலகம் சார்ந்த அச்சங்களைக் களைந்து, இறையாட்சியின் மதிப்பீடுகளை   வாழ தயாரா!

இறைவேண்டல் :

வெற்றியின் நாயகனே எம் இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் அச்சங்களைக் களைந்து உம்முடைய  நற்செய்தி மதிப்பீடுகளுக்குச் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

2 + 17 =