Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பிலிப்பீன்சில் தொடர் கொலைகள் நிறுத்தப்படும்வரை இரவு 8 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க உத்தரவு
பிலிப்பீன்சின் சான் கார்லோஸ் மறைமாவட்டத்தில் இடம்பெறும் தொடர் கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அக்கொலைகள் நிறுத்தப்படும்வரை, ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்கப்படுமாறு உத்தரவிட்டுள்ளார், அம்மறைமாவட்ட ஆயர் ஜெரார்டோ அல்மினாசா.
ஜூலை 24, இப்புதனன்று, நெகுரோஸ் ஓரியண்டல் மாநிலத்தில் பலர் கொல்லப்பட்டதையடுத்து, இவ்வாறு ஆணையிட்டுள்ள ஆயர் அல்மினாசா அவர்கள், ஒன்றிப்பு மற்றும் செப உணர்வில், நீதிக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, பங்குத்தளங்களும், மறைபரப்புத்தளங்களும், துறவு இல்லங்களும், ஆலய மணிகளை ஒலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிவற்ற கொலைகள், மனிதாபிமானமற்றவை என்பதை, ஆலய மணிகளின் ஓசை நமக்கு நினைவுபடுத்தட்டும் என்றும், ஆலய மணி ஓசைகள், குற்றவாளிகள் மனம் மாற செபிக்க வேண்டும் என்பதற்கு அழைப்பு விடுக்கின்றன என்றும், ஆயர் அல்மினாசா அவர்கள் கூறினார்.
நெகுரோஸ் மாநிலத்தில், அமைதியும், சட்டஒழுங்குமுறைகளும் எதுவுமே இல்லை என்பதையே இந்தக் கொலைகள் காட்டுகின்றன என்றுரைத்துள்ள ஆயர் அல்மினாசா அவர்கள், கொலைகள் தொடர்ந்து இடம்பெறுவது நிறுத்தப்பட, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு அழைப்பு விடுப்போம் எனவும், மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை 23ம் தேதி மனித உரிமை வழக்கறிஞர் அந்தோணி டிரினிடாட் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து, ஆயர் மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட அடுத்த நாள், இந்தக் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.
(நன்றி: யுகேன், வத்திக்கான் நியூஸ்)
Add new comment